எமது நாட்டின் வரலாற்றில் முக்கிய நிகழ்வொன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வினை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை ஏற்பாடு செய்திருந்தது. அன்று சிங்கள மொழியிலான அல்குர்ஆன் விளக்கவுரை வெளியிட்டு வைக்கப்பட்டது.
நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மேல் மாகாண ஆளுநர், பாராளுமன்ற உறுப்பினர்கள், சிரேஷ்ட சட்டத்தரணிகள், பௌத்த குருமார்கள், கிறிஸ்தவ, இந்து குருமார்கள், கல்விமான்கள், சிரேஷ்ட உலமாக்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், ஜனாதிபதி சட்டத்தரணிகள், வெளிநாட்டுத் தூதுவர்கள், முன்னாள் அமைச்சர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர், அரபுக்கல்லூரிகளின் அதிபர்கள், உலமாக்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
அல்குர்ஆனின் சிங்கள மொழிபெயர்ப்பின் முதற்பிரதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தியினால் ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்டது. நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கும் அல்குர்ஆன் மொழி பெயர்ப்பு பிரதி இலவசமாக வழங்கப்பட்டது.
நிகழ்வில் உரையாற்றிய அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி, ‘முஸ்லிம்கள் தொடர்பாகவும், இஸ்லாம் தொடர்பாகவும் பொய்யான குற்றச்சாட்டுகளும், மோசமான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்து அவற்றுக்கான தெளிவுகளையும் சரியான பதில்களையும் வழங்க வேண்டிய கட்டாய நிர்ப்பந்தத்திற்கு இஸ்லாமிய அறிஞர்களும், கல்விமான்களும் நிர்ப்பந்திக்கப்பட்டனர்.
இந்தச் சவாலை ஏற்ற அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை புனித அல்குர்ஆனின் சிங்கள மொழியிலான விளக்கவுரையை அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் இலகு மொழிநடையில் மொழிபெயர்க்கும் பணியை 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி ஆரம்பித்து இன்று நிறைவு செய்துள்ளது’ என்றார்.
கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கெதிரான நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்த பொதுபல சேனா அமைப்பு குர்ஆனை நிந்தனை செய்தது. அவ்வமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசாரதேரர் குர்ஆன் தீவிரவாதத்தைப் போதித்திருப்பதாக சவால்விட்டார். அல்லாஹ்வையும், குர்ஆனையும், நபிகள் (ஸல்) அவர்களையும் நிந்தித்தார். குர்ஆன் தொடர்பான விளக்கங்களை உலமா சபை ஞானசாரதேரருக்கு ஏற்கனவே வழங்கியிருக்கிறது. அவரது சந்தேகங்களுக்கு தெளிவு வழங்கியிருக்கிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை குர்ஆன் விளக்கவுரை சிங்கள மொழியில் வெளியீடு செய்ததன் மூலம் இஸ்லாம், தொடர்பான சந்தேகங்களுக்கு விடுதலையளிக்கப்பட்டுள்ளது.
‘சிங்கள மொழி மூலமான குர்ஆன் விளக்கவுரை முழு நாட்டு மக்களுக்கும் இஸ்லாம் தொடர்பான தெளிவுகளை வழங்கும் என நம்புகிறோம்’ என்றும் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
மொழிரீதியில் நாம் பிளவுபட்டு நாங்கள் ஒவ்வொருவரும் குரோதம் கொள்வதற்கும், சந்தேகக்கண் கொண்டு நோக்குவதற்கும் எமது நாட்டு அரசியல்வாதிகளின் தவறுகளே காரணம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனதுரையில் குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், “வரலாற்றை நாம் திரும்பிப் பார்க்கையில் அரசியல்வாதிகள் புரிந்துள்ள கடுமையான தவறு என்னவென்றால் சிங்களம், தமிழ், முஸ்லிம் என இனரீதியில் பாடசாலைகளை வேறுபடுத்தியதாகும்.
