லோக்சபா தேர்தலில் மீண்டும் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியமைந்தால் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
இதற்கு அவர் கூறும் காரணம் புத்திசாலித்தனமானது. தர்க்கபூர்வமானதாக தொனித்தாலும், எதிர்க்கட்சி ஆட்சி அமைத்தால் எந்த முன்னெடுப்பையும் பா.ஜ.க அப்போது அனுமதிக்காது என்ற தொனியில் பேசியுள்ளார்.
அதாவது அடுத்து காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தால் பாகிஸ்தானுடன் ஆன எந்த ஒரு அமைதிப் பேச்சுவார்த்தை முன்னெடுப்பையும் அப்போது எதிர்க்கட்சியாக இருக்கும் பா.ஜ.க எடுக்க அனுமதிக்காது. ஆட்சியைப் பிடித்தாலும் வலது சாரிகளின் விமர்சனங்களுக்கு ஆளாகப் பயந்து காஷ்மீர் விவகாரம் குறித்து எந்த முன்னெடுப்பையும் அது எடுக்காது.
இந்தக் காரணங்களினால், “ஒருவேளை வலது சாரி பா.ஜ.க வென்று விட்டால் காஷ்மீர் விவகாரம் குறித்து ஏதாவது ஒரு முடிவு எட்டப்பட வாய்ப்பிருக்கிறது” என்று கணிசமான அயல் நாட்டு நிருபர்கள் முன்னிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்தார்.
“இந்தியாவில் இப்போது நடந்து வருவதை நான் எண்ணிக் கூட பார்க்கவில்லை. முஸ்லிமாக இருப்பதே அங்கு தாக்கப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக இந்தியாவில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வரும் முஸ்லிம்கள் இன்றைய தினம் மிகு இந்து தேசியவாதத்தினால் கவலையடைந்துள்ளனர். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு போலவே மோடியும் அங்கு ‘அச்சம் மற்றும் தேசிய உணர்வு’ ஆகியவற்றைக் கொண்டு தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.
காஷ்மீரில் பிற மாநிலத்தவர்கள் சொத்து வாங்குவதைத் தடை செய்யும் காஷ்மீர் சிறப்பு உரிமைகள் சட்டம் ரத்து செய்யப்படும் என்ற பா.ஜ.க.வின் தேர்தல் வாக்குறுதி கூட பிரசாரமாகவே இருக்க வாய்ப்புள்ளது.
பாகிஸ்தான் ஏழை மக்களை ஏழ்மையிலிருந்து விடுவிக்க வேண்டுமென்றால் அண்டை நாடுகளான ஆப்கானிஸ்தான், இந்தியா, ஈரான் ஆகியவற்றுடன் அமைதியான உறவுகளை பேணுவது அவசியம்” என்றார் இம்ரான் கான்.
-Vidivelli