கடந்த மார்ச் மாதம் 15 ஆம் நாள் வெள்ளிக்கிழமை அன்று அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த வலதுசாரி வெள்ளை இனவாதி ஒருவன் நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சேர்ச் பகுதியிலுள்ள இரு பள்ளிவாசல்களில் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலில் பெண்கள் உட்பட 50 பேர் படுகொலை செய்யப்பட்டு, 20 பேர் காயமடைந்த கோரச் சம்பவத்தை அனைவரும் அறிவர்.
வெள்ளிக்கிழமை தொழுகைக்காக பள்ளிவாசலில் கூடியிருந்த முஸ்லிம்கள் மீது இந்தத் துப்பாக்கிச்சூட்டை நிகழ்த்திய பிரெண்டன் ஹாரிசன் டாரன்ட் அதைத் தன்னுடைய முகநூல் பக்கத்திலும் நேரலையாகப் பதிவு செய்துள்ளான். வன்மத்துடன்கூடிய இந்தப் பயங்கரவாத செயலுக்கு உலகம் முழுவதிலும் கண்டனங்கள் ஒலித்துக்கொண்டுள்ளன.
துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டவுடனேயே இதுவொரு தீவிரவாதத் தாக்குதல் என்றும், நாட்டின் கறுப்பு தினங்களுள் இதுவும் ஒன்று என்றும் நியூஸிலாந்தின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் கூறினார். அவுஸ்திரேலிய பிரதமரும் இதை வலதுசாரித் தீவிரவாதம் (Far Right Extremism) என்று கண்டித்திருந்தார்.
உலகையே அதிர்வடையச் செய்த இச்செயல், அமைதியை விரும்பும் நாடான நியூசிலாந்தில் நடந்தது அதிர்ச்சியைத் தரும் ஒரு சம்பவமாகவே உலக நாடுகளால் பார்க்கப்படுகின்றன. பெரும்பாலான உலக நாடுகளின் தலைவர்களது இரங்கல் செய்திகளும் , கண்டனங்களும் வேகமாகப் பதிவாகின. உலக மக்களின் கவலைபடிந்த எண்ணங்களும் சமூக வலைத்தளங்களில் பதிவாகின. நியூசிலாந்து அரசாங்கமும் பாதுகாப்புப் பிரிவினரும் உடனேயே செயற்பட்டுத் தேவையான துரித நடவடிக்கைகளை மேற்கொண்டதால் கொலையாளிகளை உடனேயே கைதுசெய்ய முடியுமாக இருந்தது.
3/15 தாக்குதலில் தொடர்புடைய டாரன்ட் உள்ளிட்ட மூவரைக் கைது செய்து, அவர்களிடமிருந்த பயங்கர ஆயுதங்களையும் கைப்பற்றிய நியூஸிலாந்து காவல்துறை மறுநாளே அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தியது. தற்சமயம் முக்கிய குற்றவாளியான டாரன்ட் கொலைக் குற்றச்சாட்டில் சிறைவைக்கப்பட்டுள்ளான். ஏப்ரல் 5 ஆம் திகதிக்கு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
டாரன்ட் துப்பாக்கிச்சூடு நடத்துமுன் ராடோவன் என்பவனை நாயகனாகக் கொள்ளும் பாடலொன்றைக் கேட்டபடி பள்ளிவாசலினுள் நுழைகிறான். ராடோவன் பொஸ்னிய முஸ்லிம்களை இனப்படுகொலை செய்ததற்காகவும் பிற போர்க் குற்றங்களுக்காகவும் சிறைவைக்கப்பட்டவன். அதுமட்டுமல்லாமல், இவனைப் போலவே கூட்டுக்கொலை புரிந்த மற்றொரு கொடூரனான அன்டர்ஸ் ப்ரீவிக்கிடம் ஆசி பெற்ற பிறகே தாக்க வந்ததாக டாரன்ட் அதிர்ச்சியூட்டுகிறான். 2011 ஆம் ஆண்டு நோர்வேயின் ஓஸ்லோவில் 77 பேரைக் கொன்று குவித்த பயங்கரவாதிதான் இந்த அன்டர்ஸ் ப்ரீவிக். டாரன்ட் தொடர்புபடுத்தும் இதுபோன்ற ஆட்களும், இதர குறியீடுகளும் அவனுடைய தீய குறிக்கோளையும் முஸ்லிம் விரோத அரசியலையும் தூலமாகப் புலப்படுத்துகின்றன.