உலமாசபையின் தலைவர் கூறியது போன்று அல்குர்ஆனை சிங்கள மொழியில் மொழிபெயர்ப்புச் செய்தமை ஒரு முக்கிய நிகழ்வாக வரலாற்றில் இடம்பெறும். இன்று உலகில் மக்கள் பிளவுபட்டு இருப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. பணம் உள்ளவர்கள் பணக்காரர்கள் என்றும், பணம் இல்லாதவர்கள் ஏழைகள் என்றும் பிளவுபட்டிருக்கிறார்கள். அத்தோடு பேசும் மொழி தொடர்பில் மக்கள் பிளவுபட்டிருப்பது உலகில் பாரிய பிரச்சினையாக உள்ளது. இது அபிவிருத்தியை எட்டாத சமூகத்திற்கான அடையாளமாகும். கல்வியில் உயர்ந்த சமூகம், அறிவுள்ள சமூகம் மற்றும் முன்னேற்றம் கண்டுள்ள சமூகம் மொழியினால் வேறுபடுவதில்லை, பிரிவுகளுக்குள்ளாவதுமில்லை.
எங்களது நாட்டை ஆங்கிலேயர் கைப்பற்றி ஆட்சி செய்த காலத்தில் சிங்கள போராட்டக்காரர்களுடன் இணைந்து முஸ்லிம்களும் ஆங்கில ஆட்சியாளர்களுக்கெதிராக போராடினார்கள். சிங்களவர்களும் முஸ்லிம்களும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக போராடினார்கள். 1940 காலப்பகுதியில் சிங்களவர், தமிழர், இஸ்லாமியர் என வேறுபட்ட மொழிகள் பேசும் மக்களின் தலைவர்கள் ஒன்றிணைந்து ஆங்கிலேயருக்கு எதிராக போராடினார்கள். அதனாலேயே எங்களுக்கு சுதந்திரம் கிடைத்தது.
என்றாலும் எமது நாட்டின் அரசியல் வாதிகளின் தவறினால் நாங்கள் மொழிரீதியில் பிளவுபட்டு ஒவ்வொருவருக்கிடையில் குரோதங்களை வளர்த்துக்கொண்டோம். மொழியினாலே எங்களுக்குள் பிரிவு ஏற்பட்டது. நாங்கள் அனைவரும் ஒரே வகையான உணவைச் சாப்பிட முடியுமென்றால் எமது உடல் அவயவங்கள் ஒரே மாதிரியென்றால் ஏன் நாங்கள் பிரிந்திருக்க வேண்டும். வேறுபட்டு நிற்க வேண்டும். எங்கள் நாட்டின் புத்திஜீவிகளும் மார்க்க அறிஞர்களும் இது தொடர்பில் சமூகத்தை தெளிவுபடுத்த வேண்டியது அவசியமாகும்.
கடந்த 50-–60 வருட கால எல்லைக்குள் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் ஒற்றுமை தொடர்பில் மகிழும் அதேவேளை பிளவுகள் தொடர்பில் நாம் கவலைப்பட வேண்டியுள்ளது. இதற்கு நான் கட்சி வேறுபாடுகளின்றி அரசியல்வாதிகள் மீதே குற்றம் சுமத்துகிறேன். இந்தியாவில் சுமார் 400 மொழிகள் பேசும் மக்கள் வாழ்கிறார்கள். அவர்கள் எவரிடமும் உங்கள் சாதி என்ன என்று கேட்டால் அவர்கள் அனைவரும் நாங்கள் இந்தியர்கள் என்றே தெரிவிக்கிறார்கள். எமது நாட்டிலோ சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என நாம் பிரிந்திருக்கிறோம். இதுவே எங்கள் நாட்டினது முன்னேற்றத்திற்குத் தடையாக உள்ளது.
