2019 ஆம் ஆண்டு தேர்தல் வருடம் என ஏற்கனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இவ்வருடம் மாகாணசபைத் தேர்தல், பொதுத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் எனத் தேர்தல்கள் வரிசையாகக் காத்திருக்கின்றன.
எந்தத் தேர்தலை முதலில் நடத்துவது என இன்று சர்ச்சை கிளம்பியுள்ளது. மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குள்ள சட்ட ரீதியான தடைகளை நீக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். இதேவேளை, சட்ட ரீதியான தடைகளை நீக்குவதற்தாக எல்லை நிர்ணய மீளாய்வுக் குழுவின் அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்குமாறு மீளாய்வுக்குழுவின் தலைவரான பிரதமருக்கும் கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார்.
மாகாணசபைத் தேர்தலுக்கு முன்பு ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டுமென்ற கருத்தும் தற்போது பரவலாக முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் மீண்டும் உயர்நீதிமன்றத்தின் அபிப்பிராயத்தைப் பெறுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் பதவிக்காலம் எப்போது முற்றுப் பெறுகிறது என்பது தொடர்பில் தற்போது சர்ச்சை உருவாகியுள்ளது. ஜனாதிபதியின் பதவிக்காலம் 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21 ஆம் திகதியே முடிவடைகின்றது என நாம் கருதுகிறோம். அதனால் உயர்நீதிமன்றின் ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளவுள்ளோம். உயர்நீதிமன்றம் இதனை உறுதி செய்தால் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பு பொதுத் தேர்தலை நடத்துவதற்கு எண்ணியுள்ளோம் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் ஆட்சிக்காலம் 5 வருடங்களா? அல்லது 6 வருடங்களா? என்பது பற்றி உயர்நீதிமன்றின் ஆலோசனையைக் கோரினோம். 5 ஆண்டுகள் என உயர்நீதிமன்றம் தெரிவித்தது. ஆனால் பதவிக்காலம் 5 ஆண்டுகள் எப்போது ஆரம்பித்து எப்போது முடிகிறது என்பதில் எமக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 19 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டு அதற்கு சபாநாயகர் 2015 ஜூன் 21 ஆம் திகதியே கையொப்பமிட்டார். எனவே அன்றிலிருந்தே அவரது 5 ஆண்டு பதவிக்காலம் கணிக்கப்பட வேண்டும். அதனால் 2020 ஜூன் மாதம் 21 ஆம் திகதி வரை அவர் பதவியில் இருக்க முடியும் என்பதே எமது நிலைப்பாடு என தயாசிறி ஜயசேகர விளக்கமளித்துள்ளார்.
ஆனால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகரவின் கூற்றினை அக்கட்சியின் இளைஞர் அணியின் தலைவர் சாந்த பண்டார ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் ஆலோசனையைக் கோருவதற்கு தீர்மானிக்கப்படவில்லை. ஜனாதிபதியே உயர்நீதிமன்றினை நாட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதே கருத்தினையே பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபாலவும் தெரிவித்துள்ளார். தயாசிறி ஜயசேகரவின் கருத்து அவரது தனிப்பட்ட கருத்தாகும் எனவும் கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகரவின் கருத்தை பொதுஜன பெரமுன வன்மையாகக் கண்டித்துள்ளது. ஜனாதிபதியின் பதவிக்காலத்தை நீடிப்பதற்கு எடுக்கும் முயற்சி அரசியலமைப்பினை மீறும் செயற்பாடாகும். இம்முயற்சி மூலம் ஜனாதிபதித் தேர்தலை கால தாமதப்படுத்துவதற்கு சுதந்திரக்கட்சி வியூகம் வகுத்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய இரு கட்சிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஏற்கனவே உயர்நீதிமன்றம் 19 ஆவது திருத்தத்தின் 129 ஆவது பிரிவின்படி ஜனாதிபதி 5 வருடமே பதவிவகிக்க முடியும் எனத் தெரிவித்திருக்கிற நிலையில் தற்போது பதவிக்காலத்தின் ஆரம்பம் தொடர்பில் நீதிமன்றினை நாடவுள்ளமை ஜனாதிபதித் தேர்தலை கால தாமதப்படுத்துவற்காகவே என எண்ணத் தோன்றுகிறது.
7 மாகாணசபைகளின் பதவிக்காலம் முற்றுப்பெற்றுள்ள நிலையில் தொடர்ந்தும் மாகாணசபைத் தேர்தல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இதேவேளை, இவ்வருட இறுதியில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என எதிர்வு கூறப்பட்டது. ஆனால் அதனைப் பிற்படுத்தும் முயற்சிகளை சுதந்திரக்கட்சி முன்னெடுக்கிறதா என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது.
இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தல் இவ்வருட இறுதியில் நடத்தப்பட வேண்டும் என்பதே மக்களின் நிலைப்பாடாகும்.
vidivelli