டாரன்ட் மாபெரும் குடியேற்றம் எனும் தலைப்பில் இணையதளத்தில் வெளியிட்ட 74 பக்க அறிக்கை முழுவதும் தீவிர வலதுசாரி, வெள்ளையினவாத வெறுப்புரைகளால் நிறைந்திருக்கின்றன. மேலும், பிற நாடுகளிலிருந்து மேற்குலகுக்குக் குடிபுகுவோர் மீதான கடும் துவேஷத்தை (Xenophobia) அது கக்குகிறது. இந்தக் கோரத் தாக்குதலை நடத்தியதற்கான காரணமாக டாரன்ட் தனது அறிக்கையில், “நம்முடைய நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களுடைய (குடிபுகுந்தோருடைய) நிலங்களாய் ஆகமுடியாது என்பதை அவர்களுக்கு உணர்த்துவதற்காகவே” என்று கூறியிருக்கிறான். மேலும் ஆக்கிரமிப்பாளர்களை அச்சுறுத்தியும் அழித்தொழிப்பதன் வழியாகவும் ஐரோப்பிய மண்ணில் அவர்களின் குடியேற்ற விகிதத்தைக் கட்டுப்படுத்துவதைத் தனது நோக்கம் என்கிறான்.
தீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்த வார்த்தைகள், தீவிரவாதிகளின் வரலாற்று கோபம், வக்கிரம், பகையை வெளிப்படுத்துக்கின்றது.
turkofagos
என்ற கிரேக்க மொழி வார்த்தைக்கு “துருக்கி கொலைக்காரர்கள்” என பொருள்
Miloš_Obili
1389ஆம் ஆண்டு உதுமானிய சுல்தான் முராத்-1 அவர்களை படுகொலை செய்த செர்பிய படைதளபதியின் பெயர்
John Hunyadi
கொன்ஸ்டான்டிநோபிள் வெற்றிக்கு பின் 1456ஆம் ஆண்டு நடைபெற்ற யுத்தத்தில் 2 ஆம் சுல்தான் மஹ்மூதின் படைக்கு எதிராகப் போராடி வெற்றிகொண்ட ஹங்கேரியின் இராணுவத் தளபதி பெயர் Vienna 1683
உதுமானிய படை வியன்னா போரில் தோல்வியுற்ற ஆண்டு.
இவை எல்லாம் உதுமானிய கிலாபத்திற்கு எதிராக கிறிஸ்தவ உலகம் பெற்ற வெற்றியின் குறியீடுகள். இவைமட்டுமல்லாமல், Refugees welcome to Hell என அகதிகளுக்கு எதிரான வெறுப்பு வாசகங்களும் துப்பாக்கிகளில் குறியீடாக எழுதப்பட்டுள்ளது.
இது புத்தி நலம் இல்லாத ஒரு பைத்தியக்காரன் நடத்திய தாக்குதல் அல்ல, முஸ்லிம்களின் மீது வரலாற்று ரீதியாக பகை ஊட்டப்பட்ட இஸ்லாமிய வெறுப்பு ஆலையில் உருவான பாஸிஸ தீவிரவாதிகளின் திட்டமிட்ட தீவிரவாத தாக்குதல் என்பதை அறிந்து கொள்ளலாம்.
