கருமலையூற்று பள்ளிவாசலின் கண்ணீர்

0 956
  • ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கரு­ம­லை­யூற்று, திரு­கோ­ண­மலை கொட்­டி­யா­ரக்­கு­டாவில் உள்ள இந்தக் கரை­யோரக் கிராமம் இப்­போது மட்­டு­மல்ல இரண்டாம் உல­கப்போர் நடந்த காலந்­தொட்டே போர் நெருக்­க­டி­க­ளுக்கு முகம் கொடுத்து  வந்­தி­ருக்­கின்­றது.

பிரிட்­டிஷார் அமைத்த சுடு­முனை அரண்கள் இன்­னமும் அங்கு இருக்­கின்­றன.

இயற்கைத் துறை­முகம், போர்க் கப்­பல்­களை பத்­தி­ர­மாக மறைத்து வைக்கக் கூடிய வசதி எல்லாம் இங்­கி­ருப்­பதால் இந்த இடம் இலங்­கைக்கு மட்­டு­மல்ல சர்­வ­தேச நாடு­களின் கண்­க­ளையும் கருத்­தையும் ஈர்த்த முக்­கி­யத்­துவம் வாய்ந்த பகு­தி­யாகத் திகழ்­கின்­றது.

இரண்டாம் உலக மகா யுத்­தத்தின் பின்னர் குடாக்­கரைப் பிர­தே­சத்தில் அமைந்­துள்ள திருக்­கைக்­குடா பிர­தே­சத்­தி­லி­ருந்து பலர் கிண்­ணியா, கந்­தளாய், முள்­ளிப்­பொத்­தானை பிர­தே­சங்­க­ளுக்கு இடம் பெயர்ந்­தனர்.

திருக்­கைக்­குடா என்­பது, திரு­கோ­ண­மலை இயற்கைத் துறை­மு­கத்தை அண்­டிய ஒரு கடற்­கரைப் பிர­தேசம். இது ஒரு மீன்­பிடிக் கிரா­ம­மா­கவும், முன்­னொரு காலத்தில் வர்த்­த­கத்­திற்குப் பெயர்­பெற்ற இட­மா­கவும் இருந்து வந்­துள்­ளது.

இக்­கி­ரா­மத்­தில் குடி­யி­ருந்த மக்­களே, இரண்டாம் உலக மகா யுத்­தத்தின் போது, இடம் பெயர்ந்து, நாச்­சிக்­குடா, வேப்­பன்­குடா, ம­கி­ழூற்று, வெள்­ளை­மணல், கரு­ம­லை­யூற்று, நீரோட்­டு­முனை, சின்­னம்­பிள்­ளைச்­சேனை, கிண்­ணியா, முள்­ளிப்­பொத்­தானை, கந்­தளாய் பிர­தே­சங்­களில் குடி­யே­றினர்.

திருக்­கைக்­குடாப் பகு­தியில் குடி­யி­ருப்­புக்கள் இருந்­த­மைக்கு ஆதா­ர­மாக இடி­பா­டு­க­ளுடன் கூடிய பள்­ளி­வா­சல்­களை Clapan Burg பகு­தியில் இன்றும் காணலாம்.

கரு­ம­லை­யூற்றுப் பிர­தே­சத்­திலும் ஜும்ஆப் பள்­ளி­யுடன் அமைந்த குடி­யி­ருப்­புக்கள் காணப்­பட்­டன.

இப்­பொ­ழுது இந்தக் கிராமம் இலங்கை முப்­ப­டை­யி­னரின் கட்­டுப்­பாட்­டுக்குள் முடங்கிப் போயி­ருக்­கின்­றது.

கடற்­படை, விமா­னப்­படை, தரைப்­படை என எல்­லோ­ருமே இந்தக் கிரா­மத்தை ஆக்­கி­ர­மித்­தி­ருப்­பதால் அங்கு வாழும் மக்கள் தமது இயல்பு நிலையை இழந்­தி­ருக்­கின்­றார்கள்.

