இஸ்ரேல் சிறைச்சாலையில் நிலவும் மோசமான நிலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இஸ்ரேலிய சிறைகளிலுள்ள பலஸ்தீனக் கைதிகள் கால வரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றினை கூட்டாக ஆரம்பித்துள்ளனர்.
சுமார் 30 கைதிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இப் போராட்டத்தை ஆரம்பித்தனர், எதிர்வரும் வாரங்களில் மேலும் 1,500 பேர் இப் போராட்டத்தில் இணைந்து கொள்ளவுள்ளனர் என அரசியல் கைதிகள் உள்ளிட்ட கைதிகளால் உள்ளூர் ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் தற்போதைய பிரதமரான வலதுசாரி லிகுட் கட்சித் தலைவர் பெஞ்சமின் நெட்டன்யாகு ஐந்தாவது தடவையாக பிரதமர் பதவிக்குப் போட்டியிடும் இஸ்ரேலியப் பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு சில நாட்கள் இருக்கும் நிலையில் இப் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.
பிரதானமாக தெற்கு நெகெவ் பிராந்தியத்தில் அமைந்துள்ள மோசமான பெயரைச் சம்பாதித்துள்ள இஸ்ரேலிய இராணுவச் சிறையில் கையடக்கத் தொலைபேசி அழைப்புக்கள் வருவதைத் தடுக்கும் உபகரணம் பொருத்தப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கைதிகள் உணவு மற்றும் பானம் அனைத்தையும் மறுத்து வருகின்றனர்.
இந்த உபகரணம் கைதிகளின் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் ஒன்றாகும். அது புற்றுநோயையும் ஏற்படுத்தக்கூடியது என கைதிகள் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
பயங்கரவாதச் செயற்பாடுகளை நிறுத்துவதற்கு அவை அவசியமாகும் என இஸ்ரேலியப் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கிலாட் ஏர்டன் தெரிவித்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டினை பலஸ்தீனக் கைதிகள் மறுத்துள்ளனர்.
கையடக்கத் தொலைபேசி சேவை இல்லாமல் தமது குடும்பத்தினருடன் தொடர்புகளை ஏற்படுத்த முடியாதுள்ளது. பெரும்பாலான கைதிகளின் உறவினர்களால் அவர்களை வந்து பார்க்க முடியாத நிலையும் காணப்படுகின்றது.
உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடும் கைதிகள் பாதுகாப்புக் காரணங்கள் என்ற போர்வையில் தனிமைச் சிறையில் அடைக்கப்படல், ஒரு சிறைக் கூடத்திலிருந்து பிறிதொரு சிறைக் கூடத்திற்கு மாற்றப்படுதல் உள்ளிட்ட தண்டனைகளுக்கும் உள்ளாகப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகின்றது.
குற்றம் சுமத்தப்படாது தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் 200 பேர் உள்ளடங்கலாக 5,450 பலஸ்தீனக் கைதிகள் இஸ்ரேலினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஜெரூசலத்தைத் தளமாகக் கொண்ட பலஸ்தீன கைதிகளின் உரிமைகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.
-Vidivelli