அத்தோடு எமது வரலாற்றில் அரசியல்வாதிகள் புரிந்துள்ள பாரிய தவறு பாடசாலைகளை சிங்கள மகா வித்தியாலயம், தமிழ் மகா வித்தியாலயம், முஸ்லிம் மகா வித்தியாலயம் என்று வேறுபடுத்தியுள்ளமையாகும். இது கடந்த பல வருடங்களாக நாம் செய்துள்ள பாரிய தவறு என நான் காண்கிறேன். சில வாரங்களுக்கு முன்பு பொலன்னறுவை நகரில் பாடசாலை திறப்பு விழா ஒன்றுக்கு சென்றிருந்தேன். அந்தப் பாடசாலையில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள். இந்த உதாரணம் கடந்த காலங்களில் செயற்பட்டிருந்தால் மக்களுக்கிடையே நிலவும் பிளவுகள், சந்தேகம் என்பன இன்று இருந்திருக்காது.
அல்குர்ஆன் சிங்கள மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளமை இந்நாட்டில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு மேற்கொண்ட சிறந்த முயற்சியாகும். சிங்கள மொழி பெயர்ப்பினை பாடசாலை மாணவர்கள் எந்த வேறுபாடுகளுமின்றி வாசிப்பார்கள். குர்ஆனின் கோட்பாடுகளை தெளிவாக விளங்கிக் கொள்வார்கள். இதுவே மிகவும் முக்கியமானதாகும்.
நாங்கள் பௌத்தர்கள் என்ற வகையில் திரீபீடம், முஸ்லிம்களின் அல்குர்ஆன், இந்துக்களின் பகவத்கீதை என்பனவற்றை நாம் அனைவரும் படித்துக் கொள்வோமென்றால் நாங்கள் மிகவும் நல்லவர்களாக புரிந்துணர்வு உள்ளவர்களாக இருப்போம். அத்தோடு எங்களுக்கிடையில் இருக்கும் வைராக்கியம் இல்லாமற் போகும். சிங்களவர், முஸ்லிம்கள், தமிழர் என்று வேறுபடுவதனாலேயே எங்களுக்குள் சண்டைகள் உருவாகின்றன, முரண்பாடுகள் ஏற்படுகின்றன.
பௌத்தராக இருப்பதென்றால் பௌத்த கோட்பாடுகள், சிந்தனைகள் அவரிடம் இல்லாவிட்டால் அதில் பலனில்லை. அனைத்து சமயங்களினதும் கோட்பாடுகள் உரிய முறையில் பின்பற்றப்படுமாயின் முரண்பாடுகள் ஏற்படாது. வன்முறைகள் உருவாகாது.
பௌத்தர்கள் என்றாலும், இந்துக்கள் என்றாலும் கிறிஸ்தவர்கள் என்றாலும் தங்களது சமய கொள்கைகளை சரியாக பின்பற்றாமையினாலேயே பிரச்சினைகள், மோதல்கள் உருவாகின்றன. கடந்த நான்கு வருடங்களாக இந்நாட்டில் தேசிய ஒற்றுமையை, நல்லிணக்கத்தை இனங்களுக்கிடையில் கட்டியெழுப்புவதற்காக நாம் பல்வேறு கலந்துரையாடல்களை நடத்தியிருக்கிறோம். பௌத்த, இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மதத்தலைவர்களுடன் கலந்துரையாடலை நடத்தி சகவாழ்வினைக் கட்டியெழுப்ப முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.
மக்கள் தாம் மரணிப்பதில்லை என்பதை நினைக்காது கால அட்டவணைகள் தயாரித்துக் கொள்கிறார்கள். நாங்கள் எந்த நாளும் வாழ்வோம் என்று மரணத்தை நினைக்காது வாழ்வதனாலேயே பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
புனித அல்குர்ஆனின் உயரிய போதனைகள் சிங்கள மொழியில் மொழி பெயர்க்கப்பட்டதன் மூலம் இந்நாட்டில் தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்கும் நல்லிணக்கத்தை பலப்படுத்துவதற்கும் வழி திறக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் இந்த உயரிய பணி குறித்து நான் மிகவும் மகிழ்கிறேன் என்றார்.
