- எஸ்.எம். அன்ஸார்
இலங்கையில் வில்பத்து, யால, சிங்கராஜவனம் போன்ற வனங்கள் காணப்படுகின்றன. தேசிய பூங்கா என அழைக்கப்படும் வில்பத்துவின் 131667 ஹெக்டயர் பரப்பளவையுடைய நிலம் பிரித்தானிய அரசினால் 25.02.1938ஆம் ஆண்டு விலங்குகள் சரணாலயமாகப் பிரகடனப்படுத்தப்படுவதற்கு முன் யாழ்ப்பாணத்தின் வடபகுதிக்குச் செல்லும் பிரதான போக்குவரத்துப் பாதையாக இருந்தது. அப்போது அவ்வீதி புத்தளம்– யாழ்ப்பாணம் வீதி என்றே அழைக்கப்பட்டு வந்தது. பின்னர் புத்தளம் –மன்னார் வீதி என அழைக்கப்பட்டு வருகிறது.
கரையோர போக்குவரத்து வீதியாக இருந்த அவ்வீதி மூடப்பட்டதன் பின், வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலான இணைப்பும் பிணைப்பும் துண்டிக்கப்பட்டது. பாரம்பரிய கரையோர வீதியான அது மூடப்பட்டதன் பின், வடபகுதி மக்கள் தென்பகுதிக்கும், தென்பகுதி மக்கள் வடபகுதிக்கும் இலகுவாகப் பயணிப்பது தடைப்பட்டதன் காரணமாக, இருபகுதி மக்களுக்குமான உறவுகள் பாதிக்கப்பட்டன.
வட பகுதியின் முக்கிய நகரங்களான யாழ்ப்பாணம், மன்னார் போன்ற மாவட்டங்களில் வசித்த மக்கள் தங்களது பல்வேறு தேவைகளின் நிமித்தம் புத்தளம், கொழும்பு, காலி போன்ற தென் பகுதி நகரங்களுக்கு மதவாச்சி, அனுராதபுரம் போன்ற நகரங்களைச் சுற்றியே செல்ல வேண்டியேற்பட்டது. புத்தளம் – மன்னார் வீதிக்கூடாக மன்னாரைச் சென்றடையும் தூரம் 120கி.மீ. ஆக இருக்கும் அதேவேளை, புத்தளம், அனுராதபுரம், மதவாச்சியூடாக மன்னாரைச் சென்றடையும் தூரம் 190கி.மீ. ஆகும். யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா, அனுராதபுரம் ஊடாகப் புத்தளத்தையடையும் தூரம் 275கி.மீ. ஆக இருக்கும் அதேவேளை, யாழ்ப்பாணத்திலிருந்து பூநகரி, உயிலங்குளம், இலவங்குளம் ஊடாக புத்தளத்தை அடையும் தூரம் 215கி.மீ ஆகும்.
பிரித்தானிய அரசின் வில்பத்து பிரகடனத்துக்கு முன் கொழும்பையும், யாழ்ப்பாணத்தையும் இணைக்கும் பிரதான வீதியாக புத்தளத்திலிருந்து இலவங்குளம், மறிச்சுக்கட்டி, சிலாவத்துறை, அரிப்பு, நானாட்டான், உயிலங்குளம், விடத்தல்தீவு, பூநகரி வழியாக யாழ்நகர் செல்லும் வீதியே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
கி.பி.1412 – 1467 வரையிலான காலப்பகுதியில் ஆட்சி செய்த கோட்டை மன்னன் 6ஆம் பராக்கிரமபாகுவின் படை மன்னாரையும், யாழ்ப்பாணத்தையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக, வளர்ப்பு மகன் சபுமல் குமார ( செம்பகப்பெருமாள் ) தலைமையில் மேற்குறிப்பிட்ட பாதை வழியே தனது சேனையை அனுப்பி வெற்றி வாகை சூடியதை வரலாறுகளில் காணலாம். கி.பி. 1505இல் இலங்கையின் தென்பகுதிக் கரையோரங்களைக் கைப்பற்றிய போர்த்துக்கீசர், அக்கால கட்டத்தில் இலங்கையின் வர்த்தகத் துறையை கட்டுப்பாட்டில் வைத்திருந்த முஸ்லிம்கள் மீது கொடுமைகள் புரிந்தனர். இதைக் கேள்வியுற்ற யாழ்ப்பாண முஸ்லிம்கள் காதர் வாலாவின் தலைமையில் படை திரண்டு யாழிலிருந்து தெற்கு நோக்கிய தமது பயணத்தை பூநகரி, விடத்தல்தீவு, முருங்கன் வழியாக சிலாவத்துறை வந்த சமயம், போர்த்துக்கீசப் படை தெற்கிலிருந்து புத்தளம், இலவங்குளம், மறிச்சுக்கட்டி வழியாக சிலாவத்துறை அடைந்த சமயம், இரு படையினரும் சிலாவத்துறையில் மோதிக்கொண்டனர்.
