மக்கள் போராட்டம் காரணமாக 2011 ஆண்டு தொடக்கம் துனிசியா, எகிப்து, லிபியா, யெமன், அல்ஜீரியா, சூடான் ஆகிய நாடுகளில் நீண்ட காலம் பதவி வகித்த அரபுத் தலைவர்கள் தமது பதவிகளை இழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த வியாழக்கிழமை சூடான் ஜனாதிபதி ஒமர் அல்-பஷீர் பதவி நீக்கம் செய்யப்பட்ட சம்பவத்துடன் கடந்த 10 ஆண்டுகளுக்குள் தமது தலைவர்கள் பதவி விலக வேண்டுமென்ற மக்கள் போராட்ட அழுத்தம் காரணமாக பதவியிழந்த ஆறாவது அரபுத் தலைவராக அவர் பதிவாகியுள்ளார்.
இதேவேளை அரபு வசந்தத்தின் அடுத்த கட்டமாக இவ்வாண்டு அல்ஜீரிய ஜனாதிபதி அப்தெல் அஸீஸ் போட்விலிக்கா பல வாரகால மக்கள் ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து இராஜினாமா செய்தார்.
கடந்த 2019 பெப்ரவரி மாதம் அல்ஜீரியாவின் ஆளும் தேசிய விடுதலை முன்னணி 1999 ஆம் ஆண்டிலிருந்து அல்ஜீரியாவை ஆட்சி செய்யும் 82 வயதான போட்விலிக்காவை ஐந்தாவது தடவையாக பதவிக் காலத்திற்கு பிரேரித்தது.
ஐந்தாவது தடவையாக பதவி வகிப்பதற்கு மேற்கொண்ட தீர்மானத்தை அடுத்து இடம்பெற்ற தொடர் போராட்டங்கள் காரணமாக அல்ஜீரிய ஜனாதிபதி அப்தெல்அஸீஸ் போட்விலிக்கா இராஜினாமா செய்ததாக அரச ஊடகம் அறிவித்தது.
தொடர்ச்சியான மக்கள் போராட்டம் காரணமாக நீண்ட காலம் ஜனாதிபதியாக பதவி வகித்த அப்தெல்அஸீஸ் போட்விலிக்கா இராஜினாமா செய்ததையடுத்து அப்தெல்காதர் பென்சலேஹ் இடைக்கால ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார்.
90 நாட்களுக்கு வெளிப்படைத் தன்மையுடையுதும் நியாயமானதுமான தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அல்ஜீரியாவின் இடைக்கால ஜனாதிபதி அப்தெல்காதர் பென்சலேஹ் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தின் அமர்வுகள் முடிவடைந்ததை அடுத்து இடைக்கால ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட பென்சலேஹ் 90 நாட்களுக்கு தேர்தலொன்றை நடத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதே எனது பிரதான பணியாகும் எனத் தெரிவித்தார்.
சூடானில் ஒமர் அல்-பஷீர் பதவியிலிருந்து அகற்றப்பட்டுள்ளதாகவும் இரு வருட நிலைமாறுகால அரசாங்கம் இராணுவத்தினால் கண்காணிக்கப்படும் எனவும் கடந்த வியாழக்கிழமை சூடான் இராணுவம் அறிவித்தது.
2005 ஆம் ஆண்டு அரசியல் யாப்பை இடைநிறுத்தம் செய்வதாக அறிவித்த இராணுவம் நாடு தழுவியரீதியில் மூன்று மாத கால அவசரகால நிலை அமுல்படுத்தப்படுவதாகவும் அறிவித்தது.
இது தவிர சூடானிய ஜனாதிபதி செயற்பணி, பாராளுமன்றம் மற்றும் அமைச்சரவை ஆகியன கலைக்கப்படுவதாகவும் இராணுவம் அறிவித்துள்ளது.
1989 ஆம் ஆண்டு தொடக்கம் சூடானை ஆட்சி செய்து வரும் ஒமர் அல்-பஷீர் பதவி விலகுமாறு கோரி கடந்த டிசம்பர் மாதம் தொடக்கம் நாடு முழுவதும் மக்களால் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
vidivelli