ஹஜ் யாத்திரை 2019: முகவரை தேர்ந்தெடுக்கும் இறுதித் தினம் இன்றாகும்
உப முகவரிடம் பணம் செலுத்தாதீர்: ஹஜ் குழு
இம்முறை ஹஜ் பயணிகள் 3400 பேர் புனித மக்கா செல்லத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஹஜ் பயணிகள் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களை இன்று தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் காத்திருக்கின்ற அடுத்த விண்ணப்பதாரிகளுக்கு ஹஜ் யாத்திரை செல்ல அனுமதி வழங்கப்படுமென ஹஜ் குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, அங்கீகரிக்கப்பட்ட முகவர்களை நாடாமல் உப முகவர்களுக்கு பணத்தையும் கடவுச்சீட்டையும் கொடுத்து ஏமாற்றமடையும் ஹஜ் பயணிகளுக்கு ஹஜ் குழுவோ முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களமோ பொறுப்பாகாது என்றும் முஸ்லிம் சமய விவகாரம் மற்றும் தபால் சேவைகள் அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளரும் ஹஜ் குழு முக்கியஸ்தருமான எம்.எச்.எம்.பாஹிம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
2019 ஆம் ஆண்டிற்கான ஹஜ் ஏற்பாடுகளில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணக்களமும் ஹஜ் குழுவும் இணைந்து 92 முகவர்களை தெரிவு செய்துள்ளன. முகவர்கள் பற்றிய அனுபவங்கள், அவர்களால் அழைத்துச் செல்லப்படும் வழிகாட்டியின் அனுபவங்கள் உள்ளடங்கலாக இந்த முகவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
நாடளாவிய ரீதியாக சென்று அனுமதிக்கப்பட்ட ஹஜ் பயணிகளுக்காக பல விளக்க மாநாடுகளை நடத்தி வருகின்றோம். அதில் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களையே நாட வேண்டும் எனவும் வலியுறுத்திக் கூறிவருகின்றோம். ஏனென்றால் சில கிராமங்களில் உபமுகவர்கள் பணம் மற்றும் கடவுச்சீட்டுக்களை அறவிடுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
கடந்த 2017 ஆம் ஆண்டு பதுளை மாவட்டத்தில் 12 ஹஜ் பயணிகளுக்கு ஹஜ் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அவர்கள் உபமுகவர்கள் மூலமாக திணைக்களத்தை நாடியிருந்தனர்.
ஹஜ் பயணிகள் உப முகவர்களை நாடிச்சென்று பாதிப்புக்கள் ஏற்பட்டால் அந்த முகவர்களுக்கு எதிராக ஹஜ் குழுவினருக்கோ அல்லது முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கோ எந்தவிதமான சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியாது. அவர்கள் எங்களால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் அல்லர். விசேடமாக தேர்ந்தெடுக்கப்பட்ட முகவர்களை மட்டுமே நாட வேண்டும் என்பது எங்களது கட்டாயமான வேண்டுகோளாகும். அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் பற்றி எங்களுடைய இணையத்தளத்திலும் மற்றும் பத்திரிகை விளம்பரத்தின் ஊடாகவும் தெளிவுபடுத்தியிருக்கிறோம். அத்துடன், தெரிவு செய்யப்பட்ட ஒவ்வொரு ஹஜ் பயணிகளுக்கும் நாங்கள் பிரத்தியேகமாக இதனைக் கையளித்திருக்கின்றோம்.
கட்டண உயர்வு
அதேவேளை, 2015 ஆம் ஆண்டில் ஹஜ் கட்டணம் நான்கு இலட்சத்துக்கு ஐந்து இலட்சத்துக்கும் இடைப்பட்டதாக இருந்தது. கடந்த வருடம் ஐந்தரை இலட்சத்தில் இருந்து ஆறு இலட்சம் இடைப்பட்டதாக இருந்தது. இந்த வருடம் ஆகக் குறைந்த வசதிகளுடன் குறைந்த கட்டணமாக ஒரு முகவர் ஆறு இலட்சம் செலுத்த வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வுக்கு முக்கிய காரணம் எமது நாட்டின் பண வீக்கமாகும். கடந்த வருடம் ஹஜ் கடமைக்கு சென்றபோது, சவூதி ரியாழின் பெறுமதி ரூபா 41 ஆக இருந்தது. இந்த முறை ரூபா 49 ஆக உயர்ந்துள்ளது. இவையே ஹஜ் கட்டண உயர்வுக்கும் முக்கிய காரணமாகும்.
அது மட்டுமன்றி சவூதி அரேபியாவில் சில புதிய வரிகள் அறவிடத் தீர்மானித்துள்ளார்கள். இவையெல்லாவற்றையும் கருத்திற் கொண்டு பார்க்கும் போது முகவர்களின் செலவு கூடியிருக்கின்றது. இம்முறை ஹஜ் பயணிகளை அழைத்துச் செல்லக்கூடிய ஆகக் குறைந்த கட்டணம் ஆறு இலட்சமாக அமையும். இதை விட சொகுசுகளுடன் செல்ல விரும்பினால் ஆறு இலட்சத்திற்கு மேல் அறவிட வேண்டும். நல்ல சொகுசுகளுடன் செல்வதாக இருந்தால் ரூபா எட்டரை இலட்சம்வரையிலும் அறவிடுவதாகத் தெரிய வருகிறது.
முறைப்பாடளிக்கலாம்
எவ்வாறாயினும் நாங்கள் ஹஜ் யாத்திரையாளர்களுக்கு வலியுறுத்திக் கூறிக் கொள்வது ஆறு இலட்சத்துக்கு குறைவாக ஒரு முகவர்களையும் நாட வேண்டாம். அவ்வாறு செய்வார்களாயின் அது ஒரு பிழையான நோக்கிலே செய்வார்கள் என்று நாங்கள் கருதுகிறோம். எந்தவொரு ஹஜ் யாத்திரையாளர்களும் முகவர்கள் கொடுத்த வாக்கை நிறைவேற்றவில்லையெனில் முஸ்லிம் பண்பாட்டலுவல்கள் திணைக்கத்தின் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு முறைப்பாடு தெரிவிக்கலாம் அல்லது எழுத்து மூலமாவது சரி ஹஜ் யாத்திரையாளர்கள் தங்களது முறைப்பாடுகளைத் தெரிவிக்கலாம்.
எந்தவொரு முகவரும் பொருத்தத்திற்கு அப்பாற்பட்டு மேலதிகமான பணம் கோருவார்களாயின் அது சம்பந்தமாக திணைக்களத்துக்கு தெரியப்படுத்த முடியும். இதுவரையிலும் 3400 ஹஜ் பயணிகள் தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளார்கள் அவர்களுக்கு தேர்ந்தெடுக் கப்பட்டதற்கான உறுதி படுத்தல் கடிதங்களும் வழங்கப்பட்டு இருக் கின்றன. இதன் அடிப்படையில் அந்த ஹஜ் பயணிகள் இன்றைய தினத்திற்குள் முகவர்களைத் தேர்ந்தெடுக்குமாறு வேண்டு கோள் விடுக்கின்றோம். இக் கால எல்லைக்குள் முகவர்களைத் தேர்ந்தெடுக்க தவறும் பட்சத்தில் காத்திருக் கின்ற ஏனைய ஹஜ் விண்ணப்பதாரிகளுக்கு யாத்திரை செல்ல அனுமதி வழங்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
-Vidivelli