அரச ஹஜ் குழுவுக்கு நியமிக்கப்படும் 9 உறுப்பினர்களில் 7 பேர் முஸ்லிம் சமய விவகார அமைச்சரினால் நியமிக்கப்படுவார்கள் என்ற ஹஜ் சட்ட வரைபு திருத்தியமைக்கப்படவேண்டும். ஹஜ் குழுவுக்கு 7 பேரே நியமிக்கப்படவேண்டும். 7 பேரில் இருவரே அமைச்சரினால் நியமிக்கப்பட வேண்டும் என்ற திருத்தம் நேற்று முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஹஜ் சட்ட வரைவு தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் நேற்று மாலை பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெற்றது.
அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கலந்துரையாடலின் போது மேற்குறிப்பிட்ட திருத்தம் ஹஜ் சட்டவரைபில் உள்ளடக்கப்பட வேண்டுமென சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி இத்திருத்தத்தை முன்வைத்தார்.
இக்கலந்துரையாடலின் போது இராஜாங்க அமைச்சர் அமீர் அலி கருத்து தெரிவிக்கையில்,
ஹஜ் குழுவுக்கு தெரிவு செய்யப்படும் 9 பேரில் 7 பேர் அமைச்சரினால் நியமிக்கப்படுவதானது அரசியல் மயப்படுத்தலாகும். அதனால் ஹஜ் குழுவுக்கு 7 பேரே நியமிக்கப்பட வேண்டும். இவர்களில் இருவரே அமைச்சரினால் நியமிக்கப்பட வேண்டும். ஏனைய ஐவரும் உலமா சபையின் தலைவர், வக்பு சபையின் தலைவர், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர், சிரேஷ்ட சட்டத்தரணி அல்லது நிர்வாக சேவை அதிகாரி ஒருவர் மற்றும் அமைச்சின் செயலாளராக அமைய வேண்டும்.
எதிர்காலத்தில் முஸ்லிம் சமய விவகாரங்களுக்கு மாற்று மத அமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட்டால் ஹஜ் குழு நியமனத்தில் பாதகங்கள் ஏற்படும் என்பதைக் கருத்திற் கொண்டே இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.
நேற்றைய கூட்டத்தில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த ஆலோசனைகளை உள்ளடக்கி சட்ட வரைபைத் தயாரித்து மீண்டும் சிவில் சமூக பிரதிநிதிகள், புத்திஜீவிகள் ஆகியோருடன் எதிர்வரும் 26 ஆம் திகதிக்கு மேலுமொரு கலந்துரையாடலை நடாத்தி ஹஜ் சட்ட வரைபினைப் பூர்த்தி செய்வதாகத் தீர்மானிக்கப்பட்டது.
நேற்றைய கலந்துரையாடலில் இராஜாங்க அமைச்சர்களான எம்.எஸ்.எஸ். அமீர்அலி, அலிசாஹிர் மௌலானா, பைசல் காசிம், பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எச்.எம்.பௌஸி, முஜிபுர் ரஹ்மான், நஸீர், மன்சூர் மற்றும் கல்வி அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.ஆர்.எம்.மலிக், முஸ்லிம் சமய விவகார அமைச்சின் பணிப்பாளர் ஏ.பி.எம்.அஷ்ரப், அமைச்சின் செயலாளர் திருமதி.எம்.எஸ்.மொஹமட், அரச ஹஜ் குழுவின் தலைவர் கலாநிதி எம்.ரி.சியாத் உட்பட உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
-Vidivelli