- சிஹ்லா இஸ்ஸதீன்
(பாணகமுவ)
கிழக்குப் பல்கலைக்கழகம்.
இன்று கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பெறுபேறுகளின் முடிவுகள் வெளியான நிலையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு ஊடகங்கள் தொடக்கம் உற்றார் வரை வாழ்த்துக்களையும் ஊக்கங்களையும் குவித்த வண்ணம் உள்ளனர். பல மாணவர்கள் தத்தம் திறமைக்கேற்ப உயர்ந்த பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கும் பெற்றோர்க்கும் பெருமை சேர்த்துள்ளனர். இவர்கள் மேலும் அதிகமாக முயற்சித்து நாளைய சாதனை நட்சத்திரங்களாக மிளிர வேண்டும் என்று வாழ்த்தியவளாக……..
இன்று இலங்கையில் ஒரு மொழி, இரு மொழி, மும்மொழிப் பாடசாலைகளென மொழி அடிப்படையில் வகுக்கப்பட்டுள்ள தமிழ் , முஸ்லிம் மற்றும் சிங்கள பாடசாலைகளென மொத்தமாக ஏறக்குறைய 10,000 பாடசாலைகள் இயங்குகின்றன. இவற்றில் ஏறக்குறைய 4 மில்லியன் மாணவர்கள் கல்வி கற்பதுடன் கிட்டத்தட்ட 2,30,000 ஆசிரியர்கள் கற்பித்தல் பணியில் ஈடுபடுகின்றனர். இலங்கையினுடைய பாடசாலைக் கல்வியமைப்பில் ஆறாம் வயதில் முதலாம் தரத்திற்குச் சேர்க்கப்படும் மாணவன் பதினொன்று அல்லது பதின்மூன்று வருடங்கள் பாடசாலையில் இலவசக் கல்வியைத் தொடர்கின்றான். இக்கால கட்டத்தில் 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சை , க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை , க.பொ.த. உயர்தரப் பரீட்சை ஆகிய மூன்று பரீட்சைகளுக்கும் தோற்றும் சந்தர்ப்பம் கிடைக்கிறது. இருப்பினும் இம்மூன்று பரீட்சைகளுக்கும் தோற்றும் வாய்ப்பு தரம் 1 இல் இணையும் நூறு வீதமானவர்களுக்கும் கிடைப்பதில்லை.
அவ்வாறு அம்மூன்று பரீட்சைகளுக்குத் தோற்றும் அனைத்து மாணவர்களும் அப்பரீட்சையில் சித்தியடைவதுமில்லை.
இவ்வாறே ஒவ்வொரு வருடமும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளாக ஏறக்குறைய 5,00,000 மாணவர்கள் தோற்றுவதுடன் அவர்களில் அண்ணளவாக 50 – 60 வீதத்திற்கு இடைப்பட்டவர்களே உயர்தரம் கற்பதற்கு தகுதி பெறுகின்றனர். இவ்வருடமும் பாடசாலை மட்டம் மற்றும் வெளிவாரியாக மொத்தம் 518,184 பேர் தோற்றியிருந்தனர். இதில் 71.66 வீதமானவர்கள் உயர் தரத்திற்கு தகுதி பெற்றுள்ளனர். ஏனையவர்களின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
பரீட்சையில் சித்தியடைந்து உயர்தரம் செல்பவர்கள் அதிலும் சித்தியடைந்து உயர் கல்வியைப் பெறுவதினூடாக வாழ்வின் இலக்குகளை அடைந்து கொள்கின்றனர். ஏனையவர்கள் கல்வி என்ற நாமத்தை மறந்து விட்டு வேறு தொழில்களிலோ அல்லது வேறு விடயங்களிலோ ஈடுபாடு காட்டுவதனூடாக பொருளாதாரத்தில் முன்னேறுகின்றனர்.
ஆனால் இவர்களுக்குள் எத்தனையோ சாதனையாளர்கள் தன் திறமையை அறியாமையினாலோ அல்லது திறமையை வெளிக்காட்ட சந்தர்ப்பம் கிட்டாமையினாலோ உலகில் மிளிராமல் அமிழ்ந்து போகின்றார்கள் என்றால் அது மிகையாகாது. உண்மையில் இலங்கையில் பாடசாலைக் கல்வியினுடைய முடிவு என்பது ஏட்டுக் கல்வியை வழங்கி பரீட்சை முறைமைகளினூடாக சோதனைக்கு உட்படுத்தி ஞாபக சக்திக்கு முன்னுரிமை வழங்குபவையாகவே காலம் காலமாக இருந்து வருகின்றன. இலவசக் கல்வியின் ஆரம்பம் தொடக்கமே இலங்கையில் இவ்வகையான பரீட்சை முறைகளே பின்பற்றப்பட்டு வருகின்றதுடன் இப்பரீட்சை அமைப்பே பல மாணவர்களின் எதிர்காலத்தை இல்லாமல் ஆக்குவதாகவும் அமைகின்றது என்றால் அது மிகையாகாது.
இன்று ஒவ்வொரு பாடசாலைகளிலும் ஒவ்வொரு வகுப்பறைகளிலும் தனியாள் வேறுபாடுகளைக் கொண்ட பல்வேறு மாணவர்களை எம்மால் அவதானிக்க முடிகிறது. சிலர் சிறந்த பேச்சாளர்களாக இருப்பார்கள் , சிலர் கவிதை , கதை
என எழுத்துலகில் ஆர்வம் கொண்டவராக இருப்பர். இன்னும் சிலர் விளையாட்டுத் துறையிலும் இன்னும் சிலர் கைப்பணிகளிலும் என ஒவ்வொரு வகுப்பறைகளும் ஒவ்வொரு துறைகளிலும் பல்வேறுபட்ட திறமைசாலிகளை சுமந்த வண்ணமே உள்ளன. ஆனால் ஒரு பரீட்சை முடிவு இவர்களை வெகுதூரம் பின்னுக்குத் தள்ளி விடுகின்றது.
