பெரும்பாலான சிங்கள பௌத்தர்கள் இனவாதிகளோ மதவாதிகளோ அல்லர்
முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்
சிங்கள பௌத்த மக்களில் பெரும்பான்மையினர் இனவாதிகளோ மதவாதிகளோ அல்லர். அவர்கள் பௌத்த மதக் கோட்பாடுகளின்படி ஏனைய இனங்களுடன் நல்லுறவுடன் வாழ்கிறார்கள். நான் பயிலும் காலத்தில் பாடசாலையின் பெரும்பான்மை மாணவர்கள், நூற்றுக்கு 5 வீதமானோரே என்னைத் ‘தம்பியா’ என்று அழைத்தார்கள். 95 வீதமானோர் என்னை அவ்வாறு அழைக்கவில்லை. என்னுடன் அவர்கள் நல்லுறவுடன் பழகினார்கள் என முன்னாள் ஊடக அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்தார்.
பேருவளை ஜெம்போரியா மண்டபத்தில் நடைபெற்ற மேல் மாகாண ஜமாஅத்தே இஸ்லாமி இளைஞர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது; மக்களுக்கு உதவிகள் செய்பவரை இறைவன் மிகவும் நேசிக்கிறான் என நபிகள் நாயகம் கூறியுள்ளார்கள். நபிகளாரின் வாழ்க்கை முறை பொறுமை என்பன ஒருவர் ஏனைய மக்களுடன் எவ்வாறு நடத்துகொள்ள வேண்டும் என்பதை தெளிவுபடுத்தியுள்ளன. இஸ்லாம் இதையே எமக்குப் போதித்துள்ளது.
முஸ்லிம்கள் போதைப்பொருளைக் கொண்டு வருவதாகக் கூறுகிறார்கள். எல்லா சமூகத்திலும் இவ்வாறானவர்கள் இருக்கக்கூடும். எமது நன்னடத்தைகள் மூலம் நாம் அவ்வாறானவர்கள் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும். நாம் பெரும்பான்மை சிங்களவர்களுடனே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எமக்குள் ஒற்றுமை, சகோதரத்துவம் நிலவவேண்டும்.
நான் கொழும்பு ஆனந்தா கல்லூரியிலேயே பயின்றேன். அக்கல்லூரியின் பழைய மாணவன் நான். நான் ஒரு முஸ்லிம் என்று அப்பாடசாலையில் இனம் காணப்படவில்லை. 14 வருடங்களாக அக்கல்லூரியின் ஹொக்கி அணிக்கு தலைமைத்துவம் வழங்கியவன் நான். சிங்கள மக்களில் பெரும்பான்மையினர் இனவாதிகளோ அல்லது சமயவாதிகளோ அல்லர்.
நான் பாடசாலை மாணவர் விடுதியின் பிரதம மாணவர் தலைவனாக நியமிக்கப்பட்டிருந்தேன். பாடசாலையில் பெரும்பான்மையாக சிங்கள மாணவர்கள் இருந்தபோதும் கூட நான் மாணவர் தலைவனாக நியமிக்கப்பட்டேன். தப்பபிப்பிராயம் மற்றும் சந்தேகம் நாங்கள் கிணற்றுத் தவளைகளாக இருப்பதாலேயே ஏற்படுகிறது. எங்களது செயற்பாடுகள் நடத்தைகள் மூலம் நாம் நல்லிணக்கத்துக்கான செய்தியை மற்றவர்களுக்கு வழங்கலாம். முஸ்லிம்கள் நாம் சமூகத்தில் ஒரு நோயாளர் போன்று இருக்கவேண்டியதில்லை. அனைத்து விடயங்களிலும், தேசிய நிகழ்வுகளிலும் எங்களது பங்களிப்பினை வழங்கவேண்டும்.
அன்று எங்கள் முஸ்லிம் பெண்கள் வீடுகளிலிருந்து வெளியே வருவதில்லை. ஐக்கிய நாடுகளின் மாநாட்டுக்குச் சென்றால் இதுபற்றி வினவுகிறார்கள். இஸ்லாம் என்றால் என்ன. இஸ்லாமிய கோட்பாடுகள் என்ன என்பதை எங்கள் நடத்தைகள் மூலம் ஏனையோருக்கு புரியவைக்கவேண்டும். ஜனநாயக ரீதியான பிரச்சினைகளின் போதும் தேசிய பிரச்சினைகளின் போதும் முஸ்லிம்கள் முன்னிலை வகித்திருக்கி றார்கள். இதற்கு சிறந்த உதாரணம் ரி.பி. ஜாயா அவர்கள் எமது நாட்டுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான போராட்டத்துக்கு அவர் பங்களிப்புச் செய்தார். தமிழ்த் தலைவர்கள் 50 இற்கு 50 கோரிய போது எந்தவித நிபந்தனைகளுமின்றி சுதந்திரத்துக்காக ஒத்துழைப்பு வழங்கினார்.
நான் அரசியலிலிருந்து ஒதுங்கிக் கொள்ளவில்லை. தேர்தலில் போட்டியிடாம லிருப்பதே ஒருமாற்றமாகும். நீண்ட காலமாக அமைச்சுப் பதவிகளை வகித்தேன். இன்னுமொருவருக்கு சந்தர்ப்பம் வழங்கவேண்டுமென்பதற்காகவே தவிர்த்திருக்கிறேன்.
எமது நாட்டுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகளே பொருத்தமானது என நான் நம்புகிறேன். ஜனநாயக அரசியல், தேசிய ஒற்றுமை, சமூக ஒற்றுமை ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருக்கிறது என்றாலும் ஐக்கிய தேசியக் கட்சி தொடர்பில் எனக்குப் பிரச்சினை இருக்கிறது. அது கொள்கை ரீதியான பிரச்சினை. தனிப்பட்ட பிரச்சினை அல்ல. நான் முரண்பட்டுக்கொண்டும் பின்பு நண்பர்களாகிக் கொண்டும் கட்சிக்குள்ளேயே இருக்கிறேன்.
டட்லி மற்றும் பிரேமதாசாக்களின் கொள்கைளுக்கு நான் உடன்படுகிறேன். பிரச்சினைகள் இருந்தாலும் நான் ஐக்கிய தேசியக் கட்சியை நேசிக்கிறேன் என்றார்.
-Vidivelli