உலக கவ­னத்தை இந்தக் கிராமம்  ஈர்த்­தி­ருந்­தாலும் உள்ளூர் மக்­களின் ஓலங்­களை யாரும் கண்டு கொள்­வ­தாகத் தெரி­ய­வில்லை என்று அந்த மக்கள் துயரம் வெளி­யி­டு­கின்­றனர்.

யுத்தம் மூர்க்­க­ம­டைந்­தி­ருந்த கால கட்­டத்தில் முதலில் அந்த மக்­களின் நட­மாடும் சுதந்­திரம் கட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டது.

பின்னர் வாழ்­வி­டங்­களைப் படை­யினர் கைப்­பற்­றி­னார்கள். வணக்க வழி­பா­டு­களைச் செய்ய விடாது தடுத்­தார்கள். கரு­ம­லை­யூற்­றி­லுள்ள பழம்­பெரும் பள்­ளி­வா­ச­லுக்குச் சென்று வணக்க வழி­பா­டு­களில் ஈடு­பட முடி­யாது அந்த மக்கள் தடுக்­கப்­பட்­டி­ருந்­தார்கள். இப்­பொ­ழுது அந்தப் பள்­ளி­வா­சலை இருந்த இடம் தெரி­யா­ம­லேயே அத்­தி­பா­ரத்­தோடு அழித்தும் விட்­டார்கள்.

எங்­க­ளது வாழ்­வா­தாரத் தொழி­லான மீன்­பி­டிக்கு மட்­டுப்­பா­டுகள் விதிக்­கப்­பட்­டி­ருந்­தன. நாம் வாழ்­வ­தற்கு என்­னதான் வழி என்று தெரி­யாமல்  தவித்தோம் எவரும் ஏறெ­டுத்தும் பார்க்­க­வில்லை.

கடை­சி­யாக கரு­ம­லை­யூற்­றி­லி­ருந்த பழம்­பெ­ருமை வாய்ந்த பள்­ளி­வாசல் 2014 ஓகஸ்ட் 16 ஆம் திக­தி­யன்று மாயமாய் மறைந்து விட்­டி­ருந்­தது. இதன் பின்னர் அவ்வூர் மக்கள் தமது நசுக்­கப்­பட்ட குரலால் மெல்லப் பேச ஆரம்­பித்­தார்கள். தொடர்ச்­சி­யாக தமக்கு இழைக்­கப்­பட்டு வரும் துய­ரங்­களை அவர்கள் மெல்­லிய குரலில் பகிர்ந்து கொண்­டார்கள்.

எமது வாழ்­வா­தாரம் முதலில் முடக்­கப்­பட்­டது. கடலில் ஆழ­மான பகு­திக்குச் சென்று மீன் பிடிக்க முடி­யாது என்று கடற்­ப­டை­யினர் தடை விதித்­தார்கள்.

மீன்­பி­டிக்கச் செல்­வ­தாயின் படை­யி­ன­ரிடம் “பாஸ்” பெற்­றி­ருக்க வேண்டும் என்­பது மற்­றொரு கட்­டுப்­பாடு.

“யுத்தம் நடந்த காலத்தில் நாம் எங்கும் செல்லக் கூடி­ய­தாக இருந்­தது. ஆனால் யுத்தம் முடி­வ­டைந்த பின்னர் எமது பள்ளி வாச­லுக்குச் சென்று தொழு­வ­தற்குக் கூட அனு­ம­திக்கப் பட்­டி­ருக்­க­வில்லை. எட்டிப் பார்க்­கவும் முடிந்­தி­ருக்­க­வில்லை.”

“நாம் பிறந்து வளர்ந்து ஓடி விளை­யாடித் திரிந்த எமது கடற்­க­ரைக்குச் சென்று கடல் நீரில் கால் நனைக்க எமக்குச் சுதந்­திரம் இருந்­தி­ருக்­க­வில்லை.”

