பள்ளிவாசல் பதிவு விவகாரம்: இறுக்கமான சட்டங்களை நாம் தளர்த்தியுள்ளோம்
பதிவு செய்ய பள்ளிவாசல்கள் ஆர்வம் காட்ட வேண்டும் என்கிறார் அமைச்சர் ஹலீம்
பள்ளிவாசல்களை பதிவது தொடர்பில் முன்னர் இருந்த இறுக்கமான சட்டங்களை ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் நாம் தளர்த்தியிருக்கிறோம். அத்துடன் பள்ளிவாசல்களை பதிவு செய்வதனால் எதிர்காலத்தில் ஏற்படவிருக்கும் சிக்கல்களிலிருந்து தவிர்ந்து கொள்ளலாம் என தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.அப்துல் ஹலீம் தெரிவித்தார்.
பள்ளிவாசல்கள், குர்ஆன் மத்ரஸாக்கள், அரபுக் கல்லூரிகளின் பதிவுகள் மேற்கொள்ளும் நடமாடும் சேவையும் பள்ளி நிர்வாக கட்டமைப்பு முறைமை தொடர்பிலான செயலமர்வுகளும் முஸ்லிம் சமய விவகார அமைச்சு மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் என்பன இணைந்து நாடளாவிய ரீதியில் நடாத்தி வருகின்றன. இதன் இரண்டாம்கட்ட நடமாடும் சேவை நேற்று முன்தினம் அக்குறணையில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் ஹலீம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், கடந்த காலங்களில் முஸ்லிம்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வந்தனர். இன, மதவாத சிந்தனையுடைய கடும்போக்குவாதிகள் பள்ளிவாசல் பதிவின்மை தொடர்பிலான பிரச்சினைகளை தோற்றுவித்தபோது எமக்குபெரும் தலைகுனிவுகள் ஏற்பட்டன. ஏனென்றால் எமது பள்ளிவாசல்கள் பதிவுகள் தொடர்பில் சிக்கல்கள் இருந்து வந்தன. இதனால் பாதிக்கப்பட்ட எமது முஸ்லிம் சமூகம் சட்டச் சிக்கல்களுக்குள் சிக்குண்டு தவித்ததை யாராலும் இலகுவில் மறந்துவிட முடியாது.
முன்னர் பள்ளிவாசல் பதிவுகள் பதிவு நடவடிக்கைகளில் இருந்த இறுக்கமான முறைமைகளின் காரணமாகவே பல்வேறு இடங்களிலும் பதிவு நடவடிக்கைகள் இழுபறியில் இருந்தன. குறிப்பாக பள்ளிவாசல் பதிவிற்கு அருகிலுள்ள விகாரையொன்றின் கடிதமும் கோரப்பட்டது. இதனால் எமது சமூகம் பல்வேறு சிரமங்களை எதிர்க்கொண்டது.
எனவே, நாம் ஆட்சியமைத்ததன் பின்னர் பள்ளிவாசல்கள் பதிவு நடவடிக்கையில் இருந்த இறுக்கமான சட்ட நடைமுறைகளை தளர்த்தினோம். இவ்வாறான நிலையிலும் எமது சமூகத்தினர் பள்ளிவாசல்களை பதிவு செய்வதில் நாட்டம்கொள்ளவில்லை. குறிப்பாக பள்ளிவாசல் நிர்வாகத்தினர் அசட்டையாக இருந்தனர் என்பதை நாம் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. இதனால் எதிர்கால பிரச்சினைகளை தவிர்ந்து கொள்வதற்காக பள்ளிவாசல்களை பதியுமாறு வலியுறுத்தி இந்த நடமாடும் சேவையை முன்னெடுத்து வருகின்றோம். இதன்மூலம் எமது எதிர்கால சமூகத்தினர் அமைதியாகவும் சுதந்திரமாகவும் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தையே கவனத்திற்கொண்டு செயற்படுகின்றோம்.
அத்துடன், நான் முஸ்லிம் சமய விவகார அமைச்சை பொறுப்பேற்றதன் பின்னர் இலங்கை ஹஜ் பயண ஏற்பாடுகளில் உள்ள முரண்பாடுகளை தவிர்க்க நடவடிக்கை எடுத்தேன். இதனை நிரந்தரமாக்க ஹஜ் சட்டத்தை கொண்டு வர முழுமூச்சாக செயற்பட்டுவருகின்றேன். அதன் இறுதிக் கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனது பதவிக் காலத்திலேயே அதனை நடைமுறைக்கு கொண்டுவருவேன்.
இதுதவிர இன்னும் பல்வேறு முன்னெடுப்புகள் இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக, மத்ரஸாக்களுக்கான பாடத் திட்டமொன்றை கொண்டுவருவதற்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றது என்றும் அவர் இங்கு மேலும் தெரிவித்தார்.
இந் நிகழ்வின்போது, 100 குடும்பங்களுக்கான குடிநீர் வசதிகள் ஏற்படுத்துவதற்கான நன்கொடை வழங்கப்பட்டதுடன், 20 மௌலவிகளுக்கு மதகுருமார்களுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டது. இதுதவிர, அக்குறணையில் உள்ள பதியப்படாத பள்ளிவாசல்களுக்கு பதிவுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. கண் பரிசோதனை முகாம் ஒன்றும் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli