அம்பாறைக்கு இடமாற்றப்படவிருந்த நகர அபிவிருத்தி அதிகார சபைக் காரியாலயம் கல்முனை மாநகர சபைக் கட்டிடத்தில் திறப்பு

0 752

அம்பாறைக்கு இடமாற்றப்படவிருந்த நகர அபிவிருத்தி அதிகார சபையின் கல்முனைப் பிராந்தியக் காரியாலயம், கல்முனை மாநகர சபைக் கட்டிடத்தில் நேற்று வியாழக்கிழமை மீண்டும் திறந்து வைக்கப்பட்டது.

கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் லலித் விஜயரட்ன பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வர் காத்தமுத்து கணேஷ், ஆணையாளர் எம்.சி.அன்சார், கணக்காளர் ஏ.எச்.தஸ்தீக், மாநகர சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அணித்தலைவர் ஹென்றி மகேந்திரன் உட்பட உறுப்பினர்கள் பலரும் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.ஹரீஸின் இணைப்புச் செயலாளர்களான நௌபர் ஏ.பாவா, அலிகான் ஷாபி உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய நகர அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர்,  இக்காரியாலயம் எதிர்வரும் காலங்களில் தங்குதடையின்றி, தொடர்ந்தும் இயங்கும் என்றும் இதற்கான வசதிகள் அதிகரிக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் கல்முனைப் பிராந்தியக் காரியாலயத்தை மூடிவிட்டு, அதன் பணிகளை அம்பாறை நகரில் அமைந்துள்ள மாவட்டக் காரியாலயத்தில் முன்னெடுப்பதற்கு கடந்த பெப்ரவரி மாதம் நடுப்பகுதியில் அதன் தலைமையகத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

கடந்த பல வருடங்களாக தனியார் கட்டிடமொன்றில் இயங்கி வந்த நகர அபிவிருத்தி அதிகார சபையின் கல்முனைப் பிராந்தியக் காரியாலயத்திற்கு சொந்தக் கட்டிடம் இல்லாதிருப்பதையும் வாடகைப் பணம் அதிகம் செலுத்தப்படுவதாகவும் காரணம் காட்டி, அதனை மூடிவிடுவதற்கான எழுத்து மூல உத்தரவு நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகத்தினால் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த விவகாரம் கல்முனை மாநகர முதல்வரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த காரியாலயத்திற்கு கல்முனை மாநகர சபையில் இடமளிப்பதற்கு அவர் தீர்மானம் மேற்கொண்டதுடன் அதற்கான இணக்கத்தைத் தெரிவித்து நகர அபிவிருத்தி அதிகார சபையின் தவிசாளருக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருந்தார்.

அத்துடன் இப்பிரச்சினையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம், உள்ளூராட்சி, மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் ஆகியோரின் கவனத்திற்கும் கொண்டு சென்றார். இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் மேற்கொண்ட முயற்சியின் பயனாக இக்காரியாலயத்தை மூடும் தீர்மானம் நகர அபிவிருத்தி அதிகார சபையின் தவிசாளர் கலாநிதி ஜகத் முனசிங்கவினால் இரத்து செய்யப்பட்டதுடன் இதனை கல்முனை மாநகர சபையில் இயங்கச் செய்வதற்கும் அங்கீகாரம் வழங்கியிருந்தார்.

இதன் பிரகாரம் கல்முனை மாநகர சபையின் பொறியியல் பிரிவு இயங்கி வந்த கட்டிடத்தில், நகர அபிவிருத்தி அதிகார சபையின் கல்முனைப் பிராந்தியக் காரியாலயத்தை அமைப்பதற்கு மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் நடவடிக்கை எடுத்திருந்தார். கல்முனை மாநகர சபையின் பொறியியல் பிரிவு, தற்போது கல்முனை பொது நூலகத்தில் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.