- எம்.எம்.ஏ.ஸமட்
உலக நாடுகளின் பிரதேச, சூழல் அமைவுகளுக்கு ஏற்ப அந்தந்த தேசங்களுக்கான பருவ காலங்கள் காணப்பட்டாலும் அல்லது பருவ காலங்கள் வகுக்கப்பட்டாலும், அத்தேசங்களுக்கான பருவ காலங்களில் நிகழ்கின்ற இயற்கை மாற்றங்களை இறைவனே நிர்ணயிக்கின்றான். அனைத்தும் படைத்த இறைவனின் நியதிப்படியே இவ்வுலகம் நடந்தேறுகிறது. இயற்கையின் பருவ கால மாற்றங்களினால் தாக்கங்களும் விளைவுகளும் ஏற்படும் என்று அறிவியல் எதிர்வு கூறினாலும், அம்மாற்றங்கள் ஏற்படுத்தும் விளைவுகளின் அளவு எவ்வாறு அமையுமென்று அறிவியல் உலகினால் அறிவிக்க முடியாது. அதை அறிந்தவனும் இறைவன்தான். இறைவனின் படைப்பான இயற்கை கூறுகள் சில வேளை மனிதனுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாகவும், சிலவேளை சோதனை நிறைந்ததாகவும் அமைந்து விடுகிறது.
காலநிலை மாற்றங்களினால்; மனித இனம் மாத்திரமின்றி விலங்கினங்களும் பல அசௌகரியங்களை காலத்திற்குக்காலம் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. இம்மாற்றங்களை அறிவியலால் மாற்ற முடியாதபோதிலும், அதனால் ஏற்படும் தாக்கங்களிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக அறிவியலை பயன்படுத்த முடியும். அந்தவகையில், வரலாறு கண்டிராத வெப்பமான காலநிலை இலங்கை மக்களை வெளுத்து வாங்கிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், காலநிலைமாற்றங்கள் பற்றியும் அவற்றின் அவஸ்தைகளிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கான வழிமுறைகள் பற்றியும் மக்கள் அறிந்துகொள்வதோடு அவற்றில் அக்கறை கொள்வதும் அவசியமானதாகும்.
காலநிலை மாற்றமும் இலங்கையும்
யாதேனுமொரு பிரதேசத்தில் நீண்டகாலமாக வளிமண்டலத்தில் காணப்படும் நிலை காலநிலை என வரைவிலக்கணம் செய்யப்படுகிறது. காலநிலை என்பது வளிமண்டலத்தின் மூலப் பொருட்கள் மற்றும் அவற்றின் மாற்றங்கள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டது. சூரியக்கதிர்கள், வெப்பநிலை, ஈரத்தன்மை, மேகம், மழைவீழ்ச்சி, அதன் அளவு, வளிமண்டல அமுக்கம் காற்றின் வேகம் அது வீசும் திசை என்பவற்றில் ஏற்படுகின்ற மாற்றங்கள் காலநிலையின் தன்மையிலும் மாற்றங்களை உருவாக்குகின்றன. இந்த மாற்றங்கள் சூழலில் பல தாக்கங்களையும் விளைவுகளையும் ஏற்படுத்துகிறது.
மத்திய கோட்டிற்கு வட அகலாங்கு 5 பாகை முதல் 9 பாகை வரையிலான இடைவெளிக்குள்ளும் கிழக்கே நெட்டாங்கு 79 பாகை முதல் 81 பாகை வரையிலான இடைவெளிக்குள்ளும் இலங்கை அமைந்துள்ளதன் நிமித்தம், இலங்கையின் காலநிலையானது மத்திய கோட்டு காலநிலை நிலவும் நாடுகளின் காலநிலைக்கான இயல்புகளைக் கொண்டுள்ளது. இக்காலநிலைத்தன்மைக்கு ஏற்ப காலநிலையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக வெப்பநிலையிலும் மழை வீழ்ச்சியிலும் இம்மாற்றங்களைக் காணமுடிகிறது.
