நாட்டில் மழையின்மையால் ஏற்பட்டுள்ள வரட்சியின் காரணமாகவே இவ்வாறு மின்னுற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து அரசாங்கம் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றது. அரச நிறுவனமொன்றான பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சாரசபை மீது தொடுத்துள்ள வழக்கிற்கமைய , எதிர்வரும் 9 ஆம் திகதி மின்சார சபை நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளமை இது பொய் என்பதை தெளிவுபடுத்துகின்றது என ம.வி.மு.வின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார்.
ஜே.வி.பியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
நாட்டில் தற்போது அமுல்படுத்தப்படுகின்ற மின்வெட்டு பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தைச் செலுத்துகின்றது. இதற்கான பிரதிபலனை எதிர்வரும் ஒரு வருட காலத்திற்குள் அரசாங்கம் எதிர்கொள்ளும்.
காரணம் இந்த விடயம் தொடர்பாக இலங்கை மின்சார சபைக்கு எதிராக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. வழக்கு தொடுப்பதற்கு முன்னர் கடந்த 2016 ஆம் ஆண்டு தொடக்கம் இவ்வாறான மின்துண்டிப்பினால் பாதிக்கப்பட்டோரது விபரங்களும் அந்த ஆணைக்குழுவால் சேகரிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 9 ஆம் திகதி இலங்கை மின்சார சபை நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியதாகும்.
தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்துள்ளார். நாட்டுக்கு வருடமொன்று தேவைப்படும் மின்னுற்பத்தி தொடர்பான சராசரி அளவு அரசாங்கத்திற்கு தெரிந்திருக்க வேண்டும். அதே வேளை மழையற்ற காலங்களில் நீர் மின்னுற்பத்தி பாதிக்கப்பட்டால், அதற்கான மாற்று வழி முறையொன்றும் தயார்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் எதிர்வரும் 30 வருடங்களுக்கான நீர்த்திட்டமிடல் காணப்படுகின்றது. அதில் நீர்மின்னுற்பத்தி தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளவாறே மின்னுற்பத்தி செய்யப்பட வேண்டும். அதனை மீறி மழையில்லையெனக் கூறி சட்ட விரோதமாக தனியார் துறையினரிடம் இருந்து மின்சாரத்தைப் பெறுவதற்கு முயற்சிக்கக் கூடாது.
தற்போது ஏற்பட்டுள்ள மின்சார தட்டுப்பாட்டை பூர்த்தி செய்வதற்கு 250 மெகா வோல்ட் மின்சாரம் தேவைப்படுகின்றது. இதனை எவ்வாறு பெற்றுக் கொள்வது என்பது தொடர்பில் நீர்திட்டமிடலில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அரசாங்கம் அதனைச் செய்யாது எம்பிலிபிட்டிய தனியார் மின்னுற்பத்தி நிலையத்திடமிருந்து மின்சாரத்தைப் பெறவே முயற்சிக்கின்றது. இதற்கான இலஞ்சத்தை அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளும்.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம், எதிர்வரும் 2019 –- 2020 ற்கு இடைப்பட்ட காலத்தில் மின் தட்டுப்பாடு ஏற்படும் என எதிர்வு கூறியுள்ளதோடு அதற்கான தீர்வினையும் அந்த ஆணைக்குழுவே முன்வைத்துள்ளது. இந்த அறிக்கையை இலங்கை மின்சார சபைக்கும் அனுப்பிவைத்துள்ளது. ஆனால் இந்த அரசாங்கம் எதனையுமே கவனத்தில் கொள்ளவில்லை. அதில் காற்று மற்றும் சூரிய மின்னுற்பத்தி தொடர்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசாங்கம் ஏன் இந்த விடயத்தில் கவனத்தில் கொள்ளவில்லை என்பது கேள்விக்குறியாகும்.
இந்த முறைமைகளைப் பின்பற்றாமல் தனியாரிடமிருந்து உடனடி மின்சாரத்தைப் பெறவுள்ளனர். ஆனால் அதற்கான பணத்தையும் மக்களே வரியாகச் செலுத்த வேண்டும். தேசிய வங்கி மற்றும் திறைசேரி என்பன மின்சார சபைக்கு கடன்களை வழங்கியுள்ள போதும் மக்கள் மீதே இந்த சுமையும் திணிக்கப்படுகின்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதன் காரணமாகவே பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுடன் மின்சாரசபை பொறியியலாளர்கள் சங்கம் தொடர்ந்தும் முரண்பட்டுக் கொண்டிருக்கின்றது.
எதிர்வரும் வருடங்களிலும் இவ்வாறான நெருக்கடிகள் ஏற்படும் போதும் மின்சார சபை இதே போன்று பொறுப்பற்று வியாபார நோக்குடனேயே இருக்கும். அரச நிறுவனமான பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சுயாதீனமாக நீதிமன்றத்திற்குச் சென்று வழக்கு தொடர்ந்துள்ள போதும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அமைச்சர் ரவி கருணாநாயக்க இந்த விடயத்தில் கவனம் செலுத்தாமல் இருப்பது நாட்டின் மீதும் மக்கள் மீதும் அவர்களுக்கு காணப்பட்ட பொறுப்பற்ற தன்மையை வெளிப்படுத்துகின்றது.
-Vidivelli