கஷோக்ஜி படுகொலை சவூதி கொள்கையின் ஒரு பகுதியாகும்; தனிப்பட்ட சம்பவமல்ல
அறிக்கையில் தெரிவிப்பு
ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜி படுகொலை செய்யப்பட்டமை தனிப்பட்டதொரு சம்பவமல்ல, ஒரு வருடத்திற்கு முன்னரே பட்டத்திற்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மானினால் அதிகாரமளிக்கப்பட்ட சவூதி அரேபியாவின் மாற்றுக் கருத்துடையவர்களை பலவந்தமாக நாடுகடத்தல், தடுத்து வைத்தல் மற்றும் சித்திரவதை செய்தல் போன்ற பரந்துபட்ட கொள்கையின் ஒரு பகுதியாகும் என புதிய அறிக்கையொன்று தெரிவித்துள்ளது.
இந்தக் கொடூரக் கொலை தொடர்பில் விசாரணைக்காக அமர்த்தப்பட்டுள்ள குழுக்கள் தமது விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்துவரும் அதேவேளை கால அவகாசமும் கோரியிருந்ததாக நியூயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
பல்வேறு புலனாய்வு அறிக்கைகளை ஆய்வு செய்துவரும் அமெரிக்க அதிகாரிகளிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்கள், செயற்பாடுகள் தொடர்பில் நேரடியாக அறிந்துள்ள சவூதி அரேபியர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்கள் என்பவற்றின் அடிப்படையில் நியூயோர்க் டைம்ஸ் இதனைத் தெரிவித்துள்ளது.
இரகசியத் தகவல்களை வெளியிட்டமைக்காக தாம் தண்டிக்கப்படுவோம் என அஞ்சுவதன் காரணமாகவும், கோபம் ஏற்பட்டால் தமது அரசாங்கம் எவ்வாறு நடந்துகொள்ளும் என சவூதி நாட்டவர்கள் அறிந்து வைத்திருப் பதனாலும், பேசிய அனைவருமே தம்மை அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பாமலேயே கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
முகவர் கும்பலொன்றினால் விடயங்கள் கையாளப்பட்டு கடந்த ஒக்டோபர் 02 ஆம் திகதி மாற்றுக்கருத்துடைய ஊடகவியலாளர் கொல்லப்பட்டமை தொடர்பில் ஆரம்பத்தில் சவூதி அரேபியாவினால் வெளிப்படுத்தப்பட்ட உறுதிப்படுத்தல்கள் தெளிவான முரண்பாடுகளைக் கொண்டவைகளாகக் காணப்படுகின்றன.
சவூதி அரேபியாவின் பட்டத்திற்குரிய இளவரசரான மொஹமட் பின் சல்மானை கடுமையாக விமர்சித்துவந்த கஷோக்ஜி தனது துருக்கி நாட்டுக் காதலியான ஹாடிஸ் சென்ஜிஸை திருமணம் செய்துகொள்வதற்கு ஏதுவாக சில ஆவணங்களை பெறுவதற்காக இஸ்தான்பூலிலுள்ள சவூதி அரேபிய துணைத் தூதரகத்தினுள் 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 02 ஆந் திகதி சென்றார்.
அன்றைய தினமே அவர் கொலைகாரக் கும்பலொன்றினால் கொல்லப்பட்டு அவரது உடல் பாகங்கள் பிரிக்கப்பட்டன.
தற்போதைய புதிய குற்றச்சாட்டு வெளிச்சத்திற்கு வருவதற்கு இரு வாரங்களுக்கு முன்னதாக பட்டத்திற்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மான் முக்கிய உயர்மட்ட நிகழ்வுகளில் பங்கேற்காமை குறிப்பாக அவதானிக்கப்பட்டுள்ளது.
இது அவரது பொருளாதார மற்றும் நிதிசார்ந்த அதிகாரங்கள் களையப்பட்டிருக்காலம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன என கடந்த திங்கட்கிழமை கார்டியன் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களின் பிரகாரம், பட்டத்திற்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மானின் தந்தையான மன்னர் சல்மானின் நம்பிக்கைக்குரிய ஆலோசகரான ஹாவாட் பல்கலைக்கழகத்தில் கல்விகற்ற முசாயிட் அல்-அயிபான் முதலீட்டுத் திட்டங்களில் எடுக்கப்பட்ட தவறான தீர்மானங்கள் தொடர்பில் மீளாய்வுகளை மேற்கொண்டு வருகின்றார் எனவும் கார்டியன் தெரிவித்துள்ளது.
இக் கொலை தொடர்பில் கடந்த நவம்பர் மாதம் ட்ரம்ப் நிருவாகத்தால் குற்றம்சாட்டப்பட்ட 17 சவூதி அதிகாரிகளுள் பெரும்பாலனவர்கள், சவூதி அரசாங்கத்தினாலேயே குற்றமிழைத்தவர்களாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.
கடந்த சில மாதங்களாக அமெரிக்க நிறுவனங்கள் நூற்றுக்கணக்கான மில்லியன் டொலர் முதலீடுகளை சவூதி அரேபியாவிலிருந்து மீளப் பெற்றுள்ளன.
கடந்த புதன்கிழமை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தனது வருடாந்த மனித உரிமைகள் அறிக்கையில் இந்த மத்திய கிழக்கு நாட்டினை இக்கொலையுடன் தொடர்புபடுத்தியுள்ளது.
-Vidivelli