- றம்ஸியா அப்ஹாம்
தர்காநகர்
நாம் உயிர் வாழக் காரணமாக இருக்கும் இந்த பூமி 70% கடலால் சூழப்பட்டிருந்தாலும் நமது இலங்கை திருநாடோ நாற்பக்கமும் கடலால் சூழப்பட்ட ஒரு தீவாகும்.
இலங்கை “இந்து சமுத்திரத்தின் முத்து” என்று அழைக்கப் படுவதற்கும் காரணமாக அமைவது இலங்கையைச் சூழ கடல்நீர் உள்ளமையாகும்.
அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக விளங்கும் நீர் என்பது நிறமோ மணமோ அற்ற தெளிவான ஒரு திரவமாகும். இது அல்லாஹ்வின் அருட்கொடைகளில் ஒன்றாகும். பொதுவாக ஆரோக்கியமான ஒருவர் உணவு இல்லாமல் குறைந்தது 5 நாட்கள் கூட உயிர் வாழலாம். ஆனால் நீரில் எவ்வித கலோரிகளோ உயிர் சத்துக்களோ இல்லாவிட்டாலும் கூட நீரின்றி ஒருவரால் ஒருநாள்கூட உயிர்வாழ முடியாது. மனித உடலுக்கு அன்றாடம் சராசரியாக 6–-8 டம்ளர் தண்ணீர் தேவைப்படுகின்றது. வெப்பமான சூழ்நிலையில் நமது உடலுக்கு அதிகளவு தண்ணீர் தேவைப்படுகின்றது. ஒரு மனிதனின் உடலில் 60% க்கு மேல் நீர் உள்ளது. அதில் 2.7 எனும் மிகச்சிறிய அளவு குறைந்தாலும் மனிதனின் உடலில் டிப்ரெசன், உடல் எரிச்சல், நடுக்கம், தலைவலி, மயக்கம், வயிற்றுப்புண் போன்ற நோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன. இதன் மூலம் நீரின் இன்றியமையாத நிலைமை தெட்டத்தெளிவாகப் புலப்படுகின்றது. இவ்வாறு நீரின் அவசியத்தை வலியுறுத்தியே அக்காலத்தில் ஆட்சி செய்த மன்னனான பராக்கிரமபாகு “ஒரு சொட்டு மழை நீரையும் பயன்படாமல் கடலில் வீணே செல்ல விடக்கூடாது” என்ற வாசகத்தைக் கூறியிருந்தார்.
சுத்தமான நீரைப் பெற்றுக் கொள்ளல் என்பது ஒவ்வொருவரினதும் அடிப்படை உரிமையாகும். ஆனால் தர்காநகர் மக்களுக்கு அந்த உரிமை கூட இல்லை. தர்காநகர் அனைத்து இயற்கை வளங்களுடனும் சுத்தமான நீரையும் கொண்ட செழிப்பான நகரமாகும். ஆனால் எமது மக்களோ அரசனை நம்பி புருஷனை கைவிட்டது போல் 1987முதல் தேசிய நீர் வழங்கல் சபையால் வழங்கப்பட ஆரம்பித்த குழாய் நீரை நம்பி தத்தமது வீடுகளில் பயன்படுத்தி வந்த இயற்கை நீரூற்று கிணறுகளை கைவிட்டு விட்டார்கள். இப்போது இவர்கள் குடிநீருக்காக மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தூர இடங்களுக்குச் சென்றே குடிப்பதற்கான நீரைப் பெற்றுக் கொள்கிறார்கள். ஆனால் குழாய் நீர் வழங்க ஆரம்பித்த ஆரம்ப காலங்களில் குழாய் நீர் வழங்கலில் இப்படியான நெருக்கடிகள் இருக்கவில்லை.
இப்போது கோடை காலம், எல்லோரும் எதிர்நோக்கும் பிரச்சினையைத்தான் நாமும் எதிர்நோக்குகிறோம். ஆனாலும் இது ஒரு தற்காலிகப் பிரச்சினையாக இருந்திருந்தால் விட்டுவிடலாம். எனினும், இதுவொரு நீண்டகால பிரச்சினையாகும். இந்த அத்தியாசிய தேவையான நீர் நெருக்கடி ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை களுத்துறை மாவட்டத்தில் பல அமைச்சர்களும் மாகாண சபை, பிரதேச சபை, நகரசபை அங்கத்தவர்கள் என்று பலர் இருந்தாலும் இப்பிரச்சினையை தீர்க்க யாரும் முன் வருவதாக தெரியவில்லை. இந்த அத்தியாவசிய நீரின் நெருக்கடியைத் தீர்த்து வைப்பாருமில்லை. பணம் செலவழித்து நீரையும் வாங்கிக் கொண்டு, நீர் வழங்கப்பட்டதோ, இல்லையோ நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையால் மாதா மாதம் வழங்கப்படும் ரசீதுக்குரிய கட்டணத்தையும் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதில் வேறு வரட்சியான காலநிலையின்போது, உவர் நீர்தான் குழாய் நீராக வருகிறது.
களுத்துறை மாவட்ட ஏனைய பிரதேசங்களிற்கு இதைப் போல் குழாய் நீர் விநியோகத்தில் பாரிய தடைகள் இல்லை. தர்காநகரின் பல பகுதிகளுக்கு குழாய் நீர் வழங்கும் நாட்களை விட வழங்கப்படாத நாட்களே அதிகம். குழாய் நீர் வழங்கும் நாட்களிலும் கூட அமுக்கம் குறைவாகவே வழங்கப்படுகிறது. இதனால் நீரை சேமிப்பதும் ஒரு பிரச்சினையாகவே மாறியுள்ளது.
மார்ச் 22 ஆம் திகதி சர்வதேச நீர் தினம் நினைவுகூரப்பட்டது. நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையும், அமைச்சும் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வைபவரீதியாக இதனை அனுஷ்டித்தனர். இந்த வருட சர்வதேச நீர் தினம் போதிப்பதே ‘யாவருக்கும் நீர்’ என்பதேயாகும். இந்தக் கொண்டாட்டத்துடன் விசேடமாக தர்காநகர் நீர் நெருக்கடிக்கான தீர்வினையும் கருத்திற்கொண்டு அமைச்சர் ரவூப் ஹக்கீமை அவசர நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துகிறோம்.
அநுராதபுரம், குருநாகலை போன்ற வரண்ட வலய மாவட்டங்களில் சிறுநீரகப் பாதிப்பு, தலசீமியா போன்ற பாரிய நோய்களுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதே போன்று எமது தர்கா நகர் மக்களும் தேசிய நீர் வழங்கல் சபையின் பாரபட்சத்தால், தொற்று நோய் அல்லது தொற்றா நோய்களை எதிர் கொள்ளக்கூடிய அச்சம் உருவாகியுள்ளது. குறித்த பிரதேசத்திற்குப் பொறுப்பானவர்களும் முன் வந்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். தேர்தல் காலங்களில் கொடுத்த வாக்குறுதிகளை மறந்துவிடாது மனிதாபிமானத்துடனும் சேவை மனப்பான்மையுடனும் செயற்பட்டால் பொது மக்கள் பயனடைவர்.
சர்வதேச தினங்கள் நினைவு கூரப்படுவது கொண்டாடுவதற்கு மட்டுமல்ல, குறிப்பிட்ட தினங்கள் நினைவு கூரப்படுவதன் மூலம் ஆட்சியில் உள்ளவர்கள் தமது அதிகாரிகளுடன் சேர்ந்து தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி பொது மக்களுக்கு சேவை செய்வதற்கே என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.
-Vidivelli