இம்மாற்றங்களுக்கு இலங்கையின் புவியியல்தன்மையும் காரணமாகவுள்ளன. உயரமான மலைகள், மலைத்தொடர்கள், மேட்டு நிலங்கள், சமவெளிகள், தாழ்நிலங்கள் என்ற புவியியல் தன்மைகள் காணப்படுவதனால் பருவப்பெயர்ச்சிக் காற்றுக் காலங்களில் ஏற்படுகின்ற காற்றின் தன்மை, காலத்திற்குரிய மழை வீழ்ச்சி, வெப்பநிலை, ஒப்பீட்டளவிலான ஈரத்தன்மை மற்றும் ஏனைய காலநிலை மாற்றங்களுக்கு இப்புவியியல்தன்மை பெரிதும் தாக்கம் செலுத்துவதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
அத்தோடு, வளிமண்டலத்தில் ஏற்படுகின்ற தொடர்ச்சியான மாற்றங்கள் அல்லது நிலத்தை முறைதவறிப் பயன்படுத்தல் போன்ற காரணங்களினாலும் காலநிலையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. அதிகரித்த எரிபொருள் பாவனை, தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் வாயுக்கள், அதிகரித்த வாகனப் பயன்பாடு என்பவற்றின் தாக்கமும் காலநிலைமாற்றத்திற்கு காரணமாக அமைகின்றன.
அத்துடன், துரிதமாக அதிகரித்து வருகின்ற பச்சைவீட்டு விளைவின் காரணமாகவும் புவி வெப்பநிலையானது அதிகரித்துள்ளது. பச்சைவீட்டு விளைவின் காரணமாக புவியின் மேற்பரப்பிலே வெப்பநிலையானது சாதாரண நிலையிலும் பார்க்க 30 பாகை செல்சியஸ் வரையில் வெப்பமடைவதுடன், இதன் மூலம் உயிரியல் தன்மைகள் அழிந்து வருகின்றன. இயற்கை வளிமண்டலத்தில் இவ்வாறு அதிகரித்து வருகின்ற பச்சை வீட்டு விளைவிற்கு காரணமாக அமைகின்ற நீராவி, காபன்யொக்சைட், நைட்ரஸ் ஒக்சைட், மீதேன், ஓசோன், ஹைட்ரோபுளோரோ காபன், சல்பர் ஹெக்சாபுளோரைட் போன்றவை காரணமாக அமைகின்றன. மனித சுகபோக வாழ்வுக்காக மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகள் ஆரோக்கிய வாழ்க்கை தரும் காலநிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது.
வாகனங்களுக்கு மேல் வாகனங்கள் கொள்வனவு செய்யப்படுவதனால் அவ்வாகனங்களைச் செலுத்துவதற்கு பாதைகள் போதுமானதாக இல்லாத நிலையினை நகரப்புறங்களில் காணமுடிகிறது. அவற்றிற்காக பயன்படுத்தப்படும் எரிபொருட்களின் அளவும் அதிகரிக்கப்பட்டு அவை காலநிலை மாற்றங்களிலும் தாக்கத்தைச் செலுத்துகின்றன. அத்தோடு, தொழிற்சாலைகளிலிருந்து வெளிவருகின்றன. நச்சு வாயுக்களும் காலநிலைமாற்றத்தின் ஏதுக்களாகவுள்ளன. இவ்வற்றின் காரணமாக எல்லோருமே காலநிலை மாற்றத்தின் விளைவை அனுபவிக்க வேண்டியுள்ளது. கடந்த 5ஆம் திகதி முதல் சுட்டெரிக்கும் வெயிலினால் இலங்கை மக்கள் அவஸ்த்தைப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
நாட்டின் உற்பத்தித் தேவையின் நிமித்தம் பல தொழிற்சாலைகள், நிலையங்கள் இயங்கினாலும், அவற்றினால் நன்மைகள் பெறப்பட்டாலும் அவற்றில் ஆபத்தான பக்கவிளைவுகளும் காணப்படுகின்றன. இதனால், சூழல் மாசடைவதோடு காலநிலையிலும் மாற்றங்கள் ஏற்பட வழி ஏற்படுகிறது. இயற்கை சூழலும் மக்களும் பாதிக்கப்படுகிறார்கள். இந்நிலைமைகளைக் கருத்திற்கொண்டுதான் கடந்த காலத்தில் சம்பூர் அனல் மின் நிலைய நிர்மாணத்திற்கு எதிராக அப்பிரதேச மக்கள் போராட்டங்களை நடத்தினர் என்பதை இங்கு ஞாபமூட்ட வேண்டியுள்ளது.
