மஹிந்த ராஜபக்ஷ தரப்பினரே மைத்திரியின் முதுகில் குத்தினர்
ஈடுபாடின்றியே பேச்சுக்கு செல்கிறோம் என்கிறார் தயாசிறி
வெறும் பாராளுமன்ற உறுப்பினரான மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கி ஆட்சியை அமைக்க ஜனாதிபதி நடவடிக்கையெடுத்து அதில் நெருக்கடியை சந்தித்த நேரத்தில் ஜனாதிபதிக்கு ஆதரவாக இல்லாது மஹிந்த தப்பினர் ஜனாதிபதியின் முதுகில் குத்தினார்கள். இந்த மனக் கசப்புகளுடன்தான் மீண்டும் பேச்சுவார்த்தையில் அமர்கின்றோம் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர எம்.பி தெரிவித்தார். ஜனாதிபதியை காப்பாற்றவே வரவு செலவு திட்டத்தை நாம் எதிர்க்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வாராந்த செய்தியாளர் சந்திப்பு நேற்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
வரவு செலவு திட்டத்தை தோற்கடிக்க நோக்கும் இருக்கவில்லை. அதுமட்டுமல்ல, இந்த வரவு செலவு திட்டத்தை தோற்கடிக்க மஹிந்த தரப்பினருக்கும் எந்த நோக்கமும் இருக்கவில்லை. அவர்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எம்முடன் பேச்சுவார்த்தை நடத்தி வரவு செலவு திட்டத்தை தோற்கடிக்க எந்த முயற்சிகளையும் முன்னெடுக்கவில்லை. இப்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் அரசாங்கம் பாதுகாக்கப்படுவதாக கூறுவது முட்டாள் தனமான விமர்சனமாகும்.
வாக்களிக்காததும் அரசாங்கத்தை எதிர்க்கவே வாக்கெடுப்பு தினத்தன்று நாம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்றக் குழுவாக கூடி பொது இணக்கப்பாடு ஒன்றுக்கு அமையவே வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது நிராகரித்தோம். இது அரசாங்கத்தை எதிர்க்கும் நோக்கமேயாகும். இதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பொது எதிரணிக்கு ஆதரவளிக்கவில்லை என கூறுவது தவறானது.
மஹிந்த தரப்பே முதுகில் குத்தியது. கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் அரசியல் புரட்சியை மைத்திரிபால சிறிசேன முன்னெடுக்க அதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முழுமையான ஆதரவை வழங்கியது. வெறும் பாராளுமன்ற உறுப்பினரான மஹிந்த ராஜபக் ஷவை பிரதமராக்கி பாராளுமன்றத்தை கலைத்து மீண்டும் எமது ஆட்சியை உருவாக்குவோம் என நாம் முடிவெடுத்து மஹிந்த ராஜபக் ஷவை பிரதமராக்கி இறுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே நெருக்கடியில் தள்ளப்பட்டார். அதன்போது பாராளுமன்றத்தில் 113 பலமும் இல்லாது, நீதிமன்ற ஆதரவும் இல்லாது இறுதியாக ஐக்கிய தேசிய கட்சியையும் பகைத்துக் கொண்டு தனித்து ஜனாதிபதி போராடிய வேளையில் பொதுஜன பெரமுனவினர் ஜனாதிபதிக்கு ஆதரவாக செயற்படாது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து பொதுஜன பெரமுனவிற்கு கட்சி தாவினர்.
இது ஜனாதிபதியின் முதுகில் குத்திய செயலாகும். மஹிந்த தரப்பினர் செய்த மிகப்பெரிய துரோகச் செயல் இதுவாகும். ஜனாதிபதி இவர்களை நம்பியே ஆட்சியை கலைக்க நடவடிக்கை எடுத்தார். ஆனால் இவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியையும் கட்சியின் ஆதரவாளர்களையும் பழிவாங்கும் நோக்கத்திலேயே நடந்துகொண்டனர். இந்த மனக் கசப்புகள் எமது மனங்களில் உள்ளன.
ஈடுபாடு இல்லாத உறவுக்கே தயாராகின்றோம்
இன்றும் இரண்டு தரப்பினரும் இணைய வேண்டும் என்ற பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நாளைய தினமும் நாம் பேசுகின்றோம். என்றார்.
-Vidivelli