இந்திய படையினர் 7 பேரை கொன்றதாக பாகிஸ்தான் அறிவிப்பு; இந்தியா நிராகரிப்பு

0 610

சர்ச்சைக்குரிய காஷ்மீர் எல்லைப் பகுதியில் இடம்பெற்ற மோதலின் போது இந்திய படையினர் ஏழு பேரைக் கொன்றதாக கடந்த செவ்வாய்க்கிழமை பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்திருந்தது, இதனை புது டில்லி நிராகரித்துள்ளது.

இராணுவ ஊடகப் பிரிவான சேவைகளுக்கு இடையிலான பொது உறவுகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 48 தொடக்கம் 72 மணித்தியாலங்களுக்குள் கட்டுப்பாட்டு எல்லைப் பகுதியில் யுத்த நிறுத்தத்தினை மீறி அதிகரித்த வன்முறைகளில் இந்திய எல்லைக் காவல் படையினர் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் இராணுவம் தகுந்த பதிலடி கொடுத்துள்ளது. இதன் காரணமாக இந்தியத் தரப்பில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன. பரஸ்பர துப்பாக்கிச் சண்டையின் போது பல இந்திய காவலரண்கள் சேதமடைந்ததோடு ஏழு இந்தியப் படையினர் கொல்லப்பட்டனர். இதன்போது 19 பேர் காயமடைந்தனர் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சண்டையின் போது மூன்று பாகிஸ்தான் படையினர் கொல்லப்பட்டதாகவும் சேவைகளுக்கிடையிலான பொது உறவுகள் தெரிவித்துள்ளது.

சில வாரங்கள் அமைதி நிலவியதன் பின்னர் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற மோதலில்  ஐந்து வயது சிறுமி உட்பட இரு பொதுமக்களும், இந்திய காவல்படை வீரர் ஒருவரும் கொல்லப்பட்டதாக இந்தியப் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் லெப்டினன்ட் கேர்ணல் தெவேந்தர் ஆனந்த் தெரிவித்தார்.

நான்கு படையினர் உள்ளடங்கலாக 18 பேர் காயமடைந்ததாக ஆனந்த் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

பூஞ்ச் மாவட்டத்தின் கட்டுப்பாட்டு எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஷஹ்பூர் மற்றும் கேர்ணி ஆகிய பகுதிகள் மீது மோட்டார் மற்றும் சிறிய ரக ஆயுதங்களை பயன்படுத்தி திடீர்த் தாக்குதலை சுமார் 7.45 மணியளவில் (சர்வதேச நேரத்தின் பிரகாரம் திங்கட்கிழமை 02.15) பாகிஸ்தான் இராணுவமே ஆரம்பித்தது எனவும் அவர் தெரிவித்தார்.

கடந்த பெப்ரவரி 14 ஆம் திகதி இந்தியக் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீரின் புல்வாமா பகுதியில் இந்தியப் படையினர் மீதான தற்கொலைத் தாக்குதலையடுத்து 40 படையினர் கொல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து இரண்டு நீண்டகால எதிர்நிலை நாடுகளுக்கும் இடையே இராஜதந்திர மற்றும் இராணுவ பதற்றங்கள் அதிகரித்துள்ளன.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.