நியூஸிலாந்தின் க்ரைஸ்ட்சேர்ச் நகரிலுள்ள இரு பள்ளிவாசல்களில் கடந்த வெள்ளிக்கிழமை நடாத்தப்பட்ட மிலேச்சத்தனமான பயங்கரவாதத் தாக்குதல் மனித குலத்துக்கே விரோதமானதாகும். இந்தத் தாக்குதலை நாம் வன்மையாகக் கண்டிப்பதுடன் குறித்த கொலையாளிக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்த விரும்புகிறோம்.
உலக வரலாற்றில் பல பள்ளிவாசல் படுகொலைகள் பதிவாகியுள்ளன. இவற்றுள் பலஸ்தீன், இலங்கையின் காத்தான்குடி, புத்தளம் மற்றும் எகிப்து ஆகியவற்றில் இடம்பெற்ற பள்ளிவாசல் படுகொலைகள் குறிப்பிடத்தக்கவை. அந்த வரிசையில்தான் தற்போது நியூஸிலாந்து பள்ளிவாசல் படுகொலையும் பதிவாகியுள்ளது.
எனினும் இந்தத் தாக்குதலை நடத்திய நபர் அவுஸ்திரேலியப் பிரஜை என அடையாளம் காணப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் எந்தவித தீவிரவாத சக்திகளுடனும் இவர் தொடர்புபட்டிருக்கவில்லை என்றும் அவ்வாறான சிந்தனைகளைக் கூட அவர் கொண்டிருக்கவில்லை என்றும் விசாரணையாளர்கள் கூறுகின்றனர். அவ்வாறெனின் இத் தாக்குதலுக்காக அவரைத் தூண்டிய காரணி என்ன என்பது பற்றி விரிவாக ஆராயப்பட வேண்டியது அவசியமாகும்.
இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் சகலருமே வேறு நாடுகளில் இருந்து வந்து குடியேறியவர்களே. அதுவும் தத்தமது நாடுகளில் இடம்பெறும் அசம்பாவிதங்களிலிருந்து தமது உயிரைப் பாதுகாத்துக் கொள்ளவும் தமது பிள்ளைகளின் கல்வி, தொழில் உள்ளிட்ட எதிர்காலத்தைக் கருத்திற் கொண்டுமே நியூஸிலாந்தில் இவர்கள் குடியேறினர். எனினும் அங்கும் இன்று பயங்கரவாதம் தலைதூக்கியுள்ளது.
இருந்தபோதிலும் நியூஸிலாந்து பாதுகாப்பற்ற நாடல்ல என்பதை நிரூபிக்கவும் இந்தத் தாக்குதலின் அதிர்ச்சியிலிருந்து அந்நாட்டு முஸ்லிம்களை மீட்டெடுப்பதற்காகவும் அந்நாட்டு அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் மெச்சத்தக்கவையாகவும் வியப்பூட்டுபவையாகவும் உள்ளன.
குறிப்பாக நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்லவும் தனது அன்பையும் அரவணைப்பையும் வெளிப்படுத்தவும் எடுத்த நடவடிக்கைகள் பலரையும் ஈர்த்துள்ளன. குறிப்பாக அப் பயங்கரவாதி விதைக்க முனைந்த வெறுப்பை அவர் அன்பால் வெற்றி கொண்டுள்ளார். இன்று முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துகளும் நிலைப்பாடுகளும் மங்கி, இஸ்லாம் பற்றியும் முஸ்லிம்கள் பற்றியுமே நியூஸிலாந்தும் முழு உலகும் பேசுகின்ற அளவுக்கு அவரது செயற்பாடுகள் வித்திட்டுள்ளன. இந்த முன்மாதிரியை ஏனைய நாடுகளின் தலைவர்களும் பின்பற்றினால் நிச்சயமாக பயங்கரவாதத்தை யார் கையிலெடுத்தாலும் அதனைத் தோல்வியடையச் செய்யலாம்.
இந்த விடயத்தில் இலங்கையும் நியூஸிலாந்திடமிருந்து அதிக பாடம் கற்க வேண்டியுள்ளது. இந்நாட்டில் இனவாதிகளுக்கு தலைசாய்க்காது பாதிக்கப்பட்ட சிறுபான்மை மக்களின் காயங்களை ஆற்றுப்படுத்த அரசாங்கம் முன்வரவேண்டும். அதன் மூலம் முழு நாட்டு மக்களினதும் மனதை வெல்ல வேண்டும். இனவாதத்தையும் வெறுப்பையும் தோல்வியுறச் செய்ய வேண்டும்.
இறுதியாக, உயிரிழந்த மக்களின் சுவன வாழ்வுக்காகவும் காயமடைந்தவர்களின் விரைவில் குணமடையவும் பிரார்த்திக்கிறோம். இத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். நியூஸிலாந்து அரசாங்கம் வினைத்திறனான செயற்பாடுகளுக்காக எமது நன்றிகளையும் பாராட்டுகளையும் பதிவு செய்கிறோம்.
-Vidivelli