ஹஜ் முஸ்லிம்களின் புனித கடமைகளில் ஒன்றாகும். அது இறுதியான கடமையும் கூட. முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ஹஜ் கடமையை தனது வாழ்நாளில் ஒரு தடவையேனும் நிறைவேற்றிக் கொள்வதையே முஸ்லிம்கள் இலட்சியமாகக் கொண்டிருக்கிறார்கள்.
எமது நாட்டின் ஹஜ் ஏற்பாடுகள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் அரச ஹஜ் குழுவின் மேற்பார்வையின் மற்றும் வழி நடத்தல்களின் கீழ் தனியார் துறையினரான ஹஜ் முகவர் நிலையங்கள் மூலமே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இலங்கையின் ஹஜ் ஏற்பாடுகள் வருடாந்தம் பல சவால்களுக்கு உள்ளாகி வருகின்றமை கவலைக்குரியதாகும்.
எமது நாட்டில் இதுவரை காலம் ஹஜ் மற்றும் உம்ரா ஏற்பாடுகளை சட்ட ரீதியாக ஒருங்கமைத்துக் கொள்வதற்கு சட்ட ஏற்பாடுகள் இல்லாமலிருப்பதே இவ்வாறான பல சவால்கள் மற்றும் பிரச்சினைகள் உருவாகுவதற்கான காரணங்களாகும். ஹஜ் உம்ரா ஏற்பாடுகளை ஒரு சட்ட வரையறைக்குள் உள்ளடக்கிக் கொள்வதன் அவசியத்தை உணர்ந்து அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் ஹஜ் சட்ட மூலத்தை தயாரிக்கும் பணிகளை முன்னெடுத்துள்ளமை ஒரு வரலாற்றுப் பதிவாகவே கொள்ளப்படுகிறது.
‘எந்தவொரு மனிதனும் பாவமான காரியங்களைத் தவிர்த்து நன்மையை எதிர்பார்த்து சிறந்த முறையில் இறையச்சத்துடன் ஹஜ்ஜை நிறைவேற்றுகிறானோ அவன் அன்று பிறந்த பாலகனைப்போன்று ஆகி விடுகிறான்’ என்றே ஹதீஸ் தெரிவிக்கிறது.
‘உடல் ஆரோக்கியம் மற்றும் வசதி வாய்ப்புகள் உள்ளவர்களுக்கே ஹஜ் கடமையாக்கப்பட்டுள்ளது’ என அல்லாஹ் குர்ஆனில் கூறியுள்ளான் என்றாலும் அனைவரும் தனது வாழ்நாளில் ஹஜ்ஜை நிறைவேற்றிக்கொள்ளவே விரும்புகிறார்கள்.
ஹஜ் சட்டத்துக்கான அவசியம்
பல தசாப்த காலமாக காலத்துக்கு காலம் ஹஜ் விவகாரங்களுக்கும் பொறுப்பாக இருந்த அமைச்சர்கள் ஹஜ் குழுவொன்றினை நியமித்து முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் ஊடாக ஹஜ் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. சில சந்தர்ப்பங்களில் ஹஜ் விவகாரங்கள் இரண்டு அரசியல் தலைமைகளினால் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இதனால் ஹஜ் கோட்டா பகிர்வில் பல்வேறு மோசடிகள் இடம்பெற்றன.
இவ்வாறான நிலையில் ஹஜ் கோட்டா பகிர்வில் அரசியல் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதால் ஹஜ் முகவர்கள் தங்களது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் நீதிமன்று இவ்விடயத்தில் தலையிட்டு நியாயம் பெற்றுத் தர வேண்டுமெனவும் 2012 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றில் வழக்கொன்றினைத் தொடர்ந்தனர்.
