திருகோணமலை கருமலையூற்று பள்ளிவாசலை விடுவித்துக்கொள்ள முஸ்லிம் கலாசார அமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என திருகோணமலை மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சு, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு மற்றும் மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு மீதான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு, உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பட்டார். அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
திருகோணமலை கருமலையூற்று பள்ளிவாசல் தொடர்பில் இன்று தேசிய ரீதியில் மட்டுமன்றி சர்வதேச ரீதியிலும் பேசப்பட்டு அவதானிக்கப்பட்டு வருகின்றது. சுமார் 400 வருடங்கள் பழைமை வாய்ந்த இந்த பள்ளிவாசல் 2009 ஆம் ஆண்டு படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர் தொழுகை இடம்பெறாமல் இருக்கின்றது. கடந்த அரசாங்க காலத்தில் நான் மாகாண சபையில் இருந்து இந்த பள்ளிவாசல் தொடர்பாக ஊடகங்களுக்கு முன் கொண்டுவந்த நிலையில் இன்னும் அந்த பள்ளிவாசலை பெற்றுக்கொள்ள பேசவேண்டிய நிலையில் இருக்கின்றேன்.
அதனால் 400 வருடம் பழைமை வாய்ந்த இந்த பள்ளிவாசலை பழைய நிலைமைக்கு கொண்டுவர அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தனவுடன் கலந்துரையாடி இருக்கின்றேன். இருந்த போதும் எமது அரசாங்கத்தில், எமது அமைச்சர் ஒருவர் இதற்கு பொறுப்பாக இருந்தும் இந்தப் பள்ளிவாசலை பெற்றுக் கொள்ள முடியாமல் இருப்பது குறித்த கவலை எனக்கும் எமது மக்களுக்கும் இருந்து கொண்டிருக்கின்றது.
எனவே எமது சமுகத்தின் முக்கியமான பிரச்சினையாக இதனை கருதி இந்த பள்ளிவாசலை மீண்டும் பெற்றுக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை அமைச்சர் மேற்கொள்ளவேண்டும்.
அதேபோன்று திருகோணமலை மாவட்டத்தில் இருக்கும் தபால் அலுவலகங்களில் பல குறைபாடுகள் இருக்கின்றன. சென்ற காலத்தில் இருந்த பிரச்சினைகள் இன்னும் அவ்வாறே இருந்து வருகின்றன. குறிப்பாக கிண்ணியா பிரதேசத்தில் மக்கள் தொகை அதிகமாக இருப்பதால் தபால் விநியோகஸ்தர் வெற்றிடங்களை நிரப்பவும் உப தபால் காரியாலயங்களை நிறுவவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
-Vidivelli