மக்களின் நலன்களில் அக்கறைகொள்ளாத, அவர்களின் விருப்பு வெறுப்புக்களைப் பொருட்படுத்தாத அனுமதியின் மூலம் இயங்குகின்ற உற்பத்தி நிலையங்களின் தாக்கங்கள் தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதும் அதனால், மக்களுக்கும் சூழலுக்கும் காலநிலைக்கும் பாதிப்பு ஏற்படாததை உறுதி செய்வதிலும் சம்பந்தப்பட்டவர்கள் அக்கறைகொள்வது அவசியமாகும். ஏனெனில், காலநிலை மாற்றத்திற்கு இத்தகைய உற்பத்தி நிலையங்களிலிருந்து வெளியேற்றப்படுகின்ற வாயுக்களினதும், பிறபொருட்களினதும் தாக்கம் காரணிகளாக அமைகின்றன என்பது கவனத்திற்கொள்ளத்தக்கது.
குறிப்பாக சமகாலத்தில் நிலவுகின்ற வெப்பநிலையினால் பாதிக்கப்படுகின்றவர்களில் அதிகமானோர் உல்லாச சுகபோக வாழ்க்கை வாழ்பவர்களல்ல. நாளாந்த வாழ்க்கைக்காக ஓடி உழைக்கும் உழைப்பாளிகளும் தகரக் கொட்டில்களிலும், அகதி முகாம்களிலும் வாழும் அப்பாவிகளும் அவர்களது குழந்தைகளும் என்பதை குளிரூட்டிய வாகனங்களில் பயணிப்போரும் தொழிலகங்களில் கடமைபுரிவோரும், இல்லங்களில் வாழுவோரும் ஒரு கணம் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.
உஷ்ணத்தின் தாக்கங்களும் சுகாதார அறிவுரைகளும்
இலங்கை வளிமண்டலத்தின் வருடாந்த சராசரி வெப்பநிலையானது கடந்த சில தசாப்த காலங்களாக குறிப்பிடத்தக்களவு அதிகரித்திருப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இதன்பிரகாரம், 1961 முதல் 1990 வரையிலான காலப்பகுதியில் சராசரி வளிமண்டல வெப்ப நிலையின் அதிகரிப்பு வேகமானது 0.016 பாகை செல்சியஸ் ஆக அதிகரித்துள்ளது.
இந்த அதிகரிப்புக்கு பச்சை வீட்டு விளைவானது அரைப் பகுதி அளவில் தாக்கம் செலுத்தியுள்ளதுடன் அண்மைக்காலமாக இடம்பெற்ற துரித நகரமயமாக்கலின் விளைவு எனவும் குறிப்பிடப்படுகிறது. இருப்பினும் இலங்கை மத்தியகோட்டு காலநிலைத்தன்மைக்கு உட்பட்ட நாடாகவுள்ள நிலையில் கடந்த சில வாரங்களாக நிலவும் வெப்பமான காலநிலையானது மக்களை பெரும் அசௌகரித்துக்குள் தள்ளியுள்ளது.;
இந்து சமுத்திரத்தின் மேலான காற்றின் திசைமாற்றம் அதனால் ஏற்பட்ட சமுத்திரத்தின் வெப்பநிலைமாற்றம் மற்றும் சூரியன் நேரடியாக இலங்கைக்கு மேலால் காணப்படுவது போன்ற காரணங்கள் வரலாறு கண்டிராத அதிக வெப்பநிலை கொண்ட காலநிலையை உருவாக்கியுள்ளது. இந்த வெப்ப காலநிலை இம்மாதம் 15ஆம் திகதி வரை காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் ஏற்கனவே மக்களை அறிவுறுத்தியிருந்ததைச் சுட்டிக்காட்ட வேண்டும்.