ஆக மொத்தத்தில், உலகம் முழுவதிலும் செயற்பட்டுவரும் இஸ்லாம் வெறுப்பாளர்களின் (Islamophobes) வழமையான சவடால்களே டாரன்டிடமும் வெளிப்படுகின்றன. அந்நியர் குடியேற்றம், பிறப்பு விகிதம் அதிகரிப்பு, நாட்டுக்கு அச்சுறுத்தல், கலாசாரம் அழித்தொழிக்கப்படுகிறது போன்ற வலதுசாரி பாசிஸ்டுகளின் அடிப்படைகளற்ற சதிக் கோட்பாடுகளே இவனுடைய பேசுபொருள்களாக உள்ளன
உண்மையில், நியூஸிலாந்து பயங்கரவாத சம்பவம் ஒரு தனித்த நிகழ்வன்று. முஸ்லிம்களுக்கு எதிராக மேலை நாடுகளில் உருவாக்கப்படும் இஸ்லாமோ போபியாவின் எதிரொலிதான் இதுவும். கருத்துச் சுதந்திரத்தின் பெயரால் அரசியல் தளத்திலும் ஊடகங்களிலும் இஸ்லாம்-அச்சமும், இஸ்லாம்-வெறுப்பும் பெருமளவில் பரவலாக்கப்பட்டுள்ளன.
வெள்ளையினத் தேசியவாதிகளும், சுவிஷேசக் கிறிஸ்தவர்களும் (Evangelical Christians), ஸியோனிஸ்டுகளும் இதைப் பெரும் தொழிலாகவே வளர்த்தெடுத்திருக்கின்றனர்.
இஸ்லாமோபோபியா உருவாக்கத்தின் பின்னணியையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது. இரு துருவங்களாக அமெரிக்காவும் சோவியத் யூனியனும் உலகைக் கோலோச்சியபோது அமெரிக்காவுக்கு கம்யூனிஸ எதிரி தேவைப்பட்டது. பனிப்போருக்குப் பிந்தைய உலகில் அதற்குப் பதிலீடாக இஸ்லாம் எதிரி முன்னிறுத்தப்படுகிறது. முன்பு கம்யூனிஸப் பூச்சாண்டி காட்டியவர்கள் தற்காலத்தில் இஸ்லாம் குறித்து அச்சத்தை விதைப்பதன் மூலம் அரசியல் அனுகூலமடைகிறார்கள்.
இன்று முஸ்லிம் உம்மத் உலகளாவிய ரீதியிலும் உள்நாட்டு மட்டங்களிலும் நெருக்கடியானதொரு கால கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இஸ்லாம் பற்றிய பீதியும் அச்சமும் முஸ்லிம்கள் குறித்த வெறுப்பும் காழ்ப்புணர்வும் உலகளாவிய ரீதியில் விதைக்கப்பட்டதன் விளைவுகளை முஸ்லிம் உம்மத் கோரமாக அனுபவித்து வருகின்ற காலம் இது.
இன்று இஸ்லாமோபோபியா ஒரு தனியான துறையாக மாறியிருக்கிறது. இதற்கென்று கோடிக்கணக்கான டொலர்கள் ஒதுக்கப்பட்டு, இதற்கென்றே வளவாளர்கள் நியமிக்கப்பட்டு சர்வதேச மட்டங்களிலும் பிராந்திய மட்டங்களிலும் தேசிய மட்டங்களிலும் திட்டமிட்ட அடிப்படையில் இந்தத் துறை வளர்க்கப்பட்டு வருவதை நாம் அறிவோம். அவ்வாறே இராணுவ ரீதியாகவும் சிந்தனா ரீதியாகவும் திட்டமிட்ட படையெடுப்புகளுக்கு முகம்கொடுத்திருக்கும் சர்வதேச இஸ்லாமிய உம்மத் உளவியல் ரீதியான படையெடுப்புக்கும் முகம்கொடுத்திருக்கின்றது. முஸ்லிம்களை உளவியல் ரீதியாக பலவீனப்படுத்தி தோல்வி மனப்பான்மையை (Defeated Mentality) உருவாக்கும் நோக்குடன் உளவியல் ரீதியான ஆக்கிரமிப்பு முடுக்கி விடப்பட்டிருக்கிறது.
இன்று இஸ்லாமிய உலகிலும் மேற்கிலும் ஏற்பட்டிருக்கும் நவீன இஸ்லாமிய எழுச்சியின் வேகமான அலைகள் உலக மக்களை அதனை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்துள்ளன.
குறிப்பாக மேற்குலகில் மிக வேகமாக மனித உள்ளங்களை வசீகரித்து வரும் மார்க்கமாக இஸ்லாம் மாறியிருப்பது அங்குள்ள கிறிஸ்தவ தேவாலயங்களையும் விரோதப் போக்காளர்களையும் ஆத்திரம் கொள்ளச் செய்துள்து.
