விக்கிலீக்ஸ் துணை நிறுவுனர் ஜூலியன் அசாஞ்சே லண்டனில் உள்ள ஈகுவடோர் நாட்டின் தூதரகத்தில் நேற்று கைது செய்யப்பட்டார்.
தான் சுவீடனுக்கு நாடு கடத்தப்படுவதை தடுக்க ஏழாண்டுகளுக்கு முன்பு தூதரகத்தில் தஞ்சம் கோரியிருந்தார் அசாஞ்சே. அசாஞ்சேவை கைது செய்த காவல்துறை, அவரைக் காவலில் வைத்திருப்பதாகவும் அவர் விரைவில் வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனத் தெரிவித்தனர்.
சர்வதேச விதிகளை ஜூலியன் அசாஞ்சே தொடர்ந்து மீறியதால், அவருக்கு தாங்கள் தஞ்சம் வழங்கியதை திரும்பப் பெறுவதாக ஈகுவடோர் நாட்டின் அதிபர் லெனின் மொரீனோ தெரிவித்தார்.
ஆனால் இது தொடர்பாக விக்கிலீக்ஸ் வெளியிட்ட செய்தியில், சர்வதேச சட்டவிதிகளை மீறி அசாஞ்சேக்கு தஞ்சம் வழங்கப்பட்டதை சட்டவிரோதமான முறையில் ஈகுவடோர் ரத்துச் செய்ததாக குறிப்பிட்டுள்ளது.
பிரிட்டனின் உள்துறைச் செயலர் சஜித் ஜாவிட் வெளியிட்ட ட்விட் செய்தியில், ”ஜூலியன் அசாஞ்சே தற்போது பொலிஸ் காவலில் உள்ளார் என்பதை நான் உறுதி செய்கிறேன். பிரிட்டனின் சட்டநடைமுறையை அவர் எதிர்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.