மார்ச் மாதம் 15 ஆம் திகதியை இஸ்லாமிய பீதிக்கு எதிரான ஒற்றுமை தினமாக பிரகடனப்படுத்துக
இஸ்லாமிய ஒத்துழைப்பிற்கான அமைப்பு ஐ.நா. விடம் வேண்டுகோள்
நியூசிலாந்தில் பயங்கரவாதத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட மார்ச் மாதம் 15 ஆம் திகதியை இஸ்லாமிய பீதிக்கு எதிரான ஒற்றுமை தினமாக பிரகடனப்படுத்த வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபை, ஏனைய சர்வதேச மற்றும் பிராந்திய அமைப்புக்களை இஸ்லாமிய ஒத்துழைப்பிற்கான அமைப்பு கோருவதென்ற தீர்மானம் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் திகதி இஸ்தான்பூலில் நடைபெற்ற இஸ்லாமிய ஒத்துழைப்பிற்கான அமைப்பின் அவசர கூட்டத்தில் வாசிக்கப்பட்ட இணைந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 15 ஆம் திகதி நியூசிலாந்தின் கிரைஸ்சேர்ச்சில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கொடூரத் தாக்குதல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இஸ்லாமிய ஒத்துழைப்பிற்கான அமைப்பின் நிறைவேற்றுக்குழு அவசர கூட்டமொன்றை நடத்தியது. வெள்ளிக்கிழமை தொழுகையின்போது பயங்கரவாதியொருவனால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 51 பேர் கொல்லப்பட்டனர்.
இஸ்லாம் தொடர்பான பீதியினை இனவாதத்தின் ஒரு வடிவமெனப் பிரகடனப்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் விசேட கூட்டமொன்றை கூட்ட வேண்டும் எனவும் இஸ்லாம் தொடர்பான பீதியினைத் தடுப்பதற்கும் கண்காணிப்பதற்குமாக விசேட அறிக்கையாளர் ஒருவரை நியமிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ள இஸ்லாமிய ஒத்துழைப்பிற்கான அமைப்பு, உலகில் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு எதிராகத் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரைக் கேட்டுள்ளது.
சமூக வலைத்தளங்கள் தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவ்வறிக்கையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்கு எதிரான எதிர்ப்புணர்வு மற்றும் வன்முறைகளைத் தூண்டக்கூடிய ஏதேனும் உள்ளடக்கங்களை பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டகிராம் போன்ற சமூக வலைத்தளங்களின் முகாமைத்துவங்களுடன் இணைந்து கட்டுப்படுத்தித் தடுக்க நிறுவன ரீதியான மற்றும் தொழில்நுட்ப ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான அமைப்பு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
-Vidivelli