துருக்கியும் பங்களாதேஷும் இரு நாடுகளினதும் மக்களின் நலனுக்காக மருந்துப் பொருட்களையும் சுகாதார சேவைகளையும் பரிமாறிக் கொள்வதற்கான உடன்படிக்கை ஒன்றில் கடந்த திங்கட்கிழமை கைச்சாத்திட்டன.
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவுக்கு விஜயம் செய்துள்ள துருக்கிய பிரதி சுகாதார அமைச்சர் எமைனி அல்ப் மெசே கையொப்பமிடும் நிகழ்வில் துருக்கியின் பிரதிநிதியாகக் கலந்துகொண்டார்.
இரு நாடுகளினதும் மக்களின் நீண்ட கால நலனுக்காக சுகாதாரத் துறை பாரிய பணியினை ஆற்ற வேண்டியுள்ளது என புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதன் பின்னர் மெசே தெரிவித்தார்.
துருக்கிய மருந்துப் பொருட்களின் உயர்தரம் சம்பந்தமாக பெருமையுடன் கருத்து வெளியிட்ட அவர் ‘தற்போது முதல் பரஸ்பரப் பகிர்வு மூலமாக இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக இடைவெளி சீரடையும்’ எனவும் தெரிவித்தார்.
குறைந்த வருமானம் பெறுகின்ற நாடு என்ற நிலையிலிருந்து நடுத்தர வருமானம் பெறுகின்ற நாடு என்ற நிலைக்கு வந்திருக்கும் பங்களாதேஷின் துரித பொருளாதார முன்னேற்றத்தினை அவர் பாராட்டினார்.
தரமான மருந்துப் பொருட்களுக்கு குறைந்த விலை என்ற வளத்தினைக் கொண்ட நாடாக பங்களாதேஷ் காணப்படுவதாக பங்களாதேஷ் மருந்துப்பொருள் உற்பத்திக் கைத்தொழில் சங்கத்தின் தலைவரான நஸ்முல் ஹஸன் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தில் குறிப்பாக சுகாதார துறையில் வர்த்தகத்தை மேம்படுத்த துருக்கி உதவ வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
இரு நாடுகளும் பொதுவான கலாசார மற்றும் சமய விழுமியங்களை நீண்டகாலமாக பகிர்ந்து வருகின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டினார். மருந்துப் பொருள் துறையோடு ஆரம்பித் திருக்கின்ற வர்த்தகம் ஏனைய துறைகளோடும் உயர்நிலையை அடையும் எனவும் நஸ்முல் ஹஸன் நம்பிக்கை தெரிவித்தார்.
-Vidivelli