- எஸ்.றிபான்
கல்முனைத் தொகுதியில் மீண்டும் அரசியல் புயல் உக்கிரமாக வீசத் தொடங்கியுள்ளது. இதனால், கல்முனைத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டிருக்கும் முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், இராஜாங்க அமைச்சருமான எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் ஏனைய கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் அனைவரும் தலையிடிக்குள்ளாகிக் காணப்படுகின்றார்கள். கல்முனை மாநகர சபையிலிருந்து பிரிந்து தனியான உள்ளூராட்சி சபை தரப்பட வேண்டுமென்று சாய்ந்தமருது பிரதேசத்தவர்கள் கிளர்ச்சி செய்து கொண்டிருக்கின்றார்கள். இவர்களை சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் வழிநடத்திக் கொண்டிருக்கின்றது. மறுபுறத்தில் கல்முனை பிரதேச செயலகத்திலிருந்து பிரித்து தனியான அதிகாரமுடைய பிரதேச செயலகமொன்று தரப்பட வேண்டுமென்று தமிழர்களும் கிளர்ந்தெழுந்து கொண்டிருக்கின்றார்கள். இவர்களை தமிழ் அரசியல் கட்சிகள் வழிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. நீண்ட காலமாக இந்த இருவகையான கோரிக்கைகளும் இருந்து கொண்டிருக்கின்றன. இக்கோரிக்கைகளை நிறைவேற்றும் போது கல்முனை பிரதேச முஸ்லிம்களின் ஆளுமையில் பாரிய பின்னடைவுகளை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்படுகின்றன. அதே வேளை, எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாதென்று பெரும்பான்மையான சாய்ந்தமருது மக்கள் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆயினும், இந்த இரண்டு கோரிக்கைகளும் ஒன்றுடன் ஒன்று பிணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரிந்தால் என்ன நடக்கும்?
கல்முனை பிரதேச செயலகத்தின் கீழ் தமிழர்களின் நலன்களை கருத்திற் கொண்டு உருவாக்கப்பட்ட உப பிரதேச செயலகம் இயங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த உப (தமிழ்) பிரதேச செயலகம் இன ரீதியாக உருவாக்கப்பட்டதாகும். இதனை முழுமையான அதிகாரங்களைக் கொண்டதொரு பிரதேச செயலகமாக தரம் உயர்த்தித்தர வேண்டுமென்று தமிழர்கள் கோரிக் கொண்டிருக்கின்றார்கள். இந்த உப (தமிழ்) பிரதேச செயலகத்தின் கீழ் 29 கிராமப் பிரிவுகள் காணப்படுகின்றன. இதே வேளை, கல்முனை பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள 29 முஸ்லிம் கிராமப் பிரிவுகள் கல்முனை பிரதேச செயலகத்தின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் இருக்கின்றன.
இவ்வாறு 58 கிராமப் பிரிவுகள் உள்ள பிரதேச செயலகத்தை இரண்டாகப் பிரிப்பது நிர்வாக நடைமுறைக்கு இலகுவாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை. அதனால், கல்முனை உப (தமிழ்) பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவது அவசியமாகும். இதனை கல்முனைத் தொகுதியில் உள்ள பெரும்பான்மையான முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்கின்றார்கள். தமிழர்களின் இந்த கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுப்பதற்கு முஸ்லிம்கள் தடையாக இருக்கின்றார்கள் என்றதொரு குற்றச்சாட்டு தமிழர்கள் தரப்பில் முன் வைக்கப்படுகின்றது.