இதன் விளைவாக கிறிஸ்தவப் பாதிரிகளும் மேற்குலகின் சில அறிஞர்களும் (?) இஸ்லாம் குறித்து போலியான கருத்தியல்களை முன்வைப்பதோடு முஸ்லிம்களை கொடூரமானவர்களாகவும் பயங்கரவாதிகளாகவும் காட்ட முனைந்தனர். இவ்வாறான செயற்பாடுகளினால் Islamophobia எனப்படும் கருத்தியல் மேற்குலகால் கட்டமைக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் இக்கருத்தியல் குறித்த போதிய விளக்கம் எமது சமூகத்தில் முன்வைக்கப்படாமையால் அதுபற்றி சிறு விளக்கத்தை இவ்வாக்கத்தின் ஊடாக முன்வைக்க முயற்சிக்கிறேன்.
Islamophobia என்றால் என்ன?
மேற்குலகில் பரவிவருகின்ற அல்லது கட்டமைக்கப்பட்டிருக்கின்ற இஸ்லாமியப் பீதியின் பரிபாஷைக் கருத்தாகவே இது காணப்படுகின்றது. Islamophobia என்ற சொல் பீதி, அச்சம், நோய், பயம் போன்ற கருத்துக்களைக் கொண்ட ஒரு கிரேக்க சொல்லாகும். 2011/09/11 இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப்பின் மேற்குலகில் உருப்பெற்ற கருத்தியலாகவும் இதனை அடையாளப்படுத்த்தலாம்.
Islamophobia வானாது முஸ்லிம்களை மதத் தீவிரவாதிகளாகவும் இரக்கம், பண்பாடு என்பனவற்றை அறியாத மனித சமுதாயத்திற்கு எதிரான சமத்துவம், மன்னிப்பு போன்ற மனித பண்புகளுக்கு விரோதமானவர்களாகவும் சித்திரிப்பதைக் குறிக்கின்றது.
இவ்வாறான கட்டமைப்பை மேற்கொள்வதன் மூலம் மேற்கு மக்களின் உள்ளங்களில் இஸ்லாம் பற்றிய மோசமான பிம்பங்களை கட்டமைக்கின்றது. முஸ்லிம்களின் உள்ளங்களில் மேற்கை வெல்ல முடியாது, அதனுடன் போராட முடியாது, அது அசைக்க முடியாத சக்தி போன்ற மாயையை உருவாக்குகிறது. இதுதான் நவீன காலப் போர் முறையாகும்.
இஸ்லாம் பற்றிய மேற்குலகின் பார்வை
மேற்கு என்பது ஒரு பிரதேசத்தை பிரதிபலிப்பதல்ல. மாறாக, அது ஒரு வாழ்க்கை முறையாகும். உலகில் எக்கண்டத்தில் வாழும் எவரேனும் இவ்வாழ்க்கை முறையை பின்பற்றுபவராக இருக்கலாம். அவர் மேற்கத்தேயவாதி என்றே அழைக்கப்படுவார்.
மேற்கு புனித அல்குர்ஆனிய வசனங்களை முற்றாக மறுக்கிறது. அதனைப் போலியானது, படைக்கப்பட்டது, ஷைத்தானிய வசனங்கள் என இழிவுபடுத்துகின்றது. இறுதித் தூதர் நபி (ஸல்) அவர்களையும் அவர்களது ஆளுமைப் பண்புகளையும் கொச்சைப் படுத்துவதோடு மிக மோசமாக விமர்சனங்களையும் முன்வைக்கின்றது.
இதன் விளைவாக அடிக்கடி நபி (ஸல்) பற்றிய கேலிச் சித்திர நிகழ்வுகள் நடந்தேறி வருகின்றன.
குறிப்பாக முஸ்லிம்களையும் பொதுவாக அறபிகளையும் காட்டுமிராண்டிகளாகவும், இரத்தம் குடிக்கும் ராட்சகர்களாகவும், பயங்கரவாதிகளாகவும், உலக சமாதானத்தினதும் அமைதியினதும் எதிரிகளாகவும் காட்டுகிறது. மேற்கத்தேயவாதிகளை உலகின் கதாநாயகர்களாக சித்திரிக்கிறது.