பொதுவாக மத்திய மாகாணத்தின் நுவரேலியாவைத் தவிர, நாட்டின் ஏனைய மாகாணப் பிரதேசங்களில் வெப்பநிலை அதிகமாகவே காணப்படுகிறது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் வெப்பநிலை மற்றும் வளிமண்டல ஈரப்பதன் தொடர்பான விபரங்களின் பிரகாரம் வவுனியாவில் 38 பாகை செல்சியஸ் வெப்பநிலையும் நுவரெலியாவில் 12 பாகை செல்சியஸ் வெப்பநிலையும் காணப்படுவதை அவ்விபரங்களினூடாக அறிய முடிகிறது. அத்துடன் பல பிரதேசங்களில் இடி மின்னல் ஏற்படும் அபாயமும் காணப்படுமெனவும் அதுகுறித்தான பாதுகாப்பு நடவடிக்கைகளை மக்கள் முன்னெடுக்க வேண்டுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது ஏப்ரல் கால விடுமுறையை அனுபவித்திட நாட்டின் பல பிரதேசங்களையும் சேர்ந்த மக்கள் பல்வேறு பிரதேசங்களுக்கு சுற்றுலாச் செல்ல தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக பலர் நுவரெலியாவிற்கு படையெடுப்பர். இந்நிலையில் அதிகளவிலான மக்கள் நுவரெலியாப் பிரதேசத்துக்கு வருகை தருவதனால் இப்பகுதிகளில் தங்குமிட அறைகளுக்கான கட்டணம் மிக அதிகமாக இருக்குமெனவும் எதிர்வு கூறப்படுகிறது.
இந்நிலையில், இஸ்லாமிய வரம்பைப் பேணி விடுமுறை காலத்தை அனுபவிக்குமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா இந்நாட்டு முஸ்லிம்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பிள்ளைகளையும், குடும்பத்தவர்களையும் பிற இடங்களுக்கு அழைத்துச் செல்வது இஸ்லாமிய போதனைகளுக்கு முரணானதல்ல என்றாலும், முஸ்லிம்கள் என்ற வகையில் நமது செயற்பாடுகள் இஸ்லாமிய வரையறையை மீறக் கூடாது. ஆடைகள் அணிவது முதல் உணவு உண்பது, குடிப்பது வரை இஸ்லாமிய வழிகாட்டலின் பிரகாரம் அமைத்துக்கொள்ள வேண்டுமெனவும் அத்தோடு பிறருக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது எனவும் முஸ்லிம்களை ஜம்இய்யதுல் உலமா கேட்டுள்ளதையும் இங்கு சுட்டிக்காட்டுவது பொருத்தமாகும்.
இந்நிலையில் அதிகரித்த வெப்பநிலையினால் விவசாயிகளும், நாளாந்த தொழிலாளர்களும், தகரக் கொட்டில்களில் வாழும் மக்களும் பெரும் சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். வரட்சியான காலநிலையின் காரணமாக நாடளாவிய ரீதியில் 13 மாவட்டங்களிலுள்ள 43 பிரதேச செயலகப் பிரிவுகளில் 3 இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதை இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் தகவல்கள் மூலம் அறியமுடிகிறது.
