திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டை பிரதேசத்தில் பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளை பௌத்த பிக்குகள் தலைமையிலான குழுவினர் நேற்றைய தினம் நில அளவீடு செய்துள்ளதாகவும், இது காணிகளை அபகரிப்பதற்கான திட்டமிட்ட முயற்சி எனவும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் தெரிவித்துள்ளார்.
நேற்றுக் காலை 10.30 மணியளவில் புல்மோட்டை பகுதிக்குள் பிக்குவின் தலைமையில் நில அளவை அதிகாரிகள் மற்றும் குச்சவெளி பிரதேச செயலக காணி உத்தியோகத்தர் உள்ளிட்ட சிலர் குறித்த பகுதிகளை இனம் கண்டு அறிக்கை சமர்பிப்பதற்காக வருகை தந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இக்காணிகளை சில மாதங்களுக்கு முன்னரும் புனித பூமிக்காக அளவிட முற்பட்டபோது பொது பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து அம்முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே தற்போது மீண்டும் பிக்குகள் தலைமையில் வருகைதந்த அதிகாரிகள் இக்காணிகளை அளவிடவும் அறிக்கையிடவும் முற்பட்டுள்ளனர்.
புல்மோட்டை பிரதேசத்திலுள்ள பொது மக்களின் காணிகளை உள்ளடக்கியுள்ள சாந்திபுர விகாரை, கந்தசாமி மலை, தென்னைமரவாடி, நாகலென விகாரை, அரிசிமலை, யான் ஓயா, அத்தனாசி, மிஹிந்து லேன், சப்த நாக பம்ப, மீ சத்தர்ம பிதஹி ஆகிய 9 விகாரைகளுக்கான இடங்களை அளவிட 2013 இல் உத்தரவிடப்பட்டதாகவும் எனினும் காணிகளை அளவிடாது நில அளவை திணைக்களம் இழுத்தடிப்பதாகவும் புல்மோட்டை பகுதியைச் சேர்ந்த பௌத்த பிக்கு சில பெரும்பான்மை இன பாராளுமன்ற உறுப்பினர்களிடம் முறையிட்டிருந்தார்.
இது தொடர்பில் பாராளுமன்ற விசேட குழுவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து சபாநாயகர் இந் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள உத்தரவிட்டதாகவும் இதற்கமையவே தற்போது பிக்கு தலைமையில் அதிகாரிகள் வருகை தந்துள்ளதாகவும் ஆர்.எம். அன்வர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கிடையில் இந்த விவகாரம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமை தான் நேரில் சந்தித்து முறையிட்டுள்ளதாகவும் அன்வர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
”பௌத்த விகாரைக்கான காணியை அளவிடுவதில் எமக்கு ஆட்சேபனையில்லை. மாறாக பொதுமக்களின் காணிகளை புனித பூமி என்ற போர்வையில் அளவிடுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த விடயத்தில் அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் கட்சி பேதமின்றி செயற்பட வேண்டும்” என்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அன்வர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
-vidivelli