தமிழர்களின் கோரிக்கையில் நியாயத்தைக் காணும் முஸ்லிம்களினால் அவர்கள் முன்வைத்துக் கொண்டிருக்கும் எல்லை தொடர்பில் நியாயத்தைக் காண முடியவில்லை. அதாவது கல்முனை உப (தமிழ்) பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தும் போது அதன் தெற்கு எல்லையாக கல்முனை குடியேற்றப் பள்ளி வீதியை அடையாளப்படுத்துகின்றார்கள். இவ்வாறு எல்லை வகுக்கப்படும் போது கல்முனை நகரத்தில் அமைந்துள்ள வியாபார நிலையங்கள் யாவும் தமிழர்கள் கோரிக் கொண்டிருக்கும் பிரதேச செயலகத்தின் கீழ் உள்வாங்கப்படும். கல்முனை நகரில் அமைந்துள்ள வியாபார நிலையங்களுள் 70 வீதமானவை முஸ்லிம்களுக்குச் சொந்தமானவையாகும். அது மட்டுமன்றி தமிழர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படுமாயின் எதிர் காலத்தில் இந்த பிரதேச செயலகத்தின் எல்லைகளைக் கொண்ட பிரதேசத்தை கல்முனை மாநகர சபையிலிருந்து பிரித்து தனியான உள்ளூராட்சி சபையைத் தருமாறும் கோரிக்கைகளை முன்வைப்பார்கள். சாய்ந்தமருதிற்கு தனியான உள்ளூராட்சி சபை தரப்பட வேண்டுமென்ற கோரிக்கைக்கு தமிழர்கள் முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். அதே வேளை, அவர்கள் பிரதேச செயலகத்தின் கோரிக்கையுடன் தொடர்புடைய எல்லைகளைக் கொண்ட பிரதேசத்தை உள்ளூராட்சி சபையாக தரப்பட வேண்டுமென்று இப்போதே கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
கல்முனை மாநகர சபையிலிருந்து கல்முனை நகரம் பிரிக்கப்படுமாயின் மாநகர சபை என்பதற்கு அர்த்தமில்லாது போய்விடும். மட்டுமன்றி தமிழர்கள் கேட்டுக் கொண்டிருக்கும் புதிய உள்ளுராட்சி சபையையே மாநகர சபை என்றும் குறிப்பிட வேண்டியேற்படும். மீதமாக இருக்கின்ற கல்முனை குடியேற்றப்பள்ளி வீதி முதல் ஸாஹிரா கல்லூரி வீதி வரையான பிரதேசத்தை சாதாரண பிரதேச சபையாகவே கொள்ள வேண்டியேற்படும். ஏனெனில், தற்போது மாநகர சபைக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் வருமானத்தில் பெரும்பகுதி தமிழர்கள் கோரிக் கொண்டிருக்கும் பிரதேச செயலகத்தின் கீழ் (உள்ளுராட்சி சபைக்கு) கொண்டுவரப்படும். இந்த ஆபத்திற்கு தீர்வு காண்பதில் உள்ள சிக்கல் நிலைமைதான் சாய்ந்தமருதிற்கு தனியான உள்ளூராட்சி சபை வேண்டுமென்ற நியாயமான கோரிக்கைக்கு தடையாக இருக்கின்றது.