1836 ஆம் ஆண்டில் கட்­டப்­பட்டு கம்­பீ­ரமாய் நின்­றி­ருந்த வர­லாறு சொல்லும் கரு­ம­லை­யூற்று பள்­ளி­வாசல் 2014 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 15 ஆம் திகதி அதன் கம்­பீரம் சிதைக்­கப்­பட்டு தரை மட்­ட­மாக்­கப்­பட்­டது.

பள்­ளி­வாசல் உடைக்­கப்­பட்­டது சம்­பந்­த­மாக சீனன்­குடா பொலிஸ் நிலை­யத்தில் சி.ஐ.பி. 398/73 இலக்­கத்தில் 16.08.2014 அன்று முறைப்­பாட்டைப் பதிவு செய்­தி­ருந்தோம்.

பள்ளி வாசல் அமைந்­தி­ருந்த பகு­தியில் ஜே.சி.பீ. (JCB) வாகனச் சத்தம் தொடர்ச்­சி­யாகக் கேட்டுக் கொண்டே இருந்­தது.

இந்­தப்­பள்ளி வாசல் இடிக்­கப்­பட்டு தரை­மட்­ட­மாக்கப் பட்­டுள்­ளது. குறிப்­பிட்ட பகுதி அதி­யுயர் பாது­காப்பு வல­ய­மாகப் பிர­க­டனப் படுத்­தப்­பட்டு வெளியார் எவரும் உள் நுழைய முடி­யா­த­வாறு தடை செய்­யப்­பட்­டுள்­ள­து.

முழு­மை­யாக இரா­ணுவக் கட்­டுப்­பாட்டில் உள்ள இந்தப் பகு­தியில் இருந்த சுமார் 400 வரு­டங்­க­ளுக்கு மேல் பழைமை வாய்ந்த எமது வழி­பாட்­டிடம் அழித்துத் தரை­மட்­ட­மாக்­கப்­பட்­டுள்­ளது.

இது பூர்­வீ­க­மாக அங்கு வாழ்ந்த எமது மக்­களின் பரம்­பரைச் சொத்து. இந்தப் பள்­ளி­வா­சலை இடித்து தரை­மட்­ட­மாக்கி அழித்­த­வர்கள் அதனை மீண்டும் புதுப்­பித்துக் கட்டித் தர­வேண்டும்.” என்று பள்ளி வாசல் நிர்­வா­கத்­தினர் முறைப்­பாட்டில் தெரி­வித்­து­மி­ருந்­தனர்.

இந்த விடயம் பற்றி பலரும் கரி­சனை வெளி­யிட்­டி­ருந்­தனர்.

கிழக்கு மாகா­ணத்­தி­லேயே நீண்ட வர­லாற்றைக் கொண்­டது கரு­ம­லை­யூற்றுக் கிராமம். இலங்கை முஸ்­லிம்­களின் வர­லாற்­றிலே அங்­குள்ள பள்­ளி­வாசல் சரித்­திர முக்­கி­யத்­துவம் வாய்ந்­தது.

இது இலங்­கையின் தொன்மை வாய்ந்த வர­லாற்றைக் கொண்­டது என்­பதால் அதனைப் பாது­காப்புப் படை­யினர் பாது­காத்­தி­ருக்க வேண்டும். இது அவர்­க­ளது கடப்­பா­டாக இருக்­கின்­றது.

வர­லாற்றைப் பாது­காக்க வேண்­டிய இரா­ணு­வத்­தினர் வர­லாற்றை அழித்து ஒரு வர­லாற்றுத் தவ­றி­ழைத்­தி­ருக்­கின்­றார்கள் என்று சொன்னால் அது தவ­றல்ல.

வர­லாற்றுத் தொன்மை வாய்ந்த இடங்­களை அழித்­தொ­ழிப்­ப­தென்­பது சட்ட ரீதி­யா­கவே தடுக்­கப்­பட்ட விடயம்.

