ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகரில் களியாட்டத்தின் இடையே கைது செய்யப்பட்டு தற்போது டுபாயில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரபல பாதாள உலகத் தலைவன் மாகந்துரே மதூஷை இலங்கையிடம் ஒப்படைக்க டுபாய் இணக்கம் தெரிவித்துள்ளது.
எனினும் மதூஷ் தன்னை இலங்கைக்கு நாடு கடத்த வேண்டாம் என மேன் முறையீடு செய்துள்ள நிலையில், அந்த மேன் முறையீடு எதிர்வரும் 18 ஆம் திகதி ஆராயப்படவுள்ளதாகவும், அதன் பின்னர் தீர்மானம் எடுக்கப்பட்டு பெரும்பாலும் அவர் இலங்கைக்கு நாடு கடத்தப்படலாம் என டுபாய் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வாரம் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி திலக் மாரப்பன, டுபாய் சென்று அங்கு அமீரகத்தின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் அன்வர் பின் மொஹம்மட்டை சந்தித்திருந்தார். இதன் போது மதூஷை இலங்கையிடம் ஒப்படைக்கும் படி அவர் வேண்டியிருந்தார். இந்த சந்திப்பின் போது சட்ட மா அதிபர் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவரும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவரும் கலந்துகொண்டிருந்தனர்.
இந் நிலையிலேயே மதூஷை இலங்கையிடம் ஒப்படைக்க டுபாய் இணக்கம் தெரிவித்ததாக அறிய முடிகின்றது. மதூஷை இலங்கைக்கு நாடு கடத்தும் போது, இலங்கையிடம் முன் கூட்டியே அறிவிப்பதாகவும், விமானத்திலும் பலத்த பாதுகாப்புடன் அவரை அழைத்து வந்து இலங்கையிடம் ஒப்படைப்பதாகவும் இதன்போது டுபாய் உயர் மட்டத்தினர் இலங்கையிடம் உறுதியளித்துள்ளதாக தெரிகின்றது.