சாய்ந்தமருதிற்கு தனியான உள்ளூராட்சி சபையை ஏற்படுத்திவிட்டால் கல்முனை முஸ்லிம்களின் ஆளுமையில் பாதிப்பு ஏற்படும் என்பதனை சாய்ந்தமருது மக்களில் பெரும்பான்மையினர் ஏற்றுக் கொள்வதில்லை. இதற்காக அவர்கள் முன் வைத்துக் கொண்டிருக்கும் சனத்தொகை, வாக்காளர்களின் எண்ணிக்கை என்பன போதுமானதாக இருக்கின்றன. ஆனால், இந்த புள்ளி விபரங்கள் இப்போதைக்கு ஆபத்தில்லாதது போன்று இருந்தாலும் எதிர் காலத்தில் கல்முனை முஸ்லிம்களின் ஆளுமையிலும், அரசியல் அதிகாரத்திலும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, சாய்ந்தமருது மக்கள் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் எல்லைகளைக் கொண்ட பிரதேசத்தையே உள்ளூராட்சி சபையாக பிரகடனப்படுத்த வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
தமிழர்கள் சாய்ந்தமருது தனியாக பிரிக்கப்பட்டதன் பின்னரும் கூட உப(தமிழ்) பிரதேச செயலகத்தை தரம் உயர்த்த வேண்டுமென்ற தமது கோரிக்கையை கைவிடமாட்டார்கள். முதலில் பிரதேச செயலகத்தைப் பெற்றுக் கொள்வார்கள். பின்னர் உள்ளூராட்சி சபையை கேட்பார்கள். அதன் பின்னர் அந்த உள்ளூராட்சி சபைதான் மாநகர சபைக்குரிய வருமானம் முதல் ஏனைய அடிப்படைத் தகைமைகளைக் கொண்டுள்ளதென்று தெரிவித்து மாநகர சபையாக தரம் உயர்த்த வேண்டுமென்று கேட்பார்கள் என்பதனை யாரும் சந்தேகங் கொண்டு பார்க்க வேண்டியதில்லை. இதுவே தமிழர்களின் திட்டமுமாகும். தமிழர்கள் தங்களின் நியாயமாக கோரிக்கையை அடைந்து கொள்வதற்கு முன்வைத்துக் கொண்டிருக்கும் நியாயமற்ற எல்லை பகுப்பால் சாய்ந்தமருது மக்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றுவதில் அரசியல் கட்சிகளிடையே தயக்க நிலை காணப்படுகின்றன.
தமிழர்களின் நியாயமற்ற எல்லைப் பிரிப்பு காரணமாகவே கடந்த 25 வருடங்களாக அவர்களின் கோரிக்கைகளுக்கு முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தடைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். கல்முனை தமிழ் உப (தமிழ்) பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவதற்கு 1993ஆம் ஆண்டு ஜூலை மாதம் 28ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கிய போதிலும் முஸ்லிம் அரசியல் தலைமைகளின் தலையீடு காரணமாக கல்முனை தமிழ் உப பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படாமலேயே உள்ளது. சம்பந்தப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தோடு சேர்ந்ததாகவே காரைதீவு, ஈச்சிலம்பற்று, ஒட்டுசுட்டான் ஆகிய உப பிரதேச செயலகங்கள் பிரதேச செயலகங்களாக தரம் உயர்த்தப்பட்டன.
அரசியல்வாதிகளும், தீர்வுகளும்
கல்முனைத் தொகுதியிலுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகள் தங்களின் அரசியலை மேற்படி பிரச்சினைகளை வைத்தே நகர்த்திக் கொண்டிருக்கின்றார்கள். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமாயின் விட்டுக் கொடுப்பு அவசியமாகும். தமிழர்கள் தாம் முன் வைத்துக் கொண்டிருக்கும் எல்லைகளில் விட்டுக் கொடுப்பை செய்வதற்கு தயாரில்லை. அதே வேளை, முஸ்லிம்கள் தமது பிரதேசத்தை இழப்பதற்கும் தயாரில்லை.
கல்முனையில் தமிழர்கள் இனரீதியாக பிரதேச செயலகத்தையும், உள்ளூராட்சி சபையையும், சாய்ந்தமருது முஸ்லிம்கள் பிரதேச ரீதியாக தனியான உள்ளூராட்சி சபையையும் கேட்டுக் கொண்டிருப்பதற்கு தீர்வுகளைக் காண்பதற்கு பதிலாக தீர்வுகளுக்கு தடைகளை ஏற்படுத்தி அதில் எவ்வாறு அரசியல் குளிர் காய்ந்து கொள்ளலாமென்றே அரசியல்வாதிகள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். செய்வதுமில்லை, செய்யவிடுவதுமில்லை என்பதே கல்முனை அரசியலின் சித்தாந்தமாக இருக்கின்றது.
மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சியின் போது இதற்கு நிரந்தர தீர்வுகளை நியாயத்தின் அடிப்படையில் பெற்றுக் கொள்ளக் கூடிய அரசியல் சூழல் காணப்பட்டது. அதனை முஸ்லிம் அரசியல்வாதிகள் குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸும், கல்முனை தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸும் பயன்படுத்திக் கொள்ளவில்லை. சாய்ந்தமருது பிரிந்தால் கல்முனைக்கு ஆபத்து என்று சிந்தித்தார்களே அல்லாமல் தமிழர்களின் ஆதிக்கம் அரசியலில் அதிகரித்தால் என்ன நடக்கும் என்று சிந்தித்து அறிந்து கொள்ள முடியவில்லை. இன்றைய அரசாங்கத்தில் முஸ்லிம் கட்சிகளை விடவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கே அதிக செல்வாக்கு இருக்கின்றது. இந்தச் சூழலில்தான் தாங்கள் தவறு செய்து விட்டோமென்று தீர்வுகளை காண வேண்டுமென்று முஸ்லிம் அரசியல்வாதிகள் ஓடிக் கொண்டிருக்கின்றார்கள். தமிழர் தரப்பினர் குறிப்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தின் போக்கை தீர்மானிப்பதில் தமக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி கல்முனை மாநகர சபையின் எல்லைகளை தமக்கேற்ற வகையில் பிரிப்பதற்கு அழுத்தங்களை கொடுத்துக் கொண்டிருக்கின்றது.
இந்நிலையில்தான் கல்முனைப் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸும், முஸ்லிம் காங்கிரஸும் கல்முனை மாநகர சபையை நான்காகப் பிரித்து தீர்வுகளை காண்பதற்கு நினைக்கின்றார்கள். இன்று இந்தப் பிரச்சினை பூதாகாரமாகக் காணப்படுவதற்கு முஸ்லிம் காங்கிரஸே காரணமாகும். சாய்ந்தமருது மக்களை ஆசுவாசப்படுத்துவதற்கு போலியான வாக்குறுதிகளை தொடர்ச்சியாக வழங்கிக் கொண்டிருந்தமை முஸ்லிம் காங்கிரஸின் மிகப் பெரிய வழிகேடாகும்.
கல்முனை மாநகர சபையின் எல்லைக்குள் 1988ஆம் ஆண்டிற்கு முன்னர் நான்கு உள்ளூராட்சி மன்றங்கள் காணப்பட்டன. அதாவது, 1897ஆம் ஆண்டு முதல் 1987ஆம் ஆண்டு வரை கல்முனையில் 04 உள்ளூராட்சி சபைகள் இயங்கின. அவை கல்முனை பட்டின சபை கல்முனையிலும், கரைவாகு தெற்கு கிராம சபை சாய்ந்தமருதிலும், கரைவாகு வடக்கு கிராம சபை மருதமுனை, பாண்டிருப்பு போன்றவற்றை சேர்த்ததாகவும், கரைவாகு மேற்கு கிராம சபை சேனைக்குடியிருப்பு, நற்பிட்டிமுனை போன்றவற்றை சேர்த்ததாகவும் காணப்பட்டன. இந்த உள்ளூராட்சி சபைகளை மக்களின் அபிப்பிராயம், ஒப்புதல் ஆகியவற்றை பெறாமல், ஒன்றாக இணைத்து 1987 ஆம் ஆண்டு கல்முனை பிரதேச சபை உருவாக்கப்பட்டது. தற்போது மாநகர சபையாக இருக்கின்றது.