இஸ்லாம் குறித்து மேற்கத்தேயம் ஏன் பயப்படுகிறது?
இயற்கையாகவே இறைவன் ஏற்படுத்தி வைத்திருக்கும் இஸ்லாத்தின் இயங்கியலானது இஸ்லாத்தின் தோற்றம் முதல் இன்று வரை அது சந்தித்து வந்த எதிர்ப்புக்களை தகர்த்தெறிந்துள்ளது.
இந்த சக்தி இஸ்லாத்திற்கு மாத்திரம் உரியது என்பதனால் எதிர்காலம் இஸ்லாத்திற்கே என மேற்குலகு அஞ்சுகிறது.
மேற்கத்தேயம் மனித வழிகாட்டல்களாக முன்வைத்த கோட்பாடுகள், கருத்துக்கள், சித்தாந்தங்கள் ஏறத்தாழ தோற்றுப் போய்விட்டன. இனிமேல் கொடுப்பதற்கு அவற்றிடம் எதவுமில்லை. ஒருவகை சித்தாந்த வங்குரோத்து நிலையில்தான் அவை உள்ளன.
இந்நிலையில் அவ்விடத்தை இஸ்லாம் நிரப்பிவிடுமோ என்ற அச்சம் மேற்கத்தேயர்களை ஆட்கொண்டுள்ளது. எனவே மேற்கில் வேகமாக பரவும் மார்க்கமாக இஸ்லாம் மாறியிருப்பதால் அதனை இழிவுபடுத்தி பல ஆய்வுகளையும் புத்தகங்களையும் அவர்கள் லெளியிடுகின்றனர். உதாரணமாக:
1.Islamic invasion, Confronting of the world’s growing religion by Robert Mores
2.Militent Islam Reaches America by Deniel Pipes
போன்ற நூல்களை கூறமுடியும். இந்தப்புத்தகங்களின் வருகை மேற்கத்தேயம் தோல்வியடைகிறது அவ்விடத்தை இஸ்லாம் நிரப்புகிறது என்பதற்கான ஆதாரங்களாகும். அதேபோல் மேற்கத்தேயவாதிகள் இஸ்லாம் குறித்த போதிய விளக்கமின்மையால் உருவாக்கிக் கொண்ட பீதியே அவர்கள் இஸ்லாத்தின் உண்மையை அறியவில்லை. அதனை வெறும் கோட்பாடாகப் பார்க்கின்றனர். சில நிகழ்வுகளையும் தோற்றப்பாடுகளையும் வைத்தே இஸ்லாத்தை மதிப்பிடுகின்றனர். தமது உலக சித்தாந்தங்களை இஸ்லாத்தோடு பொருத்திப் பார்க்கின்றனர். இவைகளே இஸ்லாம் குறித்த அச்சம் எழுவதற்கு காரணமாக அமைகின்றன.
Islamophobia வை உருவாக்குவதில் மேற்கத்தேய ஊடகங்கள்
இன்றைய உலகம் ஊடகப் பயங்கரவாதத்தின் (Media Terrorism) கோரப்பிடியில் சிக்கியிருக்கிறது. ஊடகத் தொழில் நுட்பத்தில் அபரிமிதமான வளர்ச்சி கண்டுள்ள மேற்குலகின் தயாரிப்புக்களுக்கும் விரிவுபடுத்தலுக்கும் முன்னால் ஏனைய ஊடகங்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. எங்கு பார்த்தாலும் மேற்கு ஊடகங்களின் ஆதிக்கமே தொழிற்படுகின்றது. இதனால் மேற்கத்தேயத்தின் சிந்தனைகளும் கருத்துக்களும் உலகமயப்படுத்தப்பட்டுள்ளன.
