முஸ்லிம் சமய விவகார அமைச்சும், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் இணைந்து நாடளாவிய ரீதியில் நடமாடும் சேவைகளை நடாத்தி வருகின்றன.
கண்டி மாவட்டத்தின் உடுநுவர தொகுதியில் முதன் முதல் ஆரம்பிக்கப்பட்ட இச்சேவை இரண்டாவதாக கடந்த வாரம் அக்குறணையில் நடாத்தப்பட்டது. மூன்றாம் கட்ட நடமாடும் சேவை எதிர்வரும் 20 ஆம் திகதி அநுராதபுரத்தில் இடம்பெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை முஸ்லிம் சமய விவகார அமைச்சும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் முன்னெடுத்துள்ளன.
இந்நடமாடும் சேவை மூலம் பள்ளிவாசல்கள், குர்ஆன் மத்ரஸாக்கள், அரபுக் கல்லூரிகளின் பதிவுகள் இடம்பெற்று வருகின்றன. அத்தோடு மௌலவிமார்களுக்கான அடையாள அட்டைகள் வழங்கப்படுகின்றன. மேலும் நடமாடும் சேவையின் போது குடும்பங்களுக்கான குடிநீர்வசதிகள், இலவச கண் பரிசோதனை என்பனவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை பாராட்டத்தக்கனவாகும்.
முஸ்லிம் சமய விவகார அமைச்சும், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் நேரடியாக மக்களின் காலடிக்கே சென்று அவர்களுக்கான சேவைகளை வழங்கி வருவது ஏனைய அமைச்சுகளுக்கும் ஒரு முன் மாதிரியாகும். சமூகம் இந்நடமாடும் சேவையின் உச்ச பயனைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக்காலத்தில் முஸ்லிம் சமய விவகாரம் கலாசார அமைச்சின் கீழேயே இருந்தது. அப்போதைய பிரதமர் ஜயரத்னவே கலாசார அமைச்சுக்கும் பொறுப்பாக இருந்தார். அக்காலத்தில் பள்ளிவாசல் புதிதாக நிர்மாணிக்கப்படுவதற்கு கடுமையான சட்டங்கள் இருந்தன. புதிதாக பள்ளிவாசல் நிர்மாணிக்கப்படுவதற்கும் பதிவு செய்யப்படுவதற்கும் அருகிலிருக்கும் பௌத்த விகாரைகளின் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட வேண்டியிருந்தது. நல்லாட்சி அரசு பதவிக்கு வந்ததும் இந்த கடுமையான நிபந்தனைகள் இல்லாமற் செய்யப்பட்டன.
இதன் காரணமாக 2015 ஆம் ஆண்டின் பின்பு சுமார் 400 பள்ளிவாசல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பள்ளிவாசல்களை பதிவு செய்வதற்கான இறுக்கமான சட்டங்களைத் தளர்த்தியுள்ளதாக அமைச்சர் ஹலீம் தெரிவித்துள்ளார். இது வரவேற்கத்தக்கதே, என்றாலும் அமைச்சர் ஹலீம் பள்ளிவாசல்களைப் பதிவு செய்வதுடன் மாத்திரம் நின்றுவிடக்கூடாது.
இன்று அநேக பள்ளிவாசல்களின் வக்பு சொத்துகள் பள்ளிவாசல் நிர்வாகிகளினால் முறைகேடாக தங்கள் சுயநலன்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன. இதனால் பள்ளிவாசல்களுக்குக் கிடைக்க வேண்டிய வருமானம் தனி நபர்களையே சென்றடைகிறது. முதலில் இது தடைசெய்யப்பட வேண்டும். பள்ளிவாசல் சொத்துகளான வக்பு சொத்துகளின் வருமானம் பள்ளிவாசல்களுக்கு உரிய வகையில் சென்றடைந்தால் பள்ளிவாசல்கள் தங்களது நிர்வாக செலவுகளுக்காக ஜமாஅத்தார்களின் தயவில் தங்கியிருக்க வேண்டியதில்லை.
இதேவேளை பல தசாப்தங்களுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட பள்ளிவாசல்களுக்குக் கூட பெரும்பான்மை சமூகத்தினரால் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றமை எமக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. இதற்கு உதாரணமாக தம்புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்ளிவாசலைக் குறிப்பிடலாம்.
பதிவு செய்யப்பட்ட பள்ளிவாசல்களின் பாதுகாப்பினை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும். அதற்கான கட்டமைப்பொன்றினை அரசாங்கமே நிறுவ வேண்டும். பதிவு செய்யப்பட்ட பள்ளிவாசல்களுக்கு எந்தத்தரப்பினராலும் சவால்கள் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பாக அமைய வேண்டும்.
ஹஜ் சட்ட மூலம், வக்பு சட்டத்தில் திருத்தங்கள், முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தில் திருத்தங்கள் என சமூக நலன் கருதிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் சந்தர்ப்பத்தில் பதிவுசெய்யப்பட்ட பள்ளிவாசல்களின் பாதுகாப்பு விடயத்திலும் அமைச்சர் ஹலீம் கரிசனை செலுத்தவேண்டும் என்றே சமூகம் எதிர்பார்க்கிறது.
-Vidivelli