‘தெரண’ சிங்கள தொலைக்காட்சி சேவையில் கடந்த வாரம் ஒளிபரப்பான நேர்காணல் ஒன்று தொடர்பிலேயே இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டது. குறிப்பாக சிங்கள மக்கள் மத்தியிலும் இந்த நேர்காணல் மிகுந்த கவனயீர்ப்பைப் பெற்றிருந்தது.
இந் நிகழ்ச்சியை குறித்த தொலைக்காட்சியில் நேரடியாக இலட்சக் கணக்கானோர் பார்வையிட்டிருக்க, நேற்று மாலை வரை ‘யூ டியூப்’ இணையதளத்தில் 4 இலட்சம் தடவைகள் பார்வையிடப்பட்டுள்ளது. நேற்றைய தினம் இலங்கையில் அதிகம் பார்வையிடப்பட்ட ‘யூ டியூப் ‘ வீடியோக்களில் 3 ஆவது இடத்தை இந் நிகழ்ச்சி பெற்றிருந்தது.
குறித்த நிகழ்ச்சி இவ்வளவு தூரம் பிரபல்யம் அடைந்தமைக்கான காரணம் இலங்கை முஸ்லிம்கள் தொடர்பில் பெரும்பான்மை சிங்கள மக்களின் மனங்களில் குடிகொண்டுள்ள சந்தேகங்கள், தப்பிப்பிராயங்கள் கேள்விகளாக முன்வைக்கப்பட்டமையும் அதற்கு பதிலளிக்கப்பட்ட விதமுமாகும்.
இந் நிகழ்ச்சியில் விருந்தினராக அஷ்ஷெய்க் அம்ஹர் ஹகம் தீனி பங்கேற்றிருந்தார். தனது சிங்கள மொழிப் புலமை மூலமாகவும் சிங்கள மொழி மூல இஸ்லாமிய பிரசாரப் பணியில் ஈடுபட்ட அனுபவத்தின் மூலமும் அவர் இந் நிகழ்ச்சியில் முன்வைக்கப்பட்ட கேள்விகளை சலனமின்றி எதிர்கொண்டிருந்தார். அந்த வகையில் இலங்கை முஸ்லிம்கள் பெருமைப்படும் வகையில் கருத்துக்களை முன்வைத்த அஷ்ஷெய்க் அம்ஹர் பாராட்டப்பட வேண்டியவராவார்.
இந்த நிகழ்ச்சி இலங்கை முஸ்லிம்களுக்கு பல செய்திகளைச் சொல்லியுள்ளது. அவற்றில் சிங்கள மக்கள் மத்தியில் முஸ்லிம்கள் தொடர்பாக எவ்வளவு சந்தேகங்களும் தப்பிப்பிராயங்களும் உள்ளன என்பது முதலாவதாகும். அந்த வகையில் இவ்வாறான சந்தேகங்களுக்கு பதிலளிக்கவும் தெளிவுகளை வழங்கவும் இந்த ஒரு நிகழ்ச்சி மாத்திரம் போதாது. அதேபோன்று இவற்றுக்கு பதிலளிக்க ஒரு மௌலவி மாத்திரம் போதுமானவரல்லர்.
எனவேதான் சிங்கள மக்கள் மத்தியில் உள்ள சந்தேகங்களைப் போக்குவதற்கான பாரிய வேலைத்திட்டங்கள் தேசிய ரீதியாக முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை இந் நிகழ்ச்சி வெகுவாக உணர்த்தியுள்ளது. ஏலவே சில முஸ்லிம் அமைப்புகள் இதனைச் செய்தாலும் அதன் வீரியம் போதாது. குறிப்பாக இதுபோன்ற தேசிய தொலைக்காட்சிகள் மூலாகவும் பத்திரிகைகள் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் கவர்ச்சியாகவும் தர்க்க ரீதியாகவும் சிங்கள மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நமது பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
அவ்வாறு இஸ்லாம் பற்றியும் முஸ்லிம்கள் பற்றியும் உள்ள தப்பபிப்பிராயங்களை நீக்கும் பிரசாரங்களை சிறப்பாக முன்கொண்டு செல்ல வேண்டுமாயின் அதற்கு சிறந்த அறிவும் ஆற்றலும் கொண்ட சிங்கள மொழிப் புலமைவாய்ந்த முஸ்லிம் அறிஞர்கள் தேவை. இந்த இடைவெளியை நிரப்புவதற்கு ஒரு அம்ஹர் மௌலவியால் மாத்திரம் முடியாது. இதற்காக நூற்றுக் கணக்கானோர் உருவாக்கப்பட வேண்டும்.
அந்த வகையில் சிங்கள மொழி மூல உலமாக்களை உருவாக்குவதற்கான முயற்சிகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும். ஏலவே சில கல்லூரிகள் இதற்காக இயங்கி வருகின்றன. அவற்றை மேலும் பலப்படுத்த வேண்டும். அவற்றுக்கு உதவ வேண்டும். தமது பிள்ளைகளை அவற்றில் இணைத்து சிங்கள மொழி மூல இஸ்லாமிய அறிஞர்களை உருவாக்க சமூகம் முன்வர வேண்டும்.
இந்த நிகழ்ச்சியைப் புகழ்ந்துவிட்டுப் போவதாலும் அல்லது விமர்சித்துவிட்டுப் போவதாலும் எதுவும் நடந்துவிடப் போவதில்லை. மாறாக இதிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறான சந்தர்ப்பங்களை எதிர்காலத்தில் உருவாக்கி அதன் மூலம் தெளிவுகளை வழங்க திட்டமிட வேண்டும். அதற்கான மனித வளங்களையும் ஊடக வளங்களையும் உருவாக்க வேண்டும். இது பற்றி சகலரும் சிந்திப்பார்கள் என நம்புகிறோம்.
-Vidivelli