பேராதனைப் பல்கலைக்கழக சமூகவியல் பேராசிரியர்
பேராதனைப் பல்கலைக்கழக சமூகவியல் பீட பேராசிரியர் தயா அமரசேகர உரையாற்றுகையில், இது முக்கியதொரு பயனுள்ள நிகழ்வாகும். உலமா சபையின் சிங்கள மொழியிலான அல்குர்ஆன் விளக்கவுரை வெளியீடு இன்றல்ல இற்றைக்குப் பலவருடங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டிருக்க வேண்டும். மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு வெளியிடப்பட்டிருந்தால் தேசிய ஒருமைப்பாடும், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கமும் மேலும் வலுப்பெற்றிருக்கும்.
1970, 1980 களில் சாதி, சமய வேறுபாடுகள் காரணமாக நாட்டில் பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்றன. பௌத்த மக்களிடமிருக்கும் தவறான கருத்துகளை இல்லாமற் செய்வதற்கு சிங்கள மொழியிலான அல்குர்ஆன் விளக்கவுரை பெரிதும் உறுதுணையாக இருக்கும். நாம் இனம், மதம் என்ற வகையில் வேறு கலாசாரங்களையும் கொள்கைகளையும் கொண்டிருந்தாலும் அனைவரும் மனிதர்கள் என்ற வகையிலும் ஒரே தேசத்தவர் என்ற வகையிலும் ஒன்றுபட வேண்டும்.
இச்சந்தர்ப்பத்தில் எனது கல்லூரி வாழ்க்கை நினைவுக்கு வருகிறது. கொழும்பு ஆனந்தா கல்லூரியில் நான் பயின்ற போது முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் அங்கு பயின்றார். அவர் கல்லூரியில் அனைவரதும் அன்பினைப் பெற்றிருந்தார். அனைவருடனும் சகோதர பாசத்துடன் பழகினார். கல்லூரியில் மாணவ தலைவராகவும் நியமனம் பெற்றார். அன்று எங்களை மொழியோ, சமயமோ, இனமோ வேறுபடுத்தவில்லை. அல்குர்ஆன் சிங்கள மொழியில் மொழி பெயர்க்கப்பட்டிருப்பது போன்று மகாவம்சமும் தமிழில் மொழி பெயர்க்கப்பட வேண்டும்.
முஸ்லிம் கடைகளுக்குச் செல்லாதீர்கள், முஸ்லிம் வர்த்தக நிலையங்களைப் பகிஷ்கரியுங்கள் என்று ஒருசாரார் சமூக வலைத்தளங்களில் பதிவிடுகிறார்கள். சிங்களவர்களின் கடைகளிலே பொருட்களைக் கொள்வனவு செய்யுங்கள் என்கிறார்கள். அவ்வாறு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் சிலகாலம் கழித்து முஸ்லிம் கடைகளுக்குச் செல்வார்கள். ஏனென்றால் முஸ்லிம்கள் உதவி செய்பவர்களாக இருக்கிறார்கள்.
எமது சமயம் என்று இறுக்கமான கோட்பாட்டில் இருந்தவர்களுக்கு வரலாற்றில் இடம் கிடைக்கவில்லை. நாம் எந்த சமயத்தவர்களாக இருந்தாலும் எமக்குள் நற்குணங்கள் இருக்கவேண்டும். இதுதான் எமது கலாசாரம்.