ஹஜ் முகவர்களின் மனுவினை விசாரித்த உயர்நீதிமன்றம் 2013 ஆம் ஆண்டு இலங்கையின் ஹஜ் ஏற்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டுமென வழிமுறையொன்றினை (Guide Lines) வழங்கியது. அந்த வழிமுறையில் ஹஜ் முகவர்கள் நேர்முகப் பரீட்சையின்போது பெற்றுக்கொள்ளும் புள்ளிகளின் அடிப்படையில் ஹஜ் கோட்டா பகிரப்பட வேண்டுமெனத் தெரிவித்திருந்தது.
இதேவேளை, 2014 ஆம் ஆண்டு ஹஜ் கோட்டா பகிர்வின் போது உயர்நீதிமன்றம் வழங்கிய ஹஜ் வழிமுறை மீறப்பட்டது என ஹஜ் முகவர்கள் சிலரால் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றினை உயர்நீதிமன்றில் தாக்கல் செய்தது. அந்த வழக்கு தொடர்ந்தும் விசாரணையின் கீழ் உள்ளது.
2015 ஆம் ஆண்டிலும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் மற்றும் அரச ஹஜ் குழுவுக்கு எதிராக ஹஜ் முகவர்கள் சிலர் ஹஜ் வழிமுறை (Guide Lines) மீறப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றின் தீர்ப்பினை அவமதித்துள்ளதாகவும் உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அவ்வழக்கில் ஹஜ் முகவர்கள் வெற்றி பெறவில்லை. 2017 ஆம் ஆண்டும் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டாலும் நீதிமன்று அவ்வழக்கினைத் தள்ளுபடி செய்தது.
கடந்த காலங்களில் இவ்வாறு பல தடவைகள் ஹஜ் முகவர்கள் ஹஜ் ஏற்பாடுகளுக்கு எதிராக நீதிமன்றப்படிகளை ஏறியுள்ளார்கள். பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரிடமும் ஹஜ் முகவர்கள் ஹஜ் ஏற்பாடுகள் தொடர்பில் முறையிட்டு பொதுபலசேனா அமைப்பு இவ்விவகாரத்தில் தலையிட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வாறான நிலையில் ஹஜ் ஏற்பாடுகள் ஒரு சட்டத்தின் மூலம் நெறிமுறைப்படுத்தப்பட்டாலே ஹஜ் ஏற்பாடுகளை எதிர்காலத்தில் சவால்களின்றி பிரச்சினைகளின்றி முன்னெடுக்க முடியும் என்பதனை உணர்ந்த முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் ஹஜ் ஏற்பாடுகளுக்கென தனியான சட்டமொன்றினை இயற்றிக் கொள்ள வேண்டுமெனத் தீர்மானித்தார்.
அமைச்சர் ஹலீம் ஹஜ் சட்ட மூலத்தை தயாரித்துக் கொள்வதற்கான அனுமதியை அமைச்சரவையிடம் கோரினார். அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் அங்கீகரிக்கப்பட்டது. ஹஜ் சட்ட மூலத்தை தயாரிக்கும் பணிகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. ஹஜ் சட்ட மூல நகல் வரைபொன்று தயாரிக்கப்பட்டு பல்வேறு தரப்பினரதும் கலந்துரையாடலுக்கும் ஆலோசனைகளுக்கும் விடப்பட்டுள்ளது.
முஸ்லிம் எம்.பி. க்களின் அக்கறையின்மை
அரச ஹஜ் குழுவே ஆரம்பத்தில் ஹஜ் சட்ட மூலத்தை வரைவு செய்தது. இவ்வரைபுக்கு சட்டவல்லுநர்களின் ஆலோசனையும் பெற்றுக் கொள்ளப்பட்டது. அதன்பின்பு ஹஜ் சட்டமூல நகல் வரைபு சிவில் சமூக பிரதிநிதிகள், அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமாசபை, தேசிய சூராசபை, ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் மற்றும் புத்திஜீவிகளின் பார்வைக்கு வழங்கப்பட்டு அவர்களின் கருத்துகளும் உள்வாங்கப்பட்டன.