அந்த இரு நிகழ்வுகளும் 500 வருடங்களுக்கும் மேலாக வடக்கினதும் தெற்கினதும் பிரதான போக்குவரத்துப் பாதையாக அப்பாதையே இருந்துள்ளது என்பதற்கான ஆணித்தரமான சான்றுகளாகும். அத்துடன் புத்தளம் மக்களின் குடியிருப்புப் பிரசேங்களில் ஒன்றான புத்தளம் – இலவங்குளம் வீதியில் நூறு வருடங்களுக்கு முன் வசித்த மக்களின் காணி உறுதிப் பத்திரங்களில் யாழ்ப்பாண வீதி என குறிக்கப்பட்டதையும் அவதானிக்கலாம்.
இலவங்குளம் கலாவாவியிலிருந்து மோதரகம் ஆறு வரையிலான வில்பத்துப் பகுதி விலங்குகளின் சரணாலயமாக ஆகுவதற்கு முன், பொற்சமவெளி(Golden Plain)எனவும் பொற்றானியத்தின் பூமி(Land Of The Golden Grain) எனவும் அழைக்கப்படுவதற்கான பிரதான காரணம் நீர்த்தேக்கங்களும், குளங்களும், வில்லுகளும் நீரால் நிறைந்து தானியங்களை உற்பத்தி செய்யும் வளமிக்க இடமாகக் காணப்பட்டதேயாகும். இலவங்குளம், பொன்பரப்பி, குதிரைமலை, பூக்குளம், மறிச்சுக்கட்டி, சிலாவத்துறை, மாதோட்டம் போன்ற இடங்கள் நெற்றானியத்தாலும், கடலில் பெறப்பட்ட முத்துக்களாலும் பெரும் புகழ் பெற்றிருந்தன. ‘பட்டினப் பாலை ’யிலே வரும் தென் கடல் முத்தும், ஈழத்துணவும் என்னும் வரிகள் மன்னார் சிலாவத்துறைக் கடலிலே பெறப்பட்ட முத்துக்களையும், பொற்றானியத்தின் பூமியில் பெறப்பட்ட நெற்றானியங்களும் தமிழகத் துறைமுகத்தை அடைந்ததைக் குறிப்பனவாகும்.
மோதரகம் ஆற்றிலிருந்து மகாஓயா வரையான 157கி.மீ. தூரம் கொண்ட வடக்குத் தெற்கான புத்தளம் மாவட்ட எல்லையின் வில்பத்து வனாந்தரத்தினுள் பூக்குளம், பளுக்காத்துறை போன்ற மீன்பிடிக் கிராமங்களில் இன்றும் மக்கள் வசித்து வருகின்றனர். பூக்குளம் கிராமத்திற்குத் தனியான கிராம உத்தியோகத்தர், பாடசாலை, மத வழிபாட்டுத்தலம், கடைகள் போன்றனவும் இருப்பதைக் காணலாம்.
கத்தோலிக்கரின் முக்கிய வழிபாட்டுத் தலமான பள்ளங்கண்டல் புனித அந்தோனியார் ஆலயமும் இவ்வில்பத்து வனாந்தரத்தினுள்ளே அமைந்திருப்பதும் வருடந்தோறும் நடைபெறும் திருவிழா, பூசை போன்றனவற்றில் கலந்து கொள்வதற்காக, வடக்கு மற்றும் தெற்கில் இருந்து ஏராளமான கத்தோலிக்கர் செல்வதும் வாடிக்கையான ஒன்று.
வில்பத்து, விலங்குகளின் சரணாலயமாகப் பிரகடனப்படுத்தப்படுவதற்கு முன்பாக, 1926ஆம் ஆண்டு கொழும்பு – புத்தளம் புகையிரதப் பாதை அமைக்கப்பட்டு, புகையிரதமும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. நட்டத்தின் காரணமாக அச்சேவை சிலாபம் வரை மட்டுப்படுத்தப்பட்டது. பின்னர் 1967 ஆம் ஆண்டு புத்தளத்தில் சீமெந்து தொழிற்சாலை ஆரம்பிக்கப்படுவதற்கு முன், சுண்ணக்கற்களை ஏற்றி வருவதற்காக அறுவக்காடு வரை புகையிரதப்பாதை புதிதாக அமைக்கப்பட்டது. சிலாபத்திலிருந்து புத்தளம் வரையான புகையிரதப் பாதை சீரமைக்கப்பட்டு பயணிகள் போக்குவரத்தும் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. ஆயினும் பெரும் இலாபம் ஈட்டும் நிலையில் அது இருக்கவில்லை.
