நான்கு நூற்றாண்டுகளாக முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலமாக விளங்கிய கருமலையூற்று பள்ளிவாசல் அரச படையினரால் இடித்து அழிக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதிலிருந்து இன்றுவரை ஒரு தசாப்தகாலமாக கருமலையூற்று பள்ளிவாசல் காணி படையினரின் கட்டுப்பாட்டிலே இருக்கின்றது.
மக்களை நல்வழிப்படுத்தும் வணக்கஸ்தலமான கருமலையூற்று பள்ளிவாசல் 2014 ஆம் ஆண்டு படையினரால் உடைத்து சிதைக்கப்பட்டது. அந்த சிதைவுகளுக்கு மத்தியிலே இன்று அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 300 குடும்பங்களைச் சேர்நதவர்கள் கூடாரம் அமைத்து பாய்விரித்து ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றுகிறார்கள்.
அன்று திருகோணமலை பிரதேசத்தைச் சேர்ந்த நாச்சிக்குடா, வெள்ளை மணல், கருமலையூற்று கிராமங்களைச்சேர்ந்த சுமார் 1000 குடும்பங்கள் இப்பள்ளிவாசலைப் பயன்படுத்தின. பள்ளிவாசல் 2014 இல் உடைக்கப்பட்டதையடுத்து பல போராட்டங்களின் பின்பு 2015 இல் தேர்தல் நடைபெற்ற காலப்பகுதியில் அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கருமலையூற்று பள்ளிவாசலில் முஸ்லிம்கள் சமய வழிபாடுகளை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கினார் என்றாலும் பள்ளிவாசலுக்குச் செல்லும் பிரதான பாதை படையினரால் மறிக்கப்பட்டுள்ளது. மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் மாற்று வழியைப் பயன்படுத்துகின்றனர்.
பள்ளிவாசலுக்கு சொந்தமான 139 பேர்ச்சஸ் காணியும் தற்போது தரைப்படை கவச வாகன 4 ஆம் படைப் பிரிவின் ஆக்கிரமிப்பின் கீழே இருக்கிறது. பள்ளிவாசலை மீள் நிர்மாணிக்க 20 பேர்ச்சஸ் காணி வழங்குவதாக படைப்பிரிவு வாய்மூல உறுதியே வழங்கியுள்ளது. சட்ட ரீதியான ஆவணங்கள் எதுவும் வழங்கப்படவில்லை. அதனால் பிரதேச செயலகம் பள்ளிவாசல் நிர்மாணத்திற்கான அனுமதியை வழங்க மறுத்து வருகிறது என பள்ளிவாசல் நிர்வாகசபையின் தலைவர் எம்.ஐ. ஜவாஹிர் தெரிவித்துள்ளார்.
நல்லிணக்கம், தேசிய ஒற்றுமை, மதச் சுதந்திரம் பற்றி பேசிவரும் அரசாங்கம் முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலமான பள்ளிவாசலையும் பள்ளிவாசல் காணியையும் படையினர் வசம் ஒப்படைத்திருப்பது எவ்வகையிலும் அனுமதிக்க முடியாததாகும். அரசுக்கெதிராக எவ்வித போராட்டங்களையும் முன்னெடுக்காத சமாதான விரும்பிகளான முஸ்லிம்களை இவ்வாறு தண்டிப்பது கண்டிக்கத்தக்கதாகும்.
அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என இருபதுக்கும் மேற்பட்ட முஸ்லிம் உறுப்பினர்கள் நாட்டின் அதியுயர் சபையான பாராளுமன்றத்தைப் பிரதி நிதித்துவப்படுத்துகிறார்கள். முஸ்லிம் சமய விவகாரங்களுக்கென தனியாக ஒரு அமைச்சர் இருக்கிறார். கிழக்கு மாகாணத்தின் ஆளுநரும் ஒரு முஸ்லிமே என்றாலும் கருமலையூற்று பள்ளிவாசல் தொடர்ந்தும் படையினரின் ஆதிக்கத்தில் இருக்கிறது.
வடக்கில் ஆயிரக்கணக்கான ஏக்கர் மக்களது சொந்தக்காணிகள் படையினர் வசமிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. ஆனால் கிழக்கில் கருமலையூற்று பள்ளிவாசல் காணி ஒரு தசாப்த காலமாகியும் விடுவிக்கப்படவில்லை. முஸ்லிம் அரசியல் தலைமைகள் இதில் அக்கறை செலுத்தாமையே இதற்குக் காரணமாகும். அவர்கள் கூடுதலான அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டு வாயடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
கல்வி அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கருமலையூற்று பள்ளிவாசல் விவகாரத்தை பாராளுமன்றின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார். ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் இது பற்றி வாய்திறக்க வேண்டும். கருமலையூற்று பள்ளிவாசல் காணி மீளப் பெறப்பட்டு அங்கு புதியவொரு பள்ளிவாசல் மீள் நிர்மாணம் பெறவேண்டும். இது இவ்வுலக உழைப்பல்ல மறுமைக்கான உழைப்பு என்பதை மக்கள் பிரதிநிதிகள் உணர வேண்டும்.
-Vidivelli