இதனையடுத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களினது கவனத்திற்கு இந்த சட்டவரைபினை முன்வைப்பதற்கு சிவில் சமூக அமைப்புகள் கலந்துகொண்ட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. கடந்த பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதி கொழும்பு தபால் தலைமையக கேட்போர் கூட அரங்கில் இந்தக்கூட்டம் நடைபெற்றது. முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் அரச ஹஜ் குழுவின் அதிகாரிகளும் கலந்துகொண்ட கூட்டத்தில் ஹஜ் சட்ட வரைபு விரிவாக ஆராயப்பட்டது. இதன் பின்னே முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்வதெனத் தீர்மானிக்கப்பட்டது.
ஆனால் கடந்த 21 ஆம் திகதி வியாழக்கிழமை பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே கலந்துகொண்டமை கவலைக்குரியதாகும். முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்தில் 21 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இவர்களில் 8 பேர் மாத்திரம் கலந்துகொண்டார்கள் என்றால் சமூகத்தின் மீது அவர்கள் எவ்வளவு தூரம் அக்கறையின்றி இருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. அன்றைய தினம் பாராளுமன்ற அமர்வு இடம்பெற்ற தினமாகும். பாராளுமன்ற கட்டடத் தொகுதியிலேயே இந்தக் கூட்டமும் நடைபெற்றது. என்றாலும் எமது பிரதிநிதிகள் இக்கூட்டத்தை ஹஜ் சட்ட மூலத்தை முக்கியமாகக் கொள்ளவில்லை.
கடந்த 21 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான எம்.எஸ்.எஸ். அமீர் அலி, அலிசாஹிர் மௌலானா, பைசல்காசிம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எச்.எம். பௌஸி, முஜிபுர் ரஹ்மான், நஸீர், இம்ரான் மஹ்ரூப், மன்சூர் ஆகியோரே கலந்துகொண்டிருந்தனர். தாம் சமூகத்தின் காவலர்கள், சமூகத்துக்காகவே அரசியல் செய்பவர்கள் என்று வீரவசனம் பேசும் எமது சிரேஷ்ட அமைச்சர்களில் எவரும் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
இராஜாங்க அமைச்சர் அமீர் அலியின் சிபாரிசு
பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெற்ற முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடலில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம். மலிக், முஸ்லிம் சமய விவகார அமைச்சின் பணிப்பாளர் ஏ.பி.எம். அஷ்ரப், அமைச்சின் செயலாளர் திருமதி எம்.எஸ். மொஹமட், அரச ஹஜ் குழுவின் தலைவர் கலாநிதி எம்.ரி. சியாத் ஆகியோரும் பங்குகொண்டிருந்தனர்.
இராஜாங்க அமைச்சர் கலந்துரையாடலில் சில முக்கிய சிபாரிசுகளை முன்வைத்தார். அவரது சிபாரிசுகள் முக்கியமானவை. ஹஜ் சட்ட மூல வரைபில் ஹஜ் குழுவுக்கு தெரிவு செய்யப்படும் 9 பேரில் 7 பேர் அமைச்சரினாலே தெரிவு செய்யப்படுவர் என குறிப்பிட்டிருந்தது. இவ்வாறு தெரிவு செய்யப்படுவது ஹஜ் அரசியல் மயப்படுத்தலாகும் எனத் தெரிவித்த அவர் ஹஜ் குழுவுக்கு 7 பேரே நியமிக்கப்பட வேண்டும் என்றார். 7 பேரில் இருவரே அமைச்சரினால் நியமிக்கப்பட வேண்டும். ஏனைய ஐவரும் உலமா சபையின் தலைவர், வக்பு சபையின் தலைவர், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர், சிரேஷ்ட சட்டத்தரணி ஒருவர் அல்லது நிர்வாக சேவை அதிகாரி ஒருவர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோராக அமைய வேண்டும் என்றார்.
