ஆர்ப்பாட்டத்தை தூண்டியமை மற்றும் பங்கேற்றமை ஆகிய குற்றச்சாட்டின் கீழ் ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு தண்டனைக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து எகிப்திய ஜனநாயகசார்பு செயற்பாட்டாளரான அலா அப்தெல் பத்தாஹ் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என அவரது சட்டத்தரணியும் குடும்பத்தினரும் தெரிவித்துள்ளனர்.
செல்வாக்குமிக்க வலைப்பூ எழுத்தாளரும் மென்பொருள் பொறியியலாளருமான அலா அப்தெல் பத்தாஹ், ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கின் 30 ஆண்டு கால ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்த 2011 ஆம் ஆண்டு எழுச்சியை ஆரம்பத்தில் முன்னெடுத்த இளம் எகிப்தியர்களின் தலைமைக் குரலாக விளங்கினார்.
அலா விடுவிக்கப்பட்டுள்ளார் என அவரது சகோதரிகளுள் ஒருவரான மோனா சியீப் கடந்த வெள்ளிக்கிழமை தனது முகநூலிலும், டுவிட்டரிலும் பதிவிட்டிருந்த அதேவேளை அலா அப்தெல் பத்தாஹ் விளையாடுவது போன்ற காணொலியொன்றினை அவரது மற்றுமொரு சகோதரியான சானா சியீப் தனது முகநூலில் பதிவிட்டிருந்தார்.
“இறைவனுக்கு நன்றி. அலா அப்தெல் பத்தாஹ் தற்போது வீட்டில் இருக்கின்றார்” என அவரது சட்டத்தரணி காலித் அலி அவரது முகநூல் பதிவொன்றின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அப்தெல் பத்தாஹிற்கு ஆதரவாக உருவாக்கப்பட்ட முகநூல் பக்கங்களில் அவர் சிரிப்பது, நண்பர்களை கட்டியணைத்து கை குலுக்குவது போன்ற காணொலிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
கெட்ட பெயரைச் சம்பாதித்துக் கொண்டுள்ள டோரா சிறைச்சாலையிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளபோதிலும் அவருக்கு முழுமையான சுதந்திரம் வழங்கப்படவில்லை. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு உள்ளூர் பொலிஸ் நிலையத்திலேயே இரவு வேளைகளில் உறங்க வேண்டும் என்பதோடு தொடர்ச்சியாக பொலிஸ் கண்காணிப்பின் கீழேயே அவர் இருப்பார்.
-Vidivelli