இவ்வருடத்துக்கான ஹஜ் ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நியமனம் பெற்ற ஹஜ் –முகவர்களில் சிலர் போலியான பெயர்களில் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பது முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அரச ஹஜ் குழுவின் உறுப்பினரும், அமைச்சர் ஹலீமின் பிரத்தியேக செயலாளருமான எம்.எச்.எம்.பாஹிம் அது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட ஹஜ் முகவர்களின் அனுமதிப்பத்திரம் உடனடியாக ரத்துச் செய்யப்படும் எனக் கூறினார்.
இவ்வருடத்துக்கான ஹஜ் ஏற்பாடுகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்
‘சில ஹஜ் முகவர்கள் போலியான பெயர்களில் பதிவுகளை மேற்கொண்டு அதற்கான பதிவுக் கட்டணத்தையும் செலுத்தி இவ்வருட ஹஜ் கடமைக்காக தெரிவு செய்யப்படாத விண்ணப்பதாரிகளை அழைத்துச் செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதற்காக கூடுதலான கட்டணங்களைக் கோரி வருவதாகவும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
ஹஜ் முகவர்களின் இவ்வாறான ஊழல்கள் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அவர்களது இவ்வருட ஹஜ் அனுமதிப்பத்திரம் ரத்துச் செய்யப்படவுள்ளது.
உப முகவர்கள்
ஹஜ் கடமைக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள ஹஜ் விண்ணப்பதாரிகள் உப முகவர்களூடாக ஹஜ் முகவர்களுடனான ஒப்பந்தங்களைச் செய்து கொள்ளவோ அல்லது கடவுச்சீட்டுக்களை உபமுகவர்களிடம் ஒப்படைக்கவோ கூடாது என அரச ஹஜ் குழு வேண்டுகோள் விடுக்கிறது.
2017 ஆம் ஆண்டு ஹஜ் யாத்திரைக்கு பதுளை மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டிருந்த விண்ணப்பதாரிகளில் 12 பேர் தங்களது கடவுச்சீட்டுக்களை உப முகவர்களிடம் ஒப்படைத்து ஒப்பந்தங்களைச் செய்து கொண்டிருந்ததால் அவர்களால் ஹஜ் கடமையை நிறைவேற்ற முடியாமற் போனது.
ஹஜ் கட்டணம்
இவ்வருடம் இலங்கை ரூபாவின் பெறுமதி குறைந்துள்ளதாலும், சவூதி அரேபியாவில் வற்வரி அறவிடப்படுவதாலும் ஹஜ் கட்டணங்கள் அதிகரித்துள்ளன. அரச ஹஜ் குழு மேற்கொண்ட ஆய்வுகளின் படி 6 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவுக்கு மேற்பட்ட கட்டணங்கள் ஹஜ் முகவர்களால் வழங்கப்பட்டாலே அவர்களால் சகல வசதிகளையும் உள்ளடக்கிய சிறந்த சேவையை வழங்க முடியும்.
சில ஹஜ் முகவர்கள் ஹஜ் கட்டணமாக 6 இலட்சம் ரூபா குறிப்பிட்டிருந்தாலும் அவர்களால் குறிப்பிட்டளவு வசதிகளையே வழங்க முடியுமாக இருக்கும்.
இந்நிலையில் ஹஜ் பயணிகள் தாம் பயணம் மேற்கொள்வதற்கு தெரிவு செய்யும் முகவர் நிலையங்களுடன் சவூதியில் ஹோட்டல் மற்றும் வசதிகள் தொடர்பாக ஒப்பந்தங்களைச் செய்துகொள்ள வேண்டும் என்றார்.
-Vidivelli