எம்.ஐ.அப்துல் நஸார்
இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான அமைப்பு மற்றும் அரபு லீக் ஆகியன அதிகரித்து வரும் மோதல்கள் தொடர்பில் லிபியாவில் போரில் ஈடுபட்டு வரும் இரு தரப்புக்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ள அதேவேளை அரசியல் தீர்வொன்றைக் காணுமாறு கடந்த வெள்ளிக்கிழமை கோரிக்கை விடுத்துள்ளன.
நாட்டை மிகவும் சிக்கலுக்குள் தள்ளி விடக்கூடிய மோதல் நிலையினைத் தணிக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்புக்களிடம் அறிக்கையொன்றின் மூலம் இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. அரபு லீக் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் தென் பகுதியில் அதிகரித்து வரும் பதற்ற நிலையினை இரு தரப்பும் தீர்க்க வேண்டும் எனவும் அரசியல் தீர்வு தொடர்பில் உறுதியாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடனான லிபியாவின் கூட்டரசாங்கத்தின் தலைமையகமான திரிப்போலியை கைப்பற்றுவதற்கு இராணுவத் தளபதியான ஹலீபா ஹப்தர் கடந்த வியாழக்கிழமை நடவடிக்கை ஒன்றினை ஆரம்பித்தார். பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையை சீர்குலைப்பதை இலக்காகக் கொண்ட எவ்வித அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளவும் பதில் நடவடிக்கை எடுக்கவும் தயாராக இருக்குமாறு அரசாங்கப் படையினருக்கு திருப்போலியை தளமாகக் கொண்ட அரசாங்கத்தின் தலைவரான பாயெஸ் அல்-சர்ராஜ் கட்டளை பிறப்பித்துள்ளார்.
சுமார் நான்கு தசாப்தங்களாக அதிகாரத்தில் இருந்ததன் பின்னர் ஜனாதிபதி முஅம்மர் கடாபி, நேட்டோ ஆதரவுடனான கிளர்ச்சியினையடுத்து பதவி கவிழ்க்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட 2011 ஆம் ஆண்டின் பின்னர் லிபியாவில் நெருக்கடி நிலை தொடர்கின்றது. அதிலிருந்து இரு தரப்புக்களுக்கும் இடையில் ஏற்பட்ட அரசியல் வேறுபாடு அதிகாரப் போட்டியினை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தரப்பு ஹப்தருடன் தொடர்புபட்ட கிழக்கு நகரான அல்-பைதாவிலும் மற்றைய தரப்பு திரிப்போலியிலும் இருக்கின்றன.