ரோஹிங்ய அகதிகள் பிரச்சினையை பங்களாதேஷினால் மாத்திரம் தனித்து தீர்க்க முடியாது: ஐ.நா. தெரிவிப்பு

0 678

இராணுவ நடவடிக்கைகளிலிருந்து தப்பிப்பதற்காக பங்களாதேஷில் அடைக்கலம் புகுந்துள்ள பாதிக்கப்பட்ட ரோஹிங்ய மக்களை மீள அழைத்துக் கொள்வதற்கான அழுத்தங்களை மியன்மார் மீது பிரயோகிக்குமாறு கடந்த ஞாயிற்றுக்கிழமை ஐக்கிய நாடுகள் சபை உலகத் தலைவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக பங்களாதேஷ் அரசாங்க ஊடக நிறுவனமான சங்பாத் சங்ஸ்தா தெரிவித்துள்ளது.

ரோஹிங்ய அகதிகள் பிரச்சினையை பங்களாதேஷினால் மாத்திரம் தனியாக தீர்க்க முடியாது, அதனைத் தீர்ப்பதற்கு மியன்மார் மீது சர்வதேச சமூகம் அதிக அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் என பங்களாதேஷுக்கு விஜயம் செய்துள்ள படுகொலைகளைத் தடுப்பது தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விஷேட ஆலோசகர் அடமா டீயெங்க் பிரதமர் ஷெய்க் ஹஸீனாவை அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தபோது குறிப்பிட்டார்.

இந்த நெருக்கடிக்கு நிரந்தரத் தீர்வாக கௌரவத்துடனும் பாதுகாப்புடனும் அமைதியான முறையில் ரோஹிங்ய மக்கள் மீளத் திரும்பவேண்டியதன் அவசியத்தை டீயெங்க் வலியுறுத்தினார்.

ரோஹிங்ய மக்கள் ராக்கைன் மாநிலமான தமது சொந்த இடத்திற்கு திரும்ப வேண்டும் என்பதையும் அமைதியானதும் பூரணத்துவமானதுமான சமூகம் அங்கு கட்டியெழுப்பப்பட வேண்டும் என்பதையும் ஐக்கிய நாடுகள் சபை விரும்புகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட ரோஹிங்ய அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தமையை பாராட்டிய அவர் ‘ரோஹிங்ய மக்களுக்காக நீங்கள் கதவுகளை அகலத் திறந்துள்ளீர்கள்’ எனத் தெரிவித்தார்.

ஏராளமான ரோஹிங்ய அகதிகளை கொக்ஸ் பஸார் நகரில் குடியமர்த்துவதில் தமது நாடு எதிர்கொண்ட கஷ்டங்களை ஹஸீனா விளக்கினார். இதனால் உள்ளூர் மக்கள் மிகவும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர் எனத் தெரிவித்த ஹஸீனா, சர்வதேச சமூகம் அதில் அதிகம் தனது கடமைகளைச் செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

ரோஹிங்யர்களைக் குடியமர்த்துவதற்கு பஷான்சார் என்ற தீவினை அபிவிருத்தி செய்து வருவதாகவும் ஹஸீனா குறிப்பிட்டார்.

குறித்த தீவுப் பகுதி அடிக்கடி இயற்கை அனர்த்தத்திற்குள்ளாகும் பகுதியாகும் என சர்வதேச அவதானிகள் எச்சரித்துள்ளனர். பங்களாதேஷ் ரோஹிங்ய அகதிகளை தமது சுய விருப்பின்பேரில் அகதிகள் அங்கு செல்லலாம் எனத் தெரிவித்துள்ளது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.