சில மாணவர்களைப் பார்த்தால் சகல அறிவும் கொண்டு வகுப்பறைகளில் மிகச்சிறந்த கெட்டிக்காரர்களாக இருப்பர். ஆனால் பரீட்சை முடிவுகள் அவர்களுக்கு நேர் விரோதமாய் இருக்கும். இரண்டு மூன்று மணித்தியால பரீட்சை வினாத்தளில் சரியான முறையில் விடையளிக்கவில்லை என்பதற்காக நாம் அவனை கல்வியறிவற்ற மாணவன் என்று கூறிவிட முடியாது.
அவனது ஏதோ ஒரு சூழ்நிலை அவ்வினாக்களுக்கு சரியாக அவனால் விடையளிக்க முடியாமல் போயிருக்கலாம். இங்கு அவன் பரீட்சையில் சித்தியடையவில்லை என்பதற்காக அவனுக்கு தொடர்ந்து கற்பதற்கான வாய்ப்புக்கள் தடுக்கப்படலாம். இன்னும் சிலர் தமக்குள் வேறு பல திறமைகளில் இருந்தும் கூட அதனை பாடசாலைக் கல்வியின் பின் கைவிட்டு விடுகின்றனர். உண்மையில் இது மிகவும் வருந்தத்தக்க ஒரு செயலாகவே காணப்படுகின்றது.
ஏன் உங்கள் கல்வி வெறுமனே ஒரு பரீட்சை பெறுபேற்றில் முடிவடைந்து விடுமா? ஏன் உங்களால் தொடர்ந்து கற்று வாழ்க்கையில் முன்னேற முடியாதா? நிச்சயமாக இல்லை! தன் வாழ்க்கையில் எதையாவது சாதித்தே தீர வேண்டும் என்று நினைப்பவன் தன்னம்பிக்கையை ஒருபோதும் கைவிட மாட்டான்.
எழுதிய பரீட்சையில் சிறந்த முடிவு வரவில்லையா? பரீட்சையை மீண்டும் எழுதுங்கள். சரி படிப்புதான் சரியாக வரவில்லையா? வேறு துறைக்குள் கால் வையுங்கள். இன்று எமது சமூகத்தில் பரீட்சையில் சித்தியடைய தவறும் பட்சத்தில் பெண்பிள்ளைகள் என்றால் உடனே திருமணம் செய்து வைக்கின்றார்கள். ஆண்கள் என்றால் குடும்ப சுமையை தலையில் கட்டுகிறார்கள். இது கூடாது குற்றம் என்று சொல்ல முனையவில்லை. ஆனால் அவர்களையும் எம்மால் பெரிய சாதனையாளர்களாக ஆக்கலாம் என்றே கூற விளைகின்றேன்.
இன்று எத்தனையோ தொழிற் பயிற்சி வழங்கும் நிறுவனங்கள் செயற்படுகின்றன. கணனி , ஆங்கிலம் உட்பட பல தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுத் தரக்கூடிய பல துறைசார் கற்கைநெறிகள் போதிக்கப்பட்டும் வருகின்றன. இவைகளினூடாக நாம் அவர்களுக்கு சிறந்த ஒரு எதிர்காலத்தை கட்டமைத்துக் கொடுக்கலாம். இவை ஆண் பிள்ளைகளுக்குத்தானே சரிப்பட்டு வரும் என்று நீங்கள் நினைக்கலாம். ஏன் வெளிநாடுகளில் மட்டும்தானா பெண்கள் சாதிக்க வேண்டுமா? அத்துறைகளில் பெண்களை ஈடுபடுத்த விரும்பவில்லை எனின் தையல் , கைப்பணி சார்ந்த துறைகளில் அவர்களை ஈடுபடுத்தலாமே.
ஆகவே மாணவர்களை அவர்களது திறமைகளுக்கு ஏற்ப துறைகளை தேர்ந்தெடுத்துக் கற்பதற்கான வாய்ப்பை நாம் வழங்குதல் வேண்டும். அதிலும் அவர்கள் ஆர்வம் காட்டும் துறைகளை கற்கும் வாய்ப்பை நாம் வழங்கும் போது அவர்கள் அதில் இலகுவாக வெற்றியடைய சந்தர்ப்பம் கிட்டுவதுடன் அவர்கள் மகிழ்ச்சியாக செயற்படவும் ஆரம்பிப்பார்கள்.
மேலும் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கும் அவர்களின் விருப்பிற்கேற்ப துறைகளை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை வழங்குதல் வேண்டும். பெற்றோர்களின் விருப்பிற்கேற்ப துறைகள் தேர்தெடுக்கும் பட்சத்தில் கல்வியில் நாட்டம் குறைந்து மன அழுத்தங்களுக்கு உள்ளாகி அவர்களின் எதிர்காலமே கேள்விக் குறியாகிவிடும் என்பதில் ஐயமில்லை.
கல்வி என்பது வெறுமனே ஏட்டுக் கல்வியைக் குறிக்கவில்லை மாறாக தெரியாதவற்றைக் கற்றுக் கொள்வது அனைத்துமே கல்விதான். எமது சமூகத்தையும் நாம் சாதனை மிகுந்த சமூகமாகக் கட்டியெழுப்புவதில் முன் நிற்க வேண்டும். இன்றைய பிள்ளைகளுக்கு சிறந்த எதிர்காலத்தினை கை காட்டுபவர்கள் அவர்களுடைய பெற்றோர்களை விட வேறு யாராகவும் இருக்க முடியாது.
-Vidivelli