ஏ.ஆர்.ஏ.பரீல்
இவ்வருடத்துக்கான ஹஜ் பயணிகளின் தெரிவு பதிவுகள் அனைத்தும் பூரணமாகி விட்டதாகவும் ஹஜ் கடமைக்கான மேன்முறையீடுகள் எதுவும் இதன் பிறகு ஏற்றுக் கொள்ளப்படமாட்டாதெனவும் அரச ஹஜ் குழுவின் பதில் தலைவர் எம்.எச்.எம். பாஹிம் தெரிவித்தார்.
ஹஜ் தொடர்பான விழிப்பூட்டும் கருத்தரங்குகளில் கலந்து கொள்ளாத ஹஜ் யாத்திரிகர்களுக்கு இம்மாத இறுதியில் ஹஜ் தொடர்பான கருத்தரங்குகளை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஹஜ் செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;
ஹஜ் யாத்திரிகர்கள் ஹஜ் கடமையை மேற்கொள்வதற்காக தெரிவு செய்துள்ள ஹஜ் முகவர்களுடன் உடன்படிக்கையினைச் செய்து கொள்ளவேண்டும். அதில் ஹஜ் கட்டணம், மக்காவிலும் மதீனாவிலும் தங்குமிட வசதிகள், ஹஜ் கடமையின் கால எல்லை என்பன விபரமாக உள்ளடக்கிக் கொள்ளவேண்டும்.
உப முகவர்கள் ஊடாக ஹஜ் முகவர்களைத் தெரிவு செய்து கொள்வதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். உப முகவர்களுடன் ஹஜ் யாத்திரிகர்கள் ஏதும் உடன்படிக்கைகளைச் செய்து கொண்டால் அதற்கு அரச ஹஜ் குழு பொறுப்பாக மாட்டாது.
ஹஜ் யாத்திரிகர்களுக்கு கருத்தரங்குகள், விழிப்புணர்வு மாநாடுகள் மூலம் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும் என்றார்.