எதிர்காலத்தில் முஸ்லிம் சமய விவகாரங்களுக்கு மாற்று மத அமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட்டால் ஹஜ் குழு நியமனத்தில் பாதகங்கள் ஏற்படும் என்பதைக் கருத்திற்கொண்டே இத்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார். எதிர்காலத்தில் ஹஜ் ஏற்பாடுகள் அரசியல் மயமாக்கப்படக்கூடாது என்பதையே மக்களும் எதிர்பார்க்கிறார்கள்.
சிவில் சமூக பிரதிநிதிகள், ஹஜ் முகவர்கள் கூட்டம்
ஹஜ் சட்ட மூல நகல் வரைபு தொடர்பாக இறுதிக் கலந்துரையாடலொன்று கடந்த 26 ஆம் திகதி தபால் தலைமையக கேட்போர் கூட அரங்கில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், ஹஜ் முகவர் நிலையங்களின் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். வை.எம்.எம்.ஏ. யின் பிரதிநிதிகள், ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸிலின் பிரதிநிதிகள், தேசிய சூரா கவுன்ஸிலின் பிரதிநிதிகள், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பிரதிநிதிகள், சிரேஷ்ட சட்டத்தரணிகள் என பலர் கலந்து கொண்டனர். ஹஜ் சட்ட மூல நகல் வரைபினை அரச ஹஜ் குழுவின் உறுப்பினர் சட்டத்தரணி இல்யாஸ் சமர்ப்பித்தார்.
கலந்துரையாடலில் கலந்துகொண்ட சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், ஹஜ் முகவர்கள் ஹஜ் சட்ட மூல நகல் வரைபினை ஆராய்ந்து தங்கள் கருத்துகளை முன்வைப்பதற்கு இருவார காலஅவகாசம் கோரியதையடுத்து இருவார காலஅவகாசம் வழங்கப்பட்டது. இருவாரத்தின் பின்பு அவர்களின் கருத்துகளையும் உள்வாங்கி ஹஜ் சட்ட மூல நகல் வரைபு பூரணப்படுத்தப்பட்டு சட்ட வரைஞர் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
ஹஜ் முகவர் நிலைய உரிமையாளர்
புதிய ஹஜ் சட்ட மூலம் தொடர்பில் கரீம் லங்கா முகவர் நிலைய உரிமையாளர் ஏ.சி.பி.எம். கரீம் கருத்து தெரிவிக்கையில்;
‘அரச ஹஜ் குழுவுக்கு எதிராக முறைப்பாடுகள் செய்ய முடியாது என சட்டமூல வரைபில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச ஹஜ் குழு ஏதும் ஊழல்களில் ஈடுபட்டால் ஹஜ் முகவர்கள் முறைப்பாடு செய்யும் வகையில் வரைபில் திருத்தங்கள் உள்வாங்கப்பட வேண்டும்.
அத்தோடு புதிதாக ஹஜ் முகவர்கள் நியமிக்கப்படும்போது தேவையான தகைமைகளை உடையவர்களே நியமனம் பெறவேண்டும் என்றார்.
ஹஜ் குழு உறுப்பினர் எம்.எஸ்.எம். தாஸிம்
அரச ஹஜ் குழுவின் உறுப்பினர் எம்.எஸ்.எம். தாஸிம் மௌலவி கருத்து தெரிவிக்கையில்;
‘ஹஜ் சட்ட மூல வரைபு ஹஜ் ஏற்பாடுகளில் அரசியல் அழுத்தங்கள் இடம்பெறாத வகையின் அனைவரதும் கருத்துகள் உள்வாங்கப்பட்டே பூரணப்படுத்தப்படும். இன்று பதிவு செய்யப்படாத உபமுகவர்கள், பொது மக்களிடமிருந்து பணம் அறவிட்டுக் கொண்டு பதிவு செய்யப்பட்ட முகவர்கள் ஊடாக ஹஜ் மற்றும் உம்ரா பயண ஏற்பாடுகளைச் செய்வதால் ஊழல் மோசடிகள் இடம்பெறுகின்றன. இவற்றைத் தடைசெய்வதற்கு ஹஜ் ஏற்பாடுகளுக்கு தனியான சட்டம் அவசியமாகும் என்றார்.