1980 ஆம் ஆண்டு அப்போதைய போக்குவரத்து அமைச்சர் எம்.எச்.முஹம்மதின் ஆலோசனையின் பேரில் கொழும்பு – புத்தளம் புகையிரத சேவையை தலைமன்னார் வரை விஸ்தரிப்பதற்கு ஆய்வுகள் மேற்கொள்வதற்காக, இலங்கை புகையிரத இலாகாவைச் சேர்ந்தோர் சிலாவத்துறை மருத்துவமனையின் முன்னால் உள்ள தென்னந்தோப்பிலே கூடாரம் அமைத்து இலவங்குளம், மறிச்சுக்கட்டி, சிலாவத்துறை ஊடாக, புகையிரதப் பாதை அமைப்பதற்கான ஆய்வுகளை மேற்கொண்டனர். வடக்கில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக அம்முயற்சி கைவிடப்பட்டது.
15.5.1985 காலை 7.25 மணிக்கு அனுராதபுரம் மாநகரின் மத்திய பகுதி, புலிகளின் திடீர்த் தாக்குதலுக்கு இலக்கானதால், நகரம் அல்லோல கல்லோலப்பட்டது. மரண ஓலங்களும் கூக்குரலுமாக மக்கள் சிதறுண்டு ஓடினர். கொல்லப்பட்டும் நூற்றுக்கணக்கானோர் படுகாயப்பட்டும் இருந்தனர். புத்தளம் – இலவங்குளம் இரவு நேர தரிப்பு பஸ் வண்டியை அதிகாலை வேளையில் கடத்திய புலிகள், புத்தளம், நொச்சியாகம ஊடாக அனுராதபுரத்தை அடைந்து அத்தாக்குதலை மேற்கொண்டனர். அதன் பின்னர் இலவங்குளத்தில் பாரிய இராணுவ முகாம் அமைக்கப்பட்டதோடு, வடக்கிற்கு விரைவாக இராணுவத்தைக் கொண்டு செல்வதற்கு வசதியாக அப்போதைய தேசிய பந்தோபஸ்து அமைச்சர் லலித் அத்துலத்முதலியின் ஆலோசனையின் பேரில், 1986ஆம் ஆண்டு இலவங்குளத்திலிருந்து மறிச்சுக்கட்டி வரை 100 அடி அகலத்தில் காடுகள் வெட்டப்பட்டு கிரவல் பாதை அமைக்கப்பட்டது. இராணுவத் தேவைக்காக மாத்திரம் அப்பாதை பாவிக்கப்பட்டதாயினும் மறிச்சுக்கட்டிப்பகுதியில் உள்ளோர் மாட்டு வண்டி, உழவு இயந்திரம் போன்றவற்றில் புத்தளம் வருவதற்கும் போவதற்கும் அனுமதிக்கப்பட்டனர்.
இலங்கையில் நெடுஞ்சாலைகள் மற்றும் பெருவீதிகள் அமைக்கப்பட்டபோது, அவைகள் வனங்களை ஊடறுத்தே சென்றன. பதுளை – அம்பாந்தோட்டை வீதி, கண்டி – மகியங்கனை வீதி, மகியங்கனை – அம்பாறை வீதி, மகியங்கனை – மொனறாகலை வீதி, பொலன்னறுவை – மகியங்கனை வீதி, பொலன்னறுவை – மட்டக்களப்பு வீதி, ஹபரண – பொலன்னறுவை வீதி, புத்தளம் – அனுராதபுர வீதி, மதவாச்சி – மன்னார் வீதி, வவுனியா – ஹொரவப்பொத்தான வீதி, மாங்குளம் – முல்லைத்தீவு வீதி போன்ற பிரதான வீதிகள் அவற்றிற்குச் சிறந்த உதாரணங்களாகும். தற்போது காடுகளின் வீதம் வெகுவாகக் குறைந்திருப்பதால், அன்று காடுகளின் ஊடே அமைக்கப்பட்ட வீதிகள், இன்று காடுகளின் ஊடாகச் செல்லும் வீதிகளாகத் தென்படுவதில்லை.
புத்தளம்–மன்னார் வீதி, மக்கள் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட வேண்டும் என்னும் கோரிக்கை மிக நீண்ட காலமாக அரசுக்கு விடுக்கப்பட்டே வந்தது. இதன் ஓர் அங்கமாகவே வடக்கில் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தும் ‘வடக்கின் வசந்தம் ’ என்னும் திட்டத்தை 30.4.2009 அன்று சிலாவத்துறையில் ஆரம்பித்து வைத்து உரையாற்றிய, வடக்கு மீள்குடியேற்ற செயலணித் தலைவர் பசில் ராஜபக் ஷ எம்.பி. வடக்கையும் தெற்கையும் இணைக்கும் பிரதான நகராக எதிர்காலத்தில் சிலாவத்துறைதான் திகழப்போகிறது என்று கூறியதன் மூலம், புத்தளம் -– யாழ்ப்பாணம் வீதி எதிர் காலத்தில் நவீன வீதியாகச் செப்பனிடப்பட்டு பயணிகள் போக்குவரத்துப் பாதையாக திறக்கப்படும் என்பதற்கு ஒரு முன்னறிவிப்பாகவே கருதப்பட்டது.
மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சராக இருந்த ரிஷாட் பதியுதீன் 11.10.2009 ஆம் நாள் முசலிப் பாடசாலையில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றியபோது, புத்தளம் – மன்னார் பாதை விரைவில் திறக்கப்படுமெனவும், சீன அரசாங்கத்தின் ஆயிரம் கோடி ரூபாய் நிதி உதவியில் புத்தளம் – மன்னார் வீதி இலவங்குளம், மறிச்சுக்கட்டி, சிலாவத்துறை, அரிப்பு, வங்காலை, மன்னார், பூநகரி, சங்குப்பிட்டி வழியாக நாவற்குழி வரை காபட் வீதியாக அபிவிருத்தி செய்யப்படும் எனக் கூறினார்.
26.12.2009 அன்று கற்பிட்டி ஆலங்குடாவில் நடைபெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வடமாகாண மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, புத்தளம் – மன்னார் வீதி வரும் ஜனவரி மாதம் மக்கள் போக்குவரத்திற்காகத் திறக்கப்படும் எனக்கூறியதற்கு இணங்க, 24.01.2010ஆம் நாள் ஜனாதிபதியின் புதல்வர் நாமல் ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டது.
வடக்கைத் தெற்குடன் இணைக்கும் கரையோரப் பாதையாக ஆவதற்காக நீண்ட காலமாக கட்டப்படாதிருந்த சங்குப்பிட்டி மற்றும் அரிப்புப் பாலங்கள் ஜப்பானிய அரசின் நன்கொடையில் கட்டப்பட்டன. இவை நவீன காபட் பாதை வருவதற்காகக் கட்டியம் கூறிய போதிலும், நாவற்குழியில் இருந்து மறிச்சுக்கட்டி வரையும், இலவங்குளத்திலிருந்து புத்தளம் வரையும் காபட் பாதையும் மறிச்சுக்கட்டியிலிருந்து இலவங்குளம் வரையான பாதை குன்றும் குழியும் மிக்க போக்குவரத்துக்குக் கடினமான மண் பாதையுமாகக் காட்சியளிக்கின்றன. வனஜீவராசிகள் திணைக்களமும் சில சமூக ஆர்வலர்களும் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கினால் 37கி.மீ. தூரம் வரையிலான பாதை புனரமைக்கப்படாமல் இருக்கின்றது.
வனஜீவராசிகளுக்கு எதுவித இடையூறுகளும் ஏற்படாதவாறு உலகில் ஏராளமான நாடுகளில் வனத்தை ஊடறுத்துச் செல்லும் வீதிகள் மேம்பாலம் அமைத்தும், சுரங்கம் அமைத்தும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இலங்கையில் மலைகளைக் குடைந்து பாதைகள் அமைக்கப்பட்டுள்ளதை நாம் காணலாம். அனுராதபுரம், புத்தளம், மன்னார் ஆகிய பிரதேசங்கள் முக்கோண சுற்றுலா திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ளதால் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருமானம் பெறும் வகையில் இலவங்குளத்திலிருந்து மறிச்சுக்கட்டி வரையான 37கி.மீ. தூரத்திற்கு மேம்பாலம் அமைப்பதன் மூலம் சுற்றுலாக் கைத்தொழிலை அபிவிருத்தி செய்வதோடு, வடக்கையும் தெற்கையும் இணைக்கும் ‘உறவுப்பாலம் ’ ஒன்றுக்கான நல்லெண்ணமாகவும் அது மிளிரும். அப்பாலத்தில் பயணிக்கும் வாகனங்களுக்குக் கட்டணம் அறவிடுவதன் மூலம் இடப்பட்ட முதலீட்டை விரைவாக மீளப் பெற்றுக் கொள்ளக்கூடியதாகவும் இருக்கும்.
எனவே புத்தளம் – மன்னார் வீதி வடக்கின் யாழ்ப்பாணத்திற்கும் தெற்கின் ஹம்பாந்தோட்டைக்குமான கரையோர விரைவு வீதியாக அபிவிருத்தி செய்யப்படும்போது காலம், நேரம், பணம் போன்ற விரயம் மிகுதிப்படுவதோடு பொருளாதாரமும் மேம்படும். மேலும் வடக்குத் தெற்கின் வர்த்தகம் மற்றும் கலை, கலாசாரப் பண்பாடுகளும் வளர்ச்சியடையும்.
-Vidivelli