போதைப் பொருள் விற்பனையாளர், பாவனையாளர்களுக்கு இஸ்லாமிய ஷரீஆ, நாட்டின் சட்டத்தின் கீழ் தண்டனைகள்
ஊரிலிருந்து தனிமைப்படுத்தப்படுவர்; நன்மை தீமைகளில் பள்ளிவாசல் பங்கெடுக்காது; ஜனாஸாவை அடக்கவும் தனியான இடம் கல்முனை பெரிய பள்ளிவாசல் போதை ஒழிப்பு மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றம்
(அஸ்லம் எஸ்.மெளலானா,
எஸ்.எல். அப்துல் அஸீஸ்)
கல்முனையில் புகைத்தல் மற்றும் போதைப்பொருள் பாவனையை முற்றாக தடுக்கும் பொருட்டு ஒழுங்கு செய்யப்பட்ட போதை ஒழிப்பு பிரகடன மாநாடு நேற்று முன்தினம் சனிக்கிழமை கல்முனை முகைதீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது.
கல்முனை புகைத்தல், போதைப்பொருள் ஒழிப்பு செயலணியின் ஏற்பாட்டில் அதன் தலைவரான டாக்டர் எஸ்.எம்.ஏ.அஸீஸ் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி அல்ஹாபிழ் என்.எம்.அப்துல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் உட்பட பொலிஸ் மற்றும் முப்படைகளின் உயர் அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், உலமாக்கள், கல்விமான்கள், வர்த்தகர்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களும் பெருந்திரளானோர் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது உடனடியாக அமுலுக்கு வரும் பிரகடனங்கள், எதிர்காலத்தில் நடைமுறைக்கு வரும் பிரகடனங்கள் என்று இரு வகையான பிரகடனங்கள் ‘அல்லாஹு அக்பர்’ எனும் கோஷத்துடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.
உடனடியாக அமுலுக்கு வரும் பிரகடனங்கள்
01. கல்முனைப் பிரதேசத்தில் புகைத்தல் மற்றும் போதைப் பொருட்களை பாவித்தல், அவற்றை விற்பனை செய்தல், விநியோகித்தல், கொண்டு செல்லுதல், பாதுகாத்தல், சேமித்து வைத்தல் ஆகிய அனைத்தும் இன்று முதல் முற்றாகத் தடை செய்யப்படுகின்றன.
02. கல்முனைப் பிரதேசத்தில் வாழும் ஒரு நபர் மேற்படி குற்றங்களில் ஈடுபடும்போது புகைத்தல், போதைப் பொருள் ஒழிப்பு செயலணியினால் அமைக்கப்படும் விசாரணை சபையின் முறையான விசாரணை ஒன்றின் முடிவில் நிரூபிக்கப்படின் இஸ்லாமிய ஷரீஆவிற்கமையவும் இலங்கை ஜனநாயகக் குடியரசின் நீதித்துறைச் சட்டதிட்டங்களை அனுசரித்தும் குறித்த நபருக்கு சீர்திருத்த (தஃஸீர்) தண்டனைகள் நிறைவேற்றப்படும் .
03. குறித்த குற்றச்செயல் தொடர்பான சாட்சியங்களை மறைத்தல், விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்தல், குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு உதவுதல், ஊர்க் கட்டுப்பாட்டினை மீறுதல் ஆகிய அனைத்தும் தடுக்கப்படுகின்றன. இவற்றில் ஈடுபடும் எவராக இருப்பினும் அவர்களுக்கும் தண்டனைகள் நிறைவேற்றப்படும்.
04. மேற்படி குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக பொலிஸ் திணைக்களம், நீதிமன்றம் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற விசாரணை சபைகள் எடுக்கும் சகல நடவடிக்கைகளுக்கும் இச்செயலணி பூரண ஒத்துழைப்பை வழங்கும்.
அதேவேளை மேற்படி கட்டுப்பாடுகளை மீறி புகைத்தல், போதைப்பொருள் விடயத்தில் தொடர்ந்தும் ஈடுபடுபவர்கள் அல்லது இது விடயமாக நீதிமன்றத்தினால் தண்டனை வழங்கப்பட்டவர் புகைத்தல், போதைப்பொருள் செயலணியின் விசாரணை சபையிடம் குற்றத்தை ஒப்புக் கொண்டு தௌபாச் செய்ய மறுத்தால் கீழ் குறிப்பிடப்படும் தண்டனைகள் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகும்.
01. அவர்களின் பெயர்களை பள்ளிவாசல்களின் விளம்பரப் பலகையில் காட்சிப்படுத்தி, ஊர்க்கட்டுப்பாட்டை மீறியவர் என இனங்காட்டுதல்.
02. குறித்த நபரின் திருமணம், மரணம் முதலான நன்மை தீமைகளில் பள்ளிவாசலின் பங்களிப்புகளை விலக்கிக் கொள்ளுதல்.
03. குறித்த நபர் ஊரிலிருந்து முற்று முழுதாக தனிமைப்படுத்தப்படுவார்.
04. குறித்த நபரின் ஜனாஸாவை அடக்கம் செய்வதற்கு மையவாடியில் தனியான இடம் ஒதுக்கப்படும்.
இப் பிரகடனங்கள் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து நிகழ்வில் பங்கேற்றிருந்த அனைவரும் பைஅத் எனும் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
இப் போதையொழிப்பு மாநாட்டிற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் அன்றைய தினம் கல்முனை வர்த்தக சமூகத்தினர் தங்கள் வியாபார நிலையங்களை மூடி ஆதரவினை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.