அரச ஹஜ் குழுத் தலைவர்
அரச ஹஜ் குழுவின் தலைவர் கலாநிதி எம்.ரி. சியாத் கருத்து தெரிவிக்கையில்; ஏப்ரல் மாதத்தில் ஹஜ்சட்ட மூல நகல்வரைபு பூரணப்படுத்தப்படும். இந்த சட்டத்தின் மூலம் மக்கள் உச்ச பயனைப் பெற்றுக்கொள்வார்கள். அடுத்த வருடத்திலிருந்து ஹஜ் ஏற்பாடுகள் புதிய ஹஜ் சட்டத்தின் மூலமே முன்னெடுக்கப்படும். பலதரப்பினரதும் கருத்துகள் உள்வாங்கப்பட்டே ஹஜ் சட்டமூல வரைபு தயாரிக்கப்பட்டுள்ளது என்றார்.
அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம்
அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் கருத்துத் தெரிவிக்கையில்; தற்போதைய ஹஜ் ஏற்பாடுகள் உயர்நீதிமன்றம் 2013 ஆம் ஆண்டு வழங்கிய ஹஜ் வழிமுறையின் (Guide Lines) படியே முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஹஜ் முகவர்கள் தொடர்ந்து அரச ஹஜ் குழுவுடனும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துடனும் அமைச்சர்களுடனும் முரண்பட்டுக்கொள்கிறார்கள்.
முகவர்கள் தொடர்பாக வருடாந்தம் முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்று வருகின்றன. இவற்றுக்குத் தீர்வு காணப்பட வேண்டுமென்றால் ஹஜ் ஏற்பாடுகளுக்கு ஒரு தனியான சட்டம் தேவை என்று உணரப்பட்டதனாலே அதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் அனைத்து சட்ட ரீதியான வழிமுறைகளின் பின்பு ஹஜ் சட்ட மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றிக் கொள்ளப்படும். அடுத்த வருடம் முதல் ஹஜ் ஏற்பாடுகள் ஹஜ் சட்டத்தின் கீழேயே முன்னெடுக்கப்படும் என்றார்.
யாத்திரிகர்களின் நலன்கள்
ஹஜ் சட்டமூலம் முக்கியமாக ஹஜ் யாத்திரிகர்களின் நலன்களை உள்ளடக்கியதாகவே அமையவேண்டும். தற்போதைய ஹஜ் ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ள ஹஜ் முகவர்கள் ஹஜ் ஏற்பாடுகளை புனித சேவையாகக் கருதாது இலாப மீட்டுவதை மாத்திரமே இலக்காகக் கொண்டு செயற்படுவதை எவராலும் மறுக்க முடியாது.
வருடாந்தம் ஹஜ் அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளும் 90 இற்கும் மேற்பட்ட ஹஜ் முகவர்கள் ஒவ்வொரு வருடமும் மில்லியன் கணக்கான ரூபாய்களை இலாபமாகப் பெற்றுக்கொள்கிறார்கள். அத்தோடு ஒரு சில முகவர்கள் ஊழல் மோசடிகளில் ஈடுபடுகிறார்கள். ஹஜ் ஏற்பாடுகளுடன் கடத்தல் நடவடிக்கைகளிலும் சிலர் ஈடுபடுவது நிரூபிக்கப்பட்டுள்ளது. இவ்வாறானவர்களால் மொத்த ஹஜ் முகவர்களும் சந்தேகக் கண்கொண்டு நோக்கப்படுகிறார்கள். ஊழல், மோசடிகளில் ஈடுபடும் ஹஜ் முகவர்களுக்கு அதியுச்ச தண்டனை பெற்றுக் கொடுக்கும் வகையில் ஹஜ் சட்டமூல வரைபு பூரணப்படுத்தப்படவேண்டும். இதுவே சமூகத்திற்கும் நாட்டுக்கும் நன்மை பயப்பதாக அமையும்.
-Vidivelli