அத்தோடு, இக்காலங்களில் தொடர்ச்சியாக மின்விசிறிகள் இயங்குவதனால் மின்சாரக் கட்டணப் பட்டியலும் அதிகரித்திருப்பதாக குடும்பத் தலைவர்கள் கூறுவதையும் அவதானிக்க முடிகிறது. ஒரு சில வர்த்தக மாபியாக்கள்; தாகம் தீர்க்கும் பழங்கள் மற்றும் குடிபானங்களுக்கான விலைகளையும் அதிகரித்திருப்பதாக மக்கள் தெரிவிப்பதையும் கவனத்திற்கொள்ள வேண்டியுள்ளது.
அதிகரித்த வெயிலினால் குறிப்பாக குழந்தைகள், சிறுவர்கள், முதியவர்கள்; வெகுவாக பாதிக்கப்படுகின்றனர். வெயிலில் வேலை செய்த ஓரிருவர் ஒரு சில பிரதேசங்களில் மயங்கி விழுந்த செய்திகளும் வெளிவந்திருந்தன. இந்நிலையில் மலையக மற்றும் வடக்கு, கிழக்கில் நிலவும் உஷ்ணமான காலநிலையினால் காய்ச்சல், இருமல், தோல் நோய் என்பவற்றுக்கு சிறுவர்கள் ஆளாகி வருவதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றன. இவ்வெயில் காலங்களில் உடல் வெப்பநிலை அதிகரிப்பதனால் ஏற்படும் வெப்பத்தளர்ச்சி, அதிக நேரம் வெயிலில் வேலை செய்வதனால் ஏற்படும் வெப்ப மயக்கம், வெயில் காலங்களில் தேவையான அளவிற்கு தண்ணீர் குடிக்காததனால் ஏற்படும் சிறுநீர்க்கடுப்பு, உடலில் அதிக வியர்வைச் சுரப்பு ஏற்படுவதனால் உண்டாகும் வியர்க்குரு போன்ற உடல் உபாதைகளிலிருந்து பாதுகாப்பு பெற்றுக்கொள்ளவும் வெயில் காலங்களில் அணியும் ஆடை, உண்ணும் உணவு, குடிக்கும் பானம் போன்ற விடயங்களில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றவும் இவை தொடர்பான ஆலோசனைகளை உரியவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளவும் மக்கள் ஆர்வம் காட்ட வேண்டும்.
சூழல் வெப்பநிலை அதிகரிக்கும்போது, மனிதர்களின் உடல் வெப்பநிலையும் அதிகரிப்பதற்கான வாய்ப்பு காணப்படுவதனால் அதிகளவிலான சுத்தமான நீரைப் பருகுதல், கூடுதலாக வெயிலில் செல்லாதிருத்தல், உடல் சுகவீனமுற்றதாக உணர்ந்தால் உடனே வைத்தியசாலை செல்லுதல், குழந்தைகளை வெயிலில் அனுப்பாதிருத்தல் மற்றும் இள நிறத்திலான ஆடைகளை அணிதல் ஆகிய விடயங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் இயற்கையின் சோதனையான சுட்டெரிக்கும் வெயிலினால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கை மக்கள் ஒருபக்கம் செயற்கையின் சோதனையாக மின்துண்டிப்பு; மறுபக்கம் சுட்டெரிக்கும் வெயில் என இரு முனை சோதனைகளுக்கு முகங்கொடுத்திருக்கிறார்களா என வினவப்படுகின்ற நிலையில், மின்துண்டிப்பு 10ஆம் திகதி புதன் கிழமையுடன் நிறைவுக்கு வருவதாக பொறுப்பான அமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார். அத்துடன் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை எதிர்வரும் 15ஆம் திகதி வரை காணப்படுமென வளிமன்டலவியல் திணைக்களம் தெரிவித்திருக்கிறது. இவை துன்பத்தின் பின் இன்பம் வரும் எனும் தத்துவத்தை உணரவும் செய்கிறது என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டி யுள்ளது.
-Vidivelli