உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் மரணம் என்பது நிச்சயமானது. உலகிலுள்ள எந்த தரப்பினரும் கருத்துவேற்றுமைக்கு இடமின்றி உறுதியாக ஏற்றுக்கொண்ட ஒரு விடயம் மரணம் மட்டுமே. உலகில் பிறந்த ஒவ்வொருவரும் அதனை சுவைத்தே தீரவேண்டும் என்பதனை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆனால், அந்த மரணம் பற்றிய யதார்த்தமான பார்வையும் அதற்குப் பின்னாலுள்ள உண்மையான வாழ்வு பற்றியுமே மனிதர்களில் பல தரப்பினர் அறியாமையில் உள்ளனர்.
மரணம் உறுதியானது என்பதனை பல குர்ஆனிய வசனங்களும் நபிமொழிகளும் எமக்கு தெளிவுபடுத்துகின்றன.
நீங்கள் எங்கிருந்த போதிலும் உங்களை மரணம் வந்தடையும், உறுதியான கோட்டைகளில் நீங்கள் இருந்தாலும் சரியே! (குர்ஆன் 4: 78)
“ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைத்தேயாக வேண்டும், அன்றியும் இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும், எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்துவிட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.”
(அல்குர்ஆன்- 3:185)
உலகிலுள்ள எவராலும் அறிந்துகொள்ள முடியாத ஐந்து விடயங்களில் மரணமும் ஒன்றாகும். அந்த ஐந்து விடயங்களும் எப்பொழுது நிகழும் என்பதனை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறிய மாட்டார்கள். அல்லாஹ் தனது திருமறையில் கூறும்போது, “மறுமைநாள் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவன் மழையை இறக்குகிறான். கருவறைகளில் உள்ளதை அவன் அறிகிறான். தான் நாளை சம்பாதிக்கவுள்ளதை எவரும் அறிய மாட்டார். தாம் எங்கே? மரணிப்போம் என்பதையும் எந்த உயிரினமும் அறியாது. அல்லாஹ் நன்கறிந்தவன்; நுட்பமானவன்.”
(அல்குர்ஆன்- 31 : 34)
மரணத்தைப் பற்றிப் பேசுகின்ற இறைச் செய்திகளை அவதானிக்கின்ற ஒருவர் மரணம் யாருக்கு, எப்பொழுது, எங்கு நிகழும் என்பதனை அல்லாஹ்வையன்றி வேறு எவராலும் அறிய முடியாது என்பதனை மிக இலகுவாகப் புரிந்துகொள்வார். எந்நேரமும் அதற்கான தயார் நிலையில் நாம் இருக்க வேண்டும் என்பதுவே நாம் பணிக்கப்பட்ட ஒரே அம்சமாகும்.
மரணத்தை எதிர்கொள்ளும் வேளையில் மனிதர்கள் இரு வகையினராகப் பிரிக்கப்பட்டு உயிர் வாங்கப்படுகின்றார்கள்.
