முஸ்லிம் சமய விவகார அமைச்சும், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் இணைந்து நடாத்திவரும் நடமாடும் சேவையின் மூன்றாவது கட்டம் எதிர்வரும் 20 ஆம் திகதி காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை அநுராதபுரம் ஸாஹிராக் கல்லூரியில் இடம்பெறவுள்ளது.
அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமயவிவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் தலைமையில் நடைபெறவுள்ள இந்நடமாடும் சேவையில் அநுராதபுர மாவட்ட அரசியல் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்நடமாடும் சேவைகளில் அநுராதபுர மாவட்ட பள்ளிவாசல்கள், அரபு மத்ரஸாக்கள் மற்றும் அரபுக் கல்லூரிகளின் பதிவுகளுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளன. அத்தோடு மௌலவிமார்களுக்கான அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளதுடன் பள்ளிவாசல் நிர்வாகங்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் வழங்கப்படவுள்ளன.
பள்ளிவாசல்கள், அரபு மத்ரஸாக்கள், அரபுக் கல்லூரிகளின் பதிவுகளுக்கான விண்ணப்பங்களை மக்கள் முன்கூட்டியே பெற்றுக்கொள்ள முடியுமென அமைச்சர் ஹலீமின் இணைச் செயலாளர் ரமீம் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார். தேவையான விண்ணப்பங்களையும், அறிவுறுத்தல்களையும் அநுராதபுரம் மொஹிதீன் ஜும்ஆ பள்ளிவாசலிலிருந்து பெற்றுக்கொள்ள முடியுமெனவும் அவர் கூறினார்.
இந்நடமாடும் சேவையில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரிகள், வக்பு சபையின் பிரதிநிதிகள், முஸ்லிம் சமய விவகார அமைச்சின் அதிகாரிகள் கலந்து கொண்டு சேவைகளை வழங்கவுள்ளனர்.
-Vidivelli