மையவாடி காணியிலிருந்து மதுபான நிலையத்தை அகற்றுக
கொழும்பில் ஆர்ப்பாட்டம் ; நடவடிக்கை எடுப்பதாக எம்.பி உறுதியளிப்பு
ஏ.ஆர்.ஏ.பரீல்
மாளிகாவத்தை மையவாடிக்கு சொந்தமான காணியில் இயங்கிவரும் மதுபானசாலையை அவ்விடத்திலிருந்து அகற்றி வேறு இடத்துக்கு இடமாற்றுவதற்கான சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் அது தொடர்பாக கொழும்பு பெரிய பள்ளிவாசலிடமிருந்து கடிதம் ஒன்றினையும் கோரினார்.
கடந்த வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின்பு மாளிகாவத்தை மையவாடி காணியில் இயங்கிவரும் மதுபானசாலை, வாகன சேவை நிலையம், வர்த்தக நிலையங்கள், நிறுவனங்கள் என்பவற்றை வெளியேற்றுமாறு கோரி ஆர்ப்பாட்டமொன்று மையவாடிக்கு முன்னால் நடைபெற்றது. முஸ்லிம்களின் உரிமைகளுக்கான அமைப்பு இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.
ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்காரும் கலந்து கொண்டு அங்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
‘மாளிகாவத்தை மையவாடி காணியில் இயங்கிவரும் வர்த்தக நிலையங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக தற்போது நீதிமன்றில் விசாரணையின் கீழ் உள்ள வழக்குகளைத் துரிதப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அவர் உறுதியளித்தார். ஆர்ப்பாட்டத்தில் சுமார் 150 பேர் கலந்து கொண்டனர்.
மாளிகாவத்தை மையவாடிக் காணி கொழும்பு பெரிய பள்ளிவாசலின் நிர்வாகத்தின் கீழேயே இருக்கிறது. அங்கு அமைந்துள்ள வர்த்தக நிலையங்கள், நிறுவனங்கள் தொடர்ந்தும் மாத வாடகையாக ஆயிரம், இரண்டாயிரம் ரூபாய்களையே வழங்கி வருவதாகவும் ஒரு இலட்சம் ரூபாய் வாடகை வழங்க வேண்டிய நிறுவனங்கள் சில ஆயிரம் ரூபாய்களே வழங்கி வருவதாகவும் முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பின் தலைவர் ஐ.என்.எம். மிப்லால் தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் சிரேஷ்ட சட்டத்தரணி ருஸ்தி ஹபீபும் கலந்து கொண்டார்.
-vidivelli