ஆப்கானிஸ்தானில் விவசாயிகளுடைய களியாட்ட நிகழ்வொன்றில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 4 பேர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்தனர்.
ஆப்கானிஸ்தானில் தென்பகுதியில் ஹெல்மண்ட் மாகாணத்தில் கடந்த சனிக்கிழமை விவசாயிகளுக்கான களியாட்ட நிகழ்வு நடந்தது. இங்கு சுமார் 1000 பேர் கூடியிருந்தனர். இதன்போது திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் குண்டுவெடிப்பை தொடர்ந்து நிகழ்வுகள் அனைத்தும் நிறுத்தப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
இதற்கு முன்னர் ஆப்கானிஸ்தானில் வியாழக்கிழமை நடந்த விழாவொன்றின் போது நடந்த குண்டு வெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். அந்தத் தாக்குதலுக்கு ஐ. எஸ். பொறுப்பேற்றிருந்தது.
ஆப்கானிஸ்தானைத் தலிபான் தீவிரவாதிகள் பிடித்து வைத்துக்கொண்டு பயங்கர கட்டுப்பாடுகள் விதித்தனர். அமெரிக்க தலைமையிலான நேட்டோ படைகளின் அதிரடி நடவடிக்கைகளால் கடந்த 2001 ஆம் ஆண்டு தலிபான்கள் பிடியிலிருந்து ஆப்கானிஸ்தான் விடுவிக்கப்பட்டது.
எனினும், ஆப்கானிஸ்தானில் அண்மைக்காலமாக தீவிரவாதிகள் தாக்குதல்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
-Vidivelli