எனவே, சட்­டத்தை அமுல்­ப­டுத்­து­வ­தற்குத் துணை நிற்க வேண்­டிய இரா­ணு­வத்­தினர் சட்­டத்­தினால் தடுக்­கப்­பட்ட விட­யங்­களைச் செய்­தி­ருப்­பார்­க­ளே­யானால் சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளுக்­கெ­தி­ராக கடு­மை­யான சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும்.

எந்த மத கலா­சா­ரத்­துக்­கு­ரிய அம்­சங்­க­ளாக இருந்­தாலும் தொல் பொருட்­க­ளையோ பழமைக் கட்­டி­டங்­க­ளையோ எவரும் நினைத்த மாத்­தி­ரத்தில் அழித்­தொ­ழிக்க முடி­யாது. அவ்­வாறு அழிப்­பது சட்ட விரோ­த­மாகும்.

இந்தக் கரு­ம­லை­யூற்று மலைத் தொடர்­களைச் சுற்றி இறை­நே­சர்கள் என்று கூறப்­படும் “அவ்­லி­யாக்­களின்” அடக்­கஸ்­த­லங்கள் பல உள்­ளன.

பிரிட்­டி­ஷாரின் வரை­ப­டத்தில் “Dead man’s Cave” என்­றுதான் இந்தக் குடா குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இந்­தியப் படை­யி­னரும் இங்கே முகாம் அமைத்­தி­ருந்­தார்கள்.

அப்­பொ­ழுதும் மக்கள் வெளி­யேற வேண்­டி­யேற்­பட்­டு­விட்­டது. இந்­தியப் படை­யினர் இங்கே நிலை கொண்­டி­ருந்த போது எங்­களை மீன்­பிடித் தொழில் செய்ய அனு­ம­தித்­தார்கள்.

43 குடும்­பங்கள் பள்­ளி­வா­சலைச் சூழ வாழ்ந்து வந்தோம்.

1998 ஆம் ஆண்டு முதல் எமது பகுதி கடற்­ப­டை­யி­னரின் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வ­ரப்­பட்ட பொழுது கடற்­ப­டை­யி­னரின் அனு­ம­தி­யில்­லாமல் கடற்­தொ­ழி­லுக்குச் செல்ல முடி­யாத நிலைமை வந்­தது.

அப்­பொ­ழு­தி­ருந்த அனு­மதி முறை என்­பது ஒரு பட்­டி­யலில் எமது மீன­வர்­களின் பெயரைக் கொடுத்­தி­ருந்தோம். அந்­தப்­பட்­டி­யலில் உள்­ள­வர்­களை கடற்­ப­டை­யினர் பரி­சோ­தித்து கட­லுக்குச் செல்ல அனு­ம­தித்துக் கொண்­டி­ருந்­தார்கள்.

2003 ஆம் ஆண்டு கடற்­ப­டை­யினர் இந்த கொட்­டி­யா­ரக்­கு­டாவின் முழுக் கரை­யோ­ரத்­தையும் தமது முழுக் கட்­டுப்­பாட்டின் கீழ் கொண்டு வந்­தி­ருந்­தனர்.

உங்­க­ளுக்குப் பாது­காப்புத் தரு­வ­தற்­கா­கவே நாம் இங்கு வந்­தி­ருக்­கின்றோம் என்று அவர்கள் அப்­போது கூறி­யி­ருந்­தனர்.

2004 இல் சுனாமி கடற்­பே­ரலைத் தாக்கம் ஏற்­பட்­ட­பொ­ழுது எங்­களில் 25 குடும்­பங்கள் அங்­கி­ருந்த மைதா­னத்தில் முகாம் அமைத்து தங்­கி­யி­ருந்தோம்.

அதனைத் தொடர்ந்து இரா­ணுவம் எமது வாழ்­வி­டங்­களைக் கைப்­பற்றி விட்­டார்கள்.