1-. இறைமறுப்பாளர்கள், பாவிகளைப் பொறுத்தவரையில் அவர்கள் மரணத்தைக் கண்டு விரண்டோடக் கூடியவர்களாகவே இருப்பார்கள், உண்மையான, நிரந்தரமான மறுமை வாழ்விற்குப் பகரமாக உலகத்தின் சுகபோக வாழ்க்கையையே அவர்கள் தமக்கென்று தேர்ந்தெடுத்துக் கொண்டனர். அவர்கள் தமது கரங்களால் செய்தவற்றின் உண்மையான பெறுபேறுகளை மரண வேளையிலிருந்தே உணர ஆரம்பித்துவிடுவார்கள். அதுபற்றி அல்லாஹ் தனது திருமறையில் இவ்வாறு குறிப்பிடுகிறான்:
“அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்: ‘என் இறைவனே! என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!’ என்று கூறுவான். ‘நான் விட்டு வந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக’ (என்றும் கூறுவான்). அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையே(யன்றி வேறில்லை) அவர்கள் எழுப்பப்படும் நாள்வரையும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது.” (அல்குர்ஆன்- 23:99-100)
ஆனால், “அல்லாஹ்வின் மீது பொய்க் கற்பனை செய்பவன், அல்லது வஹீயின் மூலம் தனக்கு ஒன்றுமே அறிவிக்கப்படாமலிருக்க, ‘எனக்கு வஹீ வந்தது’ என்று கூறுபவன்; அல்லது ‘அல்லாஹ் இறக்கிவைத்த இ(வ்வேதத்)தைப் போல் நானும் இறக்கிவைப்பேன்’ என்று கூறுபவன், ஆகிய இவர்களை விடப் பெரிய அநியாயக்காரன் யார் இருக்க முடியும்? இந்த அநியாயக்காரர்கள் மரண வேதனையில் இருக்கும்போது நீங்கள் அவர்களைப் பார்த்தால், மலக்குகள் தம் கைகளை நீட்டி (இவர்களிடம்) ‘உங்களுடைய உயிர்களை வெளியேற்றுங்கள்; இன்றைய தினம் உங்களுக்கு இழிவுதரும் வேதனையைக் கூலியாகக் கொடுக்கப்படுவீர்கள். ஏனெனில், நீங்கள் உண்மையல்லாததை அல்லாஹ்வின் மீது கூறிக் கொண்டிருந்தீர்கள்; இன்னும், அவனுடைய வசனங்களை (நம்பாது நிராகரித்துப்) பெருமையடித்துக் கொண்டிருந்தீர்கள்’ (என்று கூறுவதை நீர் காண்பீர்)” (அல் குர்ஆன் 6:93)
“அல்லாஹ்வை மறுப்போரின் முகங்களிலும், முதுகுகளிலும் வானவர்கள் அடித்து அவர்களைக் கைப்பற்றும் போது, சுட்டெரிக்கும் வேதனையை அனுபவியுங்கள்! என்று கூறுவதை நீர் பார்க்க வேண்டுமே! நீங்கள் செய்த வினையே இதற்குக் காரணம், அல்லாஹ் அடியார்களுக்கு அநீதி இழைப்பவன் அல்லன்.” (அல்குர்ஆன்- 8: 50,51)
2- நல்லோர்கள் மரணத்தை சந்திக்கும் வேளையில் சுவனத்தைக் கொண்டு சுபசோபனம் சொல்லப்பட்டு, அல்லாஹ்வின் பிரத்தியேக சுகந்தங்களைக் கொண்டு நன்மாராயம் கூறப்பட்ட நிலையிலே அவர்களை நோக்கிவரும் வானவர்களை சந்திப்பார்கள். மரணித்தால் நான் சுவனம் சென்று விடுவேன் என்று வாழ்கின்ற மனிதனுக்கு மரணம் ஒரு பெரிய சவாலாக இருக்கப் போவதில்லை. மாற்றமாக அவன் தனது ரப்பை சந்திக்க எதிர்பார்த்துக் காத்திருந்து, பெற்றுக் கொண்ட நல்ல சந்தர்ப்பமாகவே அதனை கருதுவான்.
