கிழக்கு லிபியாவைத் தளமாகக் கொண்ட தளபதி ஹலீபா ஹப்தரினால் தலைநகர் திரிப்போலியைக் கைப்பற்றுவதற்கு மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கையினை தோஹாவைத் தளமாகக் கொண்ட முஸ்லிம் அறிஞர்கள் அமைப்பு கண்டித்துள்ளது.
இரத்தத்தை ஓட்டுவதற்கும், குழப்பங்களை பரவச் செய்வதற்கும் லிபிய மக்களைப் பிரிப்பதற்கும் சில அரபுக்களிடம் நிதியினையும் ஆதரவினையும் பெற்றுக்கொண்டுள்ள ஹப்தர் தலைநகரை ஆக்கிரமிப்பதற்கும் அரபு நாடுகளினாலும் ஐக்கிய நாடுகள் சபையினாலும் அங்கீகரிக்கப்பட்ட தேசிய இணக்கப்பாட்டு அரசாங்கத்தை இல்லாதொழிப்பதற்கும் தலைப்பட்டிருக்கின்றார் என முஸ்லிம் அறிஞர்களின் சர்வதேச ஒன்றியம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
திரிப்போலியிலுள்ள தேசிய இணக்கப்பாட்டு அரசாங்கம் அரபு லீக் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றில் அங்கீகரிக்கப்பட்ட உறுப்புரிமை கொண்டதாகும் எனவும் முஸ்லிம் அறிஞர்களின் சர்வதேச ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும் கிளர்ச்சிக்காரர்களின் இராணுவம் மற்றும் படையினரின் செயற்பாடுகளை எதிர்கொள்ளும் நிலையில் அவை அந்த அரசாங்கத்தினை கைவிட்டுள்ளமையினைக் கண்டித்துள்ள அவ்வமைப்பு அரபு நாடுகள் சபையும் ஹப்தரின் தாக்குதலுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் எனவும் வன்முறைகளைத் தோற்கடிக்கவும் ஒற்றுமையை அடைந்து கொள்வதற்கும் லிபிய மக்களுக்கு சட்ட ரீதியான தன்மையும் ஸ்திரத் தன்மையும் கிடைப்பதற்கு போதுமான ஆதரவினை தேசிய இணக்கப்பாட்டு அரசாங்கத்திற்கு வழங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. தேசிய இணக்கப்பாட்டு அரசாங்கப் படையினரிடமிருந்து திரிப்போலியை மீளக் கைப்பற்றுவதற்கான இராணுவ நடவடிக்கை ஹப்தரினால் கடந்த வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.
சுமார் நான்கு தசாப்தங்களாக அதிகாரத்திலிருந்ததன் பின்னர் ஜனாதிபதி முஅம்மர் கடாபி , நேட்டோ ஆதரவுடனான கிளர்ச்சியினை அடுத்து பதவி கவிழ்க்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட 2011 ஆம் ஆண்டின் பின்னர் லிபியாவில் நெருக்கடி நிலை தொடர்கின்றது.
அதிலிருந்து இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட அரசியல் வேறுபாடு அதிகாரப் போட்டியினை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தரப்பு ஹப்தருடன் தொடர்புபட்ட கிழக்கு நகரான அல்-பைதாவிலும் மற்றைய தரப்பு திரிப்போலியிலும் இருக்கின்றன.
-Vidivelli