2001/09/11 க்குப் பின்னர் மேற்குலகின் தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள், பத்திரிகைகள், சஞ்சிகைகள் என பல்வேறு தளங்களிலும் இஸ்லாமியப் பீதியை மேற்குலகு உலகமயப்படுத்தியது. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் முன்னணி ஊடக நிறுவனங்களாக செயற்பட்டு வருபவை யூத செல்வந்தர்களுக்கு சொந்தமானவை. உதாரணமாக
AOL Time Waner
The World Disney Company
Viacom inc
News Cooperation Limited Seagral Company Limited
The New York Times
The Wall Street Journal
The Washington Post
Fox News, CNN, Reuturs, Google
போன்றவற்றை குறிப்பிடலாம். இவை இஸ்லாமியப் பீதியை மனித உள்ளங்களில் கனகச்சிதமாக விதைத்து வருகின்றன.
இது மட்டுமன்றி இஸ்லாத்தின் எதிரிகள் இஸ்லாத்தை கொச்சைப்படுத்தி பல பத்திரிகை வெளியீடுகளை செய்தி வருகின்றனர். வத்திகானில் மட்டும் 200 க்கும் மேற்பட்ட தினசரிகள் வெளிவருகின்றன. இது தவிர வாராந்த, மாதாந்த இதழ்கள் வெளிவருகின்றன.
இன்னும் 154 ஒளிபரப்பு நிலையங்கள் இஸ்லாத்தை பற்றி பிழையான கருத்துக்களை முன்வைப்பதற்காக அங்கு செயற்பட்டுவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இஸ்லாமியப் பீதியை ஏற்றுமதி
செய்வதில் Hollywood
திரைப்படங்களின் பங்கு
ஹொலிவூட் திரைப்படங்கள் உலகளவில் பாரிய கவனயீர்ப்பைப் பெற்ற பல ரசிகர்களை வசீகரித்து வைத்திருக்கும் மேற்கத்தேய சினிமா முறையாகும். இது 1 ஆம் உலக மகா யுத்தத்தின் பின்னர் அமெரிக்காவை நோக்கி குடிபெயர்ந்த யூதர்களினால் உருவாக்கப்பட்டது. ஹொலிவூட் சினிமாவின் திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களில் பெரும்பான்மையானவை யூதர்களுக்கு சொந்தமானவை. உதாரணமாக Colombia Coldwyn Myer-Metro Warner Brothers Peramount Universal போன்றவற்றைக் குறிப்பிட முடியும். ஹொலிவூட் சினிமாக்கள் முஸ்லிம்களை வில்லன்களாகவும் பண்பாடற்ற, நாகரிகம் தெரியாத, மனித இரத்தத்தை குடிக்கும் சமூகமாகவே அவர்களை சித்திரிக்கின்றன. 2001/09/01 இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பின் இந்த நிலைமை அதிகரித்துள்ளது. இவ்வாறான ஹொலிவூட் திரைப்படங்களில் 70% க்கும் மேற்பட்டவை முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவும் பயங்கரவாதிகளாகவும் பெண்களை துன்புறுத்துபவர்களாகவும் காட்சிப்படுத்துகின்றன.
அரபு, – இஸ்ரேல் சமூகங்களுக்கிடையில் போராட்டத்தை தூண்டும் வகையிலும் தமது போராட்டத்தை நியாயப்படுத்தும் வகையிலும் அவர்கள் திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டனர்.
Network (1976)
Exodus (1960)
Black of Sunday (1977)
The Delta Force (1986)
போன்ற திரைப்படங்கள் இவ்வாறான கருத்துக்களை பிரதிபலிப்பதாக வெளியிடப்பட்ட திரைப்படங்களகும்.
இதுவரை வெளியான முஸ்லிம்களை மோசமாக சித்திரிக்கும் திரைப்படங்களுக்கு உதாரணங்களாக Erodus, Black Sunday, Delta Force, Iron Eagle, Ruls Of Engagment, Hidalco, The Mummy Returns போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
எதிர்காலம் இஸ்லாத்திற்கே!