கல்முனையில் காணப்படும் இந்தப் பிரச்சினை நீண்ட காலத்தில் கல்முனை முஸ்லிம்களுக்கு பெரும் தலையிடியாக மாறும் என்று உள்ளூராட்சி, மாகாண சபைகள் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் சாய்ந்தமருதிற்கு தனியாக உள்ளூராட்சி சபையையும், ஏனைய பிரதேசங்களை சில விட்டுக் கொடுப்புக்களுடன் தமிழர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியவகையில் மூன்றாக பிரிப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதன் போது கல்முனை அரசியல் பிரதிநிதியும், அவர் அங்கம் வகிக்கும் கட்சியின் தலைமையும் அதாவுல்லாஹ்வின் முயற்சிக்கு தடைகளை ஏற்படுத்தினர். அதாவுல்லாஹ்வின் முயற்சிகளில் தவறுகள் இருந்தால் அல்லது ஆபத்து இருந்தால் அதில் திருத்தங்களை மேற்கொண்டு தீர்வுகளை கண்டிருக்க வேண்டும். அன்றைய அரசியல் சூழலில் முஸ்லிம்களின் அரசியல் கட்சிகள் யாவும் ஆளுந் தரப்பிலேயே இருந்தன. தமிழர்களின் அரசியல் இன்றைய செல்வாக்கைக் கொண்டதாக இருக்கவில்லை. ஆனால், அந்த சந்தர்ப்பத்தை கைநழுவவிட்டார்கள். தொடர்ச்சியாக சாய்ந்தமருதையும், தமிழர்களையும் ஏமாற்றலாமென்றே எண்ணினார்கள்.
இன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. தமிழர்களின் மீது சர்வதேசத்தின் பார்வை சாதகமாக இருக்கின்றது. இந்நிலையில் 1988ஆம் ஆண்டிற்கு முன்னர் இருந்ததைப் போன்று நான்காக பிரிப்போமென்று தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், தமிழர் தரப்பினர் அகன்ற பிரதேச செயலகத்தையும், உள்ளூராட்சி சபையையும் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அமைச்சர் பதவியில் காட்டிய அக்கறையை மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு காட்டாதிருந்தமையே பிரச்சினை இன்றைய பூதாகார நிலையை அடைவதற்கு காரணமாகும். 1988ஆம் ஆண்டிற்கு முன்னர் இருந்த எல்லைகளை அடிப்படையாகக் கொண்டு நான்கு உள்ளூராட்சி சபைகளை உருவாக்குவதே பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வுகளைக் காண்பதற்குரிய இலகுவான வழியாகும். இதற்கு தமிழர்களும், முஸ்லிம்களும் தம்மை தயார்படுத்திக் கொள்ளும் மனநிலைக்கு வருதல் வேண்டும்.
இதே வேளை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கல்முனையில் தமிழர்களுக்கு பிரதேச செயலகம், பிரதேச சபை உருவாக்கப்பட வேண்டுமென்று தெரிவித்துக் கொண்டிருக்கும் அதே வேளை, மூதூர் பிரதேச செயலகத்தின் கீழு உள்ள தோப்பூர் பிரதேசத்தை அடிப்படையாக் கொண்ட புதிய பிரதேச செயலகமொன்று உருவாக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கைக்கு எதிராக இருக்கின்றார். மூதூர் பிரதேச செயலகத்தை இரண்டாகப் பிரித்தால் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட இரண்டு பிரதேச செயலகங்கள் அமைந்துவிடுமென்று தெரிவித்துள்ளார். இங்கு இரண்டு பிரதேச செயலகங்கள் உருவாவது தமிழர்களுக்கு எந்த தீங்கையும் ஏற்படுத்தப் போவதில்லை. ஆயினும், முஸ்லிம்களுக்கு இரண்டு பிரதேச செயலகங்களா என்று தடுக்கின்றார். இந்த மனநிலையைக் கொண்டுள்ளவர்கள் முஸ்லிம்களின் அங்கீகாரத்தோடு வடக்குடன் கிழக்கை இணைக்க நினைக்கின்றார்கள்.
ஆகவே, தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் மக்களின் கோரிக்கைகளுடன் தொடர்புடைய பிரச்சினைகளில் அரசியல் குளிர்காய்ந்து கொள்ளாது தீர்வுகளை காண்பதற்குரிய நடவடிக்கைகளை இதயசுத்தியுடன் எடுக்க வேண்டும். தூய்மையான சிந்தனைதான் தம்மையும், சமூகத்தையும் வாழ வைக்கும் என்பதில் நமது அரசியல்வாதிகள் நம்பிக்கை வைக்க வேண்டும்.
-Vidivelli