நியூஸிலாந்தின் கிரைஸ்ட்சேர்ச் நகரிலுள்ள இரு பள்ளிவாசல்களில் இடம்பெற்ற தாக்குதலில் 50 முஸ்லிம்கள் உயிரிழந்துள்ள நிலையில், அந்நாட்டில் குடியேறி வாழ்வதற்கு விரும்பும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து நியூஸிலாந்தின் பிரதமரும் மக்களும்வெளிப்படுத்திய அனுதாபம் மற்றும் ஆதரவைத் தொடர்ந்தே உலகளாவிய ரீதியில் அந் நாடு தொடர்பில் நல்லபிப்பிராயம் ஏற்பட்டுள்ளதுடன் நியூஸிலாந்தில் குடியேறி வாழ்வதற்கும் தொழில் செய்வதற்குமான ஆர்வத்தையும் அதிகரிக்கச் செய்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
நியூஸிலாந்து குடிவரவு அலுவலக பேச்சாளரின் தகவல்களுக்கமைய, தாக்குதலுக்குப் பின்னரான மார்ச் 15 முதல் 24 வரையான காலப்பகுதியில் 6457 பேர் நியூஸிலாந்தில் குடியேற விண்ணப்பித்துள்ளனர். எனினும் தாக்குதல் இடம்பெறுவதற்கு முன்னரான 10 நாட்களில் விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை 4844 ஆகும்.
இவ்வாறு நியூஸிலாந்தில் குடியேற விண்ணப்பித்தோரில் அதிகமானோர் அமெரிக்கர்களாவர். தாக்குதலுக்குப் பின்னர் 1165 அமெரிக்கர்கள் நியூஸிலாந்தில் குடியேற விண்ணப்பித்துள்ளனர். தாக்குதலுக்கு முன்னரான 10 நாட்களில் 674 அமெரிக்கர்களே விண்ணப்பித்திருந்தனர். இதற்கு அடுத்ததாக பிரிட்டன் மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்தோரும் அதிகளவில் விண்ணப்பித்துள்ளனர்.
இதற்கப்பால் முஸ்லிம் நாடுகளிலிருந்து நியூஸிலாந்தில் குடியேற விரும்புவோரின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தாக்குதலுக்குப் பின்னர் 333 பாகிஸ்தானியர்கள் விண்ணப்பித்துள்ளனர். தாக்குதலுக்கு முன்னரான 10 நாட்களில் 65 பேரே விண்ணப்பித்திருந்தனர். அதேபோன்று தாக்குதலுக்குப் பின்னர் மலேசியாவிலிருந்து 165 பேர் நியூஸிலாந்தில் குடியேற விண்ணப்பித்துள்ளனர். தாக்குதலுக்கு முன்னரான 10 நாட்களில் 67 பேரே விண்ணப்பித்திருந்தனர்.
தாக்குதல் நடந்த கணம் முதல் நியூஸிலாந்து பிரதமர் ஜெஸிந்தா ஆர்டன் வெளியிட்ட கருத்துக்கள், முஸ்லிம்கள் மீது அவர் காட்டிய ஆதரவு, தாக்குதல் நடந்த முதல் வாரத்திலேயே துப்பாக்கி பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கு எடுத்த நடவடிக்கை என்பன உலக மக்கள் மத்தியில் நியூஸிலாந்து தொடர்பான நல்லபிப்பிராயத்தை தோற்றுவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
-Vidivelli