கிறைஸ்ட்சேர்ச்சில் நடந்த இப்பயங்கரவாதத் தாக்குதல் உலக மக்களை இஸ்லாத்தின் பக்கம் மீண்டும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. அமெரிக்காவில் நடந்த இரட்டைக் கோபுரத் தாக்குதலின் போது உலகில் அதிகமாகப் பேசப்பட்ட மதம் இஸ்லாம் என்றாலும் அத்தாக்குதலில் மறைக்கப்பட்ட உண்மைகளும், சதிகளும் பின்னர் மெதுவாக அம்பலமாகின. அதன்பின் அமெரிக்கர்கள் மட்டுமன்றி ஏனைய மேற்கத்தேய ஐரோப்பிய நாடுகளில் வாழும் மக்களும் இஸ்லாத்தை பற்றி ஆராய ஆரம்பித்தனர்.
அதன் விளைவு இஸ்லாமிய மார்க்கத்தின் உண்மைத் தன்மையுடன் ஒரிறைக் கொள்கையின் பால் ஈர்க்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்கள் அப்போது புனித இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டது மட்டுமன்றி, தொடர்ச்சியாக இஸ்லாத்தை ஏற்றுக் கொள்பவர்கள் அதிகமாகி இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டது மட்டுமன்றி, தொடர்ச்சியாக இஸ்லாத்தை ஏற்றுக் கொள்பவர்கள் அதிகமாகிக் கொண்டே போவதால், உலகில் இஸ்லாத்தின் வளர்ச்சியின் வேகம் துரிதமாகிக் கொண்டே போவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இன்று உலகில் மிகவும் வேகமாகப் பரவும் மதமாக இஸ்லாம் மாறிவிட்டது. அதே போன்றுதான் கிறைஸ்ட்சேர்ச் தாக்குதலின் பின்னரும் நியூசிலாந்தில் இஸ்லாத்தின் பால் ஈர்க்கப்பட்டு ஓரிறைக் கொள்கையை ஏற்றுக் கொள்ளும் மக்கள் அதிகரித்திருப்பதாக ஊடக செய்திகளில் காண முடிகிறது.
இன்னும் ஏராளமான நாடுகளில் வாழும் மக்கள் இஸ்லாத்தின் கொள்கைகளை ஆராய ஆரம்பித்திருப்பது இஸ்லாமிய எதிர்ப்பாளர்ளுக்கு பேரிடி தரும் செய்தியாக இருக்கும் என்பதில் எந்த ஐயமுமில்லை.
இஸ்லாத்தை அழிப்பதற்கு அதன் எதிரிகள் என்னதான் முயற்சித்தாலும் அதன் வளர்ச்சியையும் எழுச்சியையும் எந்த சக்தியாலும் அழித்துவிட முடியாது. இது ஏக இறைவனின் வாக்காகவும் உள்ளது.
மோசி ஸாபிச் என்ற இராஜதந்திரி தனது ஆய்வில் வளரும் பிறையும் நாகரிகத்தின் வீழ்ச்சியும் எனும் தலைப்பின் கீழ் தனது Europe and Islam எனும் நூலில் கூறும் பொழுது 21 ஆம் நுற்றாண்டின் அரை இறுதிப் பகுதிக்குள் இஸ்லாம் ஐரோப்பாவின் தீர்மானிக்கும் சக்தியாக மாறும் சாத்தியம் உள்ளது என்கிறார்.
உலகளாவிய ரீதியில் ஏற்பட்டிருக்கும் இஸ்லாமிய எழுச்சி அலைகளினால் மேற்குலகம் நடுநடுங்கிப் போயுள்ளது. இதனால்தான் இஸ்லாம் குறித்த மாயைகனை அவர்கள் கட்டமைக்க முயற்சிக்கின்றனர்.
ஆனால் மேற்குலக மக்கள் இஸ்லாத்தை தெரிந்து கொள்வதில் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுதான் இன்றைய ஐரோப்பாவினதும் அமெரிக்காவினதும் நிலை. மேற்கத்தேயவாதிகள் ஏற்படுத்திவிட்ட இஸ்லாம் பற்றிய பீதி அங்குள்ள மக்களை இஸ்லாம் பற்றி தேடவும் அறியவும் வழிசமைத்துள்ளது.
அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர் (அவர்களுக்கு எதிராக) அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். இன்னும் சூழ்ச்சி செய்வோரில் அல்லாஹ் மிக்க மேலானவன். (08-30)
-Vidivelli