நல்லோராக இருக்கும் நிலையில் அவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றி, “உங்கள் மீது ஸலாம் (சாந்தியும் அமைதியும்) உண்டாகட்டும்! நீங்கள் செய்தவற்றின் காரணமாக சொர்க்கத்தில் நுழையுங்கள்!” என்று கூறுவார்கள் (அல்குர்ஆன்- 16:32)
அல்லாஹ் கூறுகின்றான்: “நிச்சயமாக எவர்கள்: ‘எங்கள் இறைவன் அல்லாஹ்தான்’ என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்து நின்றார்களோ, அவர்கள் பால் மலக்குகள் வந்து, ‘நீங்கள் பயப்படாதீர்கள்; கவலையும் கொள்ள வேண்டாம், உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்கத்தைக் கொண்டு மகிழ்ச்சி பெறுங்கள்’ (எனக் கூறியவாறு) இறங்குவார்கள்.” (அல் குர்ஆன்- 41:30)
நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வைச் சந்திக்க யார் விரும்புகிறாரோ அவரை அல்லாஹ்வும் சந்திக்க விரும்புகிறான். யார் அல்லாஹ்வின் சந்திப்பை வெறுக்கிறாரோ அவரது சந்திப்பை அல்லாஹ்வும் வெறுக்கிறான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஆயிஷா (ரழி) அவர்கள் அல்லது நபிகளாரின் வேறொரு மனைவி அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அனைவரும் மரணத்தை வெறுக்கத்தானே செய்கிறோம் என்று கேட்டார்கள், அதற்கவர்கள் அவ்வாறு அல்ல. ஒரு மூஃமினுக்கு இறைவனின் அருள் அவனது சுவர்க்கம் அவனது திருப்தி பற்றி நற்செய்தி கூறப்பட்டால் அல்லாஹ்வின் சந்திப்பை விரும்புகிறான். அல்லாஹ்வும் அவனைச் சந்திக்க விரும்புகிறான். ஒரு காஃபிர் அல்லாஹ்வின் வேதனை, அவனது கோபம் பற்றி எச்சரிக்கப்பட்டால் அவன் அல்லாஹ்வின் சந்திப்பை வெறுக்கிறான். அல்லாஹ்வும் அவனது சந்திப்பை வெறுக்கிறான் என்று விளக்கமளித்தார்கள். அறிவிப்பவர் ; உபாதா இப்னு ஸாமித் (ரழி)
நூல் – புஹாரி , 6026
ஓர் இறை விசுவாசியின் அகராதியில் உலக வாழ்க்கை என்பது உலகத்திலிருந்து கொண்டே மறுமைக்காக வாழ்வதனையே குறிக்கிறது. அதற்காக வாழ்கின்ற ஓர் இறை விசுவாசி தான் எதிர் பார்த்துக் காத்திருந்த, சுவன வாழ்க்கையையும் மறுமையில் அவனுக்கு வாக்களிக்கப்பட்ட அந்த இன்பங்களையும் காண எவ்வளவு? பேராவலுடன் காத்திருப்பான், அந்த மறுமைப் பயணத்தின் நுழைவாயிலான மரணத்தை எவ்வளவு? மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வான்.
மரணம் சுவையானதா? அல்லது சுமையானதா? என்பதைத் தீர்மனிப்பதற்கே உலக வாழ்க்கை வழங்கப்பட்டுள்ளது, நல்ல மரணம் நிகழ்பவருக்கு அதன் பின்னாலுள்ள அனைத்தும் நல்லதாக மாத்திரமே அமைந்து விடுகிறது, மோசமான மரணம் நிகழ்பவருக்கு அதன் பின்னாலுள்ள அனைத்தும் மிக மோசமானதாக மாத்திரமே அமைந்து விடுகிறது.
இஸ்லாம் மரணத்தை ஒரு மனிதனின் உலக வாழ்விற்கும் அவனது சுவர்க்க, நரக வாழ்விற்கும் இடையிலான ஒரு பிரிகோடாகவே நோக்குகிறது, இறைவனை மறுத்துவன், அவனுக்கு மாறுசெய்தவன் மரணிக்கின்றான் என்றால் அவன் அவனது சுகபோக வாழ்க்கையிலிருந்து, இறை நிராகரிப்பாளர்கள் பாவிகளுக்கு இறைவன் சித்தப்படுத்தி வைத்துள்ள தங்குமிடத்தை நோக்கிப் புறப்படுகிறான் என்றே பொருளாகும், உண்மையான இறைவிசுவாசி மரணிக்கின்றான் என்றால் அவன் உலகமென்ற சிறைச்சாலையிலிருந்து விடுபட்டு அவன் உண்மையாக வாழ வேண்டிய அவனது சுவனத்தை நோக்கிப் புறப்படுகிறான் என்றே பொருளாகும், இந்த நம்பிக்கை எமது உள்ளத்தின் ஆழத்தில் பதிந்துவிடுமானால் நாம் மரணத்தைக் கண்டு ஒரு போதும் அஞ்சவோ நடுங்கவோ பயப்படவோ மாட்டோம், பிறரது மரண செய்தியைக் கேட்டதும் நொந்து, உடைந்து கலங்கிப் போகவும் மாட்டோம் என்பது தெளிவான உண்மையாகும்.
-vidivelli