சமாதானத்தில் நம்பிக்கை கொண்டுள்ள எந்த இஸ்ரேலிய அரசாங்கத்துடனும் தான் பேச்சுவார்த்தையில் ஈடுபடத் தயாராக இருப்பதாக பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூட் அப்பாஸ் கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
நாம் பேச்சுவார்த்தை மேசையில் அமர்வதற்கு தயாராக இருக்கின்றோம், பேச்சுவார்த்தைக்காக எமது நேசக் கரங்கள் எப்போதும் நீட்டப்பட்டே இருக்கின்றன என மேற்குக் கரை நகரான ரமல்லாவில் வெளியிட்ட அறிக்கையில் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.
பலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையே சமாதானத் தீர்வு தொடர்பில் இரகசியமாக மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் ‘நாம் எமது உரிமைகளைக் கைவிடமாட்டோம், எமது நாட்டுக்கான தீர்வாக அமெரிக்கா முன்வைக்கும் தீர்வினையும் ஏற்றுக் கொள்ளமாட்டோம்’ எனவும் தெரிவித்துள்ளார்.
வொஷிங்டனின் சமாதானத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனினும், இஸ்ரேல் என்ற புதிய நாட்டை தோற்றுவிப்பதற்காக 1948 ஆம் ஆண்டு விரட்டி அடிக்கப்பட்ட தமது பூர்வீக இடத்திற்கு மீளத் திரும்புவதற்கான உரிமையினை விட்டுக் கொடுக்குமாறு பலஸ்தீன அகதிகளிடம் கோரப்படவுள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தன.
அமெரிக்காவின் திட்டத்தினை நூற்றாண்டின் முகத்தில் அறையப்பட்ட சம்பவம் என வர்ணித்துள்ள அப்பாஸ், அத் திட்டத்தினை நிராகரித்துள்ளார்.
2017 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இஸ்ரேலின் தலைநகராக ஜெரூசலத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அங்கீகரித்ததில் இருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பலஸ்தீன – இஸ்ரேலிய சமாதான முன்னெடுப்புக்கள் தொடர்பில் அமெரிக்காவின் எந்த வகிபாகத்தையும் அப்பாஸ் நிராகரித்து வருகின்றார்.
சமாதானத்திற்கான ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களை இஸ்ரேல் ஏற்றுக்கொள்ளுமானால் நாம் பேசுவதற்கு தயாராக இருக்கின்றோம். அவ்வாறில்லை என்றால், எமது உரிமைகள் கிடைக்கப் பெறும்வரை உறுதியாக இருப்போம் என அப்பாஸ் வலியுறுத்தினார்.
இஸ்ரேலியப் பாராளுமன்றமான நெஸ்ஸெட்டுக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக இஸ்ரேலிய வாக்காளர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை வாக்களித்துக் கொண்டிருந்த நிலையில் அப்பாஸின் அறிக்கை வெளியானது.
பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹுவின் வலதுசாரி லிகுட் கட்சி மற்றும் ஒய்வு பெற்ற ஜெனரலான பென்னி கன்ட்ஸ் தலைமையிலான நீலம், வெள்ளை அரசியல் கூட்டமைப்பும் இத் தேர்தலில் மோதும் பிரதான கட்சிகளாகும்.
தேர்தல் பிரசாரத்தின் போது குடியேற்றவாசிகளில் ஒரு நபர் கூட மேற்குக் கரையிலிருந்து அகற்றப்படமாட்டார் எனவும், மேற்குக் கரை இஸ்ரேலின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் எனவும், ஜெரூசலம் பிரிக்கப்பட மாட்டாது எனவும் தெரிவித்திருந்தார்.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் குடியேற்றத்திற்கான கட்டட நிர்மாணிப்புக்களை நிறுத்துவதற்கு இஸ்ரேல் மறுப்புத் தெரிவித்ததன் காரணமாக அமெரிக்க ஏற்பாட்டிலான சமாதானப் பேச்சுக்கள் 2014 ஆம் ஆண்டு முறிவடைந்தன.
-vidivelli