சுனா­மியால் பாதிக்­கப்­பட்ட எங்­க­ளுக்கு கடற்­க­ரை­யி­லி­ருந்து 500 மீற்­ற­ருக்கு அப்பால் ரி.டி.ரி.ஏ என்ற நிறு­வனத்தினர் வீடு கட்டித் தந்­தார்கள்.

2005 ஆம் ஆண்­டி­லி­ருந்து எமது மீன­வர்­க­ளுக்கு கடற்­ப­டை­யினர் முற்று முழு­வ­து­மாக பாஸ் நடை­மு­றையை அறி­மு­கப்­ப­டுத்­தினர்.

அதன்­படி ஒவ்­வொரு மீன­வரும் தனித்­தனிப் “பாஸ்” வைத்­தி­ருக்க வேண்டும். 2014வரை 210 பேருக்கு தனித்­தனிப் பாஸ் அனு­ம­தி­யி­ருந்­தது.

யுத்தம் முழு­வ­து­மாக முடி­வ­டைந்­தி­ருந்த, 2009 ஆம் ஆண்டு இந்தப் பகு­தி­யி­லி­ருந்து கடற்­ப­டை­யினர் வில­கி­யதும் இரா­ணு­வத்­தினர் தமது கவச வாக­னங்­களைக் கொண்டு வந்து எங்­க­ளது இடத்தைக் கைப்­பற்றி விட்­டார்கள்.

பள்­ளி­வாசல் உட்­பட இன்னும் அநே­க­மான பொது மக்­களின் இடங்­க­ளையும் அவர்கள் கைய­கப்­ப­டுத்திக் கொண்­டனர்.

கரு­மலை அதி­சய நீரூற்று

கடற் கரை­யி­லி­ருந்து சுமார் 5 அல்­லது 6 மீற்றர் தூரத்தில் கடல் மட்­டத்­தி­லி­ருந்து சுமார் 150 அடி உய­ரத்தில் அமைந்­தி­ருக்­கின்ற கரு­ம­லை­யூற்றுப் பள்­ளி­வா­சலின் அடி­யி­லி­ருந்து வற்­றாத, சுவை­யான நன்னீர் ஊற்று பீறிட்டு வரு­கின்­றது.

கரு­ம­லை­யூற்றுப் பள்­ளி­வா­சலில் ஊறும் அதி­சய நீரூற்­றி­லி­ருந்­துதான் சூழ­வுள்ள படை முகாம்­க­ளுக்­கெல்லாம் சுத்­த­மான குடி தண்ணீர் இப்­பொ­ழுதும் விநி­யோ­கிக்­கப்­ப­டு­கின்­றது.

எமது மக்கள் அங்கு குடி­யி­ருந்த போது அந்த நீரூற்­றி­லி­ருந்­துதான் தங்­க­ளுக்குத் தேவை­யான அளவு நீரைப் பெற்றுக் கொண்­டார்கள்.

இப்­பொ­ழுது எமது வாழ்­வி­டங்கள் மட்­டு­மல்ல வழி­பாட்­டி­டங்­களும் பறிபோய்க் கொண்­டி­ருக்­கின்­றன.

எங்­க­ளது வாழ்­வா­தா­ரத்தை மேற்­கொள்ள 1975 ஆம் ஆண்­டி­லி­ருந்து நாம் 4 கரை வலைப்­பா­டு­களை வைத்­தி­ருந்தோம்.

ஒரு கரை வலைப்­பாட்டில் 40 குடும்­பங்கள் ஜீவ­னோ­பாயம் நடத்­தினோம். எனினும் அதில் 2 கரை வலைப்­பா­டு­களை 2011 ஆம் ஆண்டு படை­யினர் தடை செய்து விட்­டி­ருந்­தார்கள்.

தடுக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கும் வாழ்­வா­தா­ரத்­துக்­கான வாய்ப்புக் கொடுக்க வேண்டும் எனும் நோக்கில் நாங்கள் சுழற்சி முறையில் மாறி மாறி மீன்­பி­டியில் ஈடு­பட்டு வந்தோம்.

ஒரு நாள் Golf Burg எனப்­ப­டு­கின்ற விளை­யாட்டு அரங்கு அமைப்­பதைப் பார்­வை­யிட இந்த இடத்­திற்கு வந்த அப்­போ­தைய பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் கோ­தா­பய ராஜ­பக் ஷ எமது கரை­வலை வாடி­களை இருந்த இடம் தெரி­யாமல் அகற்­று­மாறு படை­யி­ன­ருக்கு உத்­த­ர­விட்­டி­ருந்தார்.

அதன்­படி மறுநாள் எங்­க­ளது கரை­வலை ஓலைக் கொட்­டில்­களை இர­வோடு இர­வாக இருந்த இடம் தெரி­யாமல் செய்து விட்­டார்கள்.

உல்­லாசப் பய­ணி­களைக் கவரும் இடத்தில் ஏழை­க­ளா­கிய எங்­களின் ஓலைக் கொட்டில் கரை வலை வாடிகள் கண்ணில் படக் கூடாது, அது அசிங்கம் என்று கரு­தியே அவர் மீன­வர்­களின் ஓலை வாடி­களை உடனே அகற்றி விடு­மாறு உத்­த­ர­விட்­டாராம்.

கடை­சி­யாக அனு­ம­தித்­தி­ருந்த இரண்டு கரை வலைப்­பா­டு­களில் ஒன்றை 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் தடை செய்து விட்­டி­ருந்­தார்கள்.

இந்தப் பள்­ளி­வாசல் உடைக்­கப்­பட்ட விட­யத்தை நாங்கள் தூக்கிப் பிடித்தால் மீதி­யாக உள்ள எமது வாழ்­வா­தா­ரத்­தையும் வாழ்­வி­டங்­க­ளையும் விட்டு எம்மைத் துரத்தி விடு­வார்கள் என்ற அச்­சத்தில் நாம் உறைந்து போயி­ருந்தோம்.

இந்தப் பகு­தி­யிலே இயற்­கை­யாக இலந்தைப் பழங்கள், விளாம்­ப­ழங்கள், நாவல் பழங்கள் விளை­கின்­றன. வறு­மை­யான குடும்­பங்கள் இவற்றைக் கொண்டே தமது ஜீவ­னோ­பா­யத்தைக் கழித்தும் வந்­துள்­ளார்கள்.

ஆனால், இப்­பொ­ழுது காட்டுப் பக்­கமே நாம் செல்ல முடி­யாது. குறைந்­த­பட்சம் எமக்குச் சொந்­த­மான கடற்­க­ரைக்குப் போய் நாம் எமது கால்­களை கடல் நீரில் நனைக்க முடி­யாது.

எமது கிரா­மத்­தோடு அண்­டி­ய­தாக உள்ள மாபிள் பீச் (Mable Beach) எனப்­ப­டு­கின்ற பிர­தேசம் இயற்கை எழில் கொஞ்சும் மனோ­ரம்­ய­மான பகுதி, சிறு வயதில் நாம் ஓடித்­தி­ரிந்து இயற்­கை­யோடு ஒட்டி உற­வா­டிய பகுதி. இலங்­கையில் எந்­த­வொரு கடற்­க­ரை­யையும் இந்­த­ளவு இயற்கை எழி­லோடு நாம் கண்­ட­தில்லை.

அப்­ப­கு­தியைக் கைப்­பற்­றிய படை­யினர் நாம் ஓடித் திரிந்து விளை­யா­டிய பகு­திக்குள் பிர­வே­சிப்­ப­தற்கு 20 ரூபாய் ரிக்கட் அற­வி­டு­கின்­றனர்.