பல்கலைக்கழகங்களில் முஸ்லிம் மாணவர்களை விட முஸ்லிம் மாணவிகளையே காண்கிறேன். முஸ்லிம் மாணவர்கள் கல்வியில் ஆர்வமின்றி இருக்கிறார்கள். மாணவிகளே கல்வியில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். முஸ்லிம் மாணவர்கள் குறுகிய காலத்தில் பெரும் பணம் உழைத்துக் கொள்ள வேண்டும், பெரிய வீடு கட்டிக் கொள்ள வேண்டும் என்ற இலட்சியம் கொண்டவர்களாக கல்வியில் அக்கறையின்றி பணம் ஈட்டும் செயற்பாடுகளிலேயே இருக்கிறார்கள். இதனால் ஏனைய மதத்தினருக்கு இவர்கள் மீது பொறாமை ஏற்படுகிறது. நாம் எமது வாழ்நாளில் எதனை உழைத்துக் கொள்ளவேண்டும் என தம்மபதவில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. பணம் வாழ்க்கையில் நிம்மதியைத் தராது. எனது சமயம், எனது இனம் என்பதற்காகவே இலங்கையில் யுத்தங்கள் ஏற்பட்டுள்ளன. முஸ்லிம்கள் பற்றி சிங்களவர் மத்தியில் நிலவும் தவறான கருத்துகளை அல்குர்ஆன் சிங்கள மொழி பெயர்ப்பு நீக்கிவிடும் என்று நினைக்கிறேன். எமது நாட்டை ஆண்ட சிங்கள மன்னர்கள் இஸ்லாமிய நாடுகளுடன் தொடர்புகளைப் பேணியிருந்தமை வரலாற்று காலம் முதல் சிங்களவர்களுக்கும், முஸ்லிம்களுக்குமிடையில் இருந்த ஒற்றுமையை பறைசாற்றுகிறது.
ஒவ்வொருவர் பேசும் மொழியின் உள்ளே தான் கலாசாரம் இருக்கிறது. எனவே நாம் கலாசாரத்தை கௌரவிக்க வேண்டுமென்றால் மொழி மீது பற்றுக்கொள்ள வேண்டும் அனைத்து மொழிகளையும் கற்கவேண்டும் என்றார்.
அ.இ.ஜ.உலமா சபையின் தலைவர்
முஸ்லிம்களின் தாய்நாடு இலங்கையே. இந்நாட்டு முஸ்லிம்கள் பௌத்த, இந்து, கிறிஸ்தவ மக்களுடன் கைகோர்த்து ஒரேதாயின் பிள்ளைகளைப் போன்று வாழ்கிறார்கள். இதனையே அல்குர்ஆனும் போதித்துள்ளது. இலங்கை முஸ்லிம்களின் தாய்மொழி தமிழாக இருந்தாலும் அதிகமான முஸ்லிம்கள் சிங்கள மொழியினைத் தாய் மொழியாகக் கொண்டுள்ளார்கள்.
இன்று வெளியிட்டு வைக்கப்படும் சிங்கள மொழியிலான அல்குர்ஆன் விளக்கவுரை சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தைப் பலப்படுத்தும் பாலமாக அமையும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரை நிகழ்த்துகையில், ‘சிங்களமொழியை அரச மொழியாகக் கொண்டுள்ள ஒரே நாடு இலங்கையாகும். அல்குர்ஆன் மனித சமுதாயத்திற்கான வழிகாட்டியாகும். அது முஸ்லிம்களுக்கு மாத்திரம் உரித்தானதல்ல, முழு சமுதாயத்துக்கும் உரித்தானதாகும். அல்குர்ஆன் மனித உரிமை பற்றிப் பேசுகிறது. ஏனைய மதங்களை கௌரவிக்கும்படி கூறியுள்ளது. அடுத்தவர்களைத் துன்பத்துக்கு உள்ளாக்காதீர்கள் என்கிறது. எதிரிகளுக்கும் உதவி செய்யும்படி கூறியுள்ளது. நல்லதையே செய்யும்படியே குர்ஆன் போதிக்கிறது. இது அல்லாஹ்வின் போதனைகளாகும்.
குர்ஆனைப் பற்றிய பொய்ப் பிரசாரங்களினாலும், முஸ்லிம்களைப் பற்றிய தவறான கருத்துக்களாலும் இந்நாட்டில் முஸ்லிம்கள் பல சவால்களை எதிர்கொண்டார்கள். குர்ஆனைப் பற்றிய புரிதல் இன்மையே இதற்குக் காரணமாகும். குர்ஆனைப் பற்றி தெளிவுபடுத்துவதற்காக, குர்ஆனின் போதனைகளை விபரிப்பதற்காகவே சிங்கள மொழி பெயர்ப்பு வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. இம்மொழி பெயர்ப்பு தேசிய ஒருமைப்பாட்டினையும் இனங்களுக்கிடையில் ஒற்றுமையையும் பலப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
-Vidivelli