அக்குறணையில் அடிக்கடி ஏற்படும் வெள்ளப்பெருக்கை தடுக்கும் செயற்திட்டத்துக்கான விசேட செயலணி அமைப்பதற்குரிய அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதேசத்திலுள்ள அரச நிறுவனங்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் ஒருங்கிணைந்த செயலணி அமைப்பது தொடர்பாகவும் இச்செயலணியினூடாக முன்னுரிமைப்படுத்தப்பட வேண்டிய திட்டங்களை அமுல் நடத்தி மிகக் குறுகிய காலத்திற்குள் அதனை அமுல் நடத்துவதற்கான முன்னெடுப்புக்கள் தொடர்பாகவும் ஆராயும் உயர்மட்டக் கலந்துரையாடல் நேற்றைய தினம் பாராளுமன்ற குழு அறையில் நடைபெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம், தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் ஏ.எச்.எம்.ஹலீம் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் வீதி அபிவிருத்தி அதிகார சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம், அனர்த்த முகாமைத்துவ நிலையம், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை அமைச்சு, தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சு, நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சு, மகாவெலி அதிகார சபை, நில அளவை திணைக்களம், இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனம், நீர்ப்பாசன திணைக்களம், அக்குறணை பிரதேச சபை, அக்குறனை ஜம்மியதுல் உலமா, அஸ்னா பள்ளிவாசல் நிர்வாக சபை மற்றும் அக்குறனை வர்த்தக சங்கம் என்பவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
பிங்கா ஓயாவில் நிரம்பியுள்ள மண் உரிய காலத்தில் அகற்றப்படாமை, தடுப்புச் சுவர்கள் மற்றும் பாலங்கள் முதலானவை வெள்ளம் வடிந்து போவதற்கு வசதியான முறையில் அமைக்கப்படாமை, சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டடங்கள், பாலங்கள் மற்றும் மதில்கள் அமைப்பு முதலான காரணங்களினால் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதாகவும் மற்றும் அதன் மூலம் கூடுதலான பாதிப்பு ஏற்படுவதாகவும் காணி மற்றும் மறுசீரமைப்புக் கூட்டுத்தாபனம் பேராதெனிய பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும், சட்டவிரோதக் கட்டிடங்கள் உரிய முறையில் இனங்காணப்பட்டு அவற்றை அகற்றும் நடவடிக்கைகளுக்கு நகர அபிவிருத்தி அதிகார சபையுடன் பிரதேசத்திலுள்ள சிவில் அமைப்புகளுடன் இணைந்து சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுடன் பேசி தமாகவே அகற்ற நடவடிக்கை எடுப்பதுடன், தவறும் பட்சத்தில் நகர அபிவிருத்தி அதிகார சபையூடாக நடவடிக்கை எடுக்கவும் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன.
தற்போது அமைக்கப்பட்டுள்ள பாலங்களை அகற்றி வெள்ளம் வடியக்கூடிய வகையில் பாலங்களை திருத்தியமைப்பதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை இணக்கம் தெரிவித்ததுடன், நடைமுறையில் இவற்றை செயற்படுத்தப்படும்போது ஏற்படும் சிக்கல்களுக்குத் தீர்வுகாண வசதியாக பிரதேச சபை மற்றும் பிரதேச செயலகத்தின் உதவியுடன் அவற்றைத் தீர்க்கவும் முடியும் எனவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
இன்னும் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு ஏதுவாக இருந்த செயற்பாடுகள் மேலும் தொடராமல் இருப்பதற்கு பிரதேச செயலகமும், பிரதேச சபையும் இணைந்த ஒரு செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டியதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.
இந்த வெள்ளப்பெருக்கை தடுக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்க சில அரச நிறுவனங்களுக்கி டையிலான பரஸ்பர தொடர்புகள் வலுப்படுத்த வேண்டியதன் அவசியமும் சுட்டிக்காட்டப்பட்டன.
இந்த செயற்பாடுகளை விரைவுபடுத்தும் நோக்கில் எதிர்வரும் திங்கட்கிழமை (08) சம்பந்தப்பட்ட சகல அரச நிறுவனங்கள் பிரதேசத்திலுள்ள சிவில் அமைப்புகளின் பிரதிநிதி உள்ளடக்கிய கூட்டத்தை அக்குறணை பிரதேச செயலகத்தில் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது.
-Vidivelli