ஆனால் அதிலும் மிக அழ­கான பகு­திக்குள் நாம் உட்­செல்ல முடி­யாது. அது வி.ஐ.பி.க்களுக்கு அதா­வது மிக முக்­கிய பிர­ஜை­க­ளுக்கே ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.

சின்­னம்­பிள்­ளைச்­சேனை (மாபிள் பீச்), இது தனியே முஸ்லிம் கிராமம். இங்கும் காணி­களை படை­யினர் தம்­வ­சப்­ப­டுத்­தி­யுள்­ளனர்.

நாட்டில் பயங்­க­ர­வாதம் நில­விய போதும் இந்தப் பகு­தியில் குற்றச் செயல்கள் இடம்­பெற்­றி­ருக்­கவே இல்லை.

தற்­போ­தைய சமா­தானச் சூழ­லிலும் இலங்­கையில் குற்றச் செயல்கள் குறைந்த இட­மாக எமது பிர­தே­சம்தான் உள்­ளது. அப்­ப­டி­யி­ருந்தும் ஏன் கெடு­பி­டிகள் இன்­னமும் தொடர்­கின்­றன என்று எமக்குப் புரி­ய­வில்லை.

நீரோட்­டு­முனை, கரு­ம­லை­யூற்று, ஹிஜ்ரா நகர், அறபாத் நகர் ஆகிய எட்டுக் கிரா­மங்கள் இங்கு உள்­ளன.

2009 ஆம் ஆண்­டி­லி­ருந்து அதி­யுயர் பாது­காப்பு வலயம் என்ற கட்­டுப்­பாட்டுப் பகு­திக்குள் கொண்­டு­வ­ரப்­பட்டு முஸ்­லிம்கள் எவரும் தமது வணக்க வழி­பா­டு­களை மேற்­கொள்ள முடியாதவாறு தடை செய்யப்பட்டிருந்த கருமலையூற்று ஜும்ஆப் பள்ளியில் கடந்த  19.12.2014 அன்று முதன் முறையாக ஜும்ஆத் தொழுகை இடம்பெற்றது.

பிரதேச முஸ்லிம்களும் அயற்கிராம முஸ்லிம்களும் என சுமார் 300 பேருக்கு மேற்பட்டோர் இந்தத் தொழுகையில் கலந்து கொண்டனர்.

கிண்ணியா ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எம். ஹிதாயதுல்லாஹ் தலைமையில் இடம்பெற்ற இந்த ஜும்ஆ தொழுகையில் கருமலையூற்று ஜும்ஆப் பள்ளி நிருவாகத்தில் அப்போதிருந்த அதன் தலைவர் எம்.எச்.அப்துல் கரீம், உப தலைவர் ஏ.ஏ.எம். றமீஸ், செயலாளர் எம்.ஐ.சுபைர், திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.பஷீர், கிண்ணியா நகரசபை தலைவர் வைத்தியர் எம்.ஹில்மி, சுமையா அறபுக் கல்லூரியின் விரிவுரையாளர் எம்.ரீ. மஹ்மூத் உட்பட பெரும் எண்ணிக்கையான ஊர்ப் பிரமுகர்கள் அன்றைய ஜும்ஆத் தொழுகையில் கலந்து கொண்டனர்.

ஜும்ஆப் பிரசங்கத்தை நிகழ்த்திய கிண்ணியா ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எம்.ஹிதாயதுல்லாஹ், இந்தப் பள்ளிவாசலில் தொடர்ந்து தொழுகை இடம்பெறுவதற்கும் பள்ளிவாசலில் சிறப்பான முறையில் கட்டட நிர்மாணங்களை மேற்கொள்வதற்கும் கருமலையூற்றுப் பள்ளிவாசலைச் சூழ வாழ்ந்து இப்பொழுது வேறிடங்களில் வெளியேற்றப்பட்டிருக்கும் மக்கள் மீளக் குடியமர்த்தப்பட வேண்டும். இதற்காக சகலரும் பேதங்களை மறந்து முயற்சிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.