மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் விவகாரத்தில் சபையில் ஆளும், எதிர் கட்சிகளிடையில் வாக்குவாதம் நிலவியது. அர்ஜுன் மகேந்திரனை இலங்கைக்கு கொண்டுவர சிங்கப்பூர் பிரதமர் ஒத்துழைப்பு வழங்கவில்லையென ஜனாதிபதி கூறுகின்ற போதிலும் சிங்கப்பூர் சட்ட விதிமுறைகளுக்கு அமைவாக ஆவணங்கள் இலங்கை சமர்ப்பிக்கவில்லை என்றே சிங்கப்பூர் அரசாங்கம் கூறியுள்ளது. ஓர் ஆவணத்தைக்கூட தயாரிக்க அரசாங்கத்தால் முடியவில்லையா?, ஆகவே இது குறித்து அரசாங்கம் பதில் கூற வேண்டுமென ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர் உதய கம்மன்பில ஆகியோர் சபையில் கேள்வி எழுப்பினர்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை ஆரம்ப கைத்தொழில் சமூக வலுவூட்டல் அமைச்சு, பொது வழங்கல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு பற்றிய அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சு, விசேட பிரதேசங்கள் அபிவிருத்தி பற்றிய அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சு ஆகியவற்றின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர்கள் இதனைக் குறிப்பிட்டனர். இதன்போது கருத்து தெரிவித்த ம.வி.மு. உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ எம்.பி.,
மத்திய வங்கி பிணைமுறி ஊழல் குறித்து தொடர்ச்சியாகப் பேசி வருகின்றோம். ஜனாதிபதியும் அவ்வப்போது மத்திய வங்கி பிணைமுறி ஊழல் விவகாரம் குறித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றார். அண்மையில்கூட இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுத் தலைவரையும் வரவழைத்து ஐந்தாண்டுகால ஊழல் மோசடிகள் குறித்த கலந்துரையாடல் ஒன்றினை ஷங்ரில்லா ஹோட்டலில் நடத்தினார். இதற்கு செலவான நிதித்தொகை, உணவு மற்றும் ஏனைய விடயங்களுக்கும் செலவான தொகை குறித்து பாராளுமன்றத்தில் தனியாக ஒரு நாள் ஒதுக்கி விவாதம் நடத்த வேண்டும். ஷங்ரில்லா ஹோட்டலில் சுமார் 1300 பேரை வரவழைத்து மிகப்பெரிய விழா ஒன்றினை எடுக்க யார் நிதி ஒதுக்கியது என்ற விடயம் ஆராயப்பட வேண்டியது.
இந்த நிகழ்வில் ஜனாதிபதி கூறிய கதை என்னவென்றால், அர்ஜுன் மகேந்திரனை இலங்கைக்கு கொண்டுவர நான் நடவடிக்கை எடுத்தபோதும் சிங்கப்பூர் பிரதமருக்கு கோரிக்கை விடுத்தும்கூட அந்நாட்டு பிரதமர் அதற்கு இடமளிக்கவில்லை என்று கூறினார். எமது நாட்டின் பிரதமர் நான் சொல்வதை கேட்பதும் இல்லை, சிங்கப்பூர் பிரதமர் நான் சொல்வதை கேட்பதும் இல்லை என்பதைப் போலவே அவரது கதை அன்று அமைந்திருந்தது. ஆனால் இந்தக் கதையின் பின்னர் இராஜதந்திர ரீதியில் ஒரு பதில் கிடைக்கப்பெற்றுள்ளது. தற்போது சிங்கப்பூர் அரசாங்கம் கூறியுள்ளது என்னவென்றால், அர்ஜுன் மகேந்திரனை இங்கிருந்து அனுப்புவதற்கு சிங்கப்பூர் சட்ட முறைமைகளுக்கு அமைய உரிய ஆவணங்கள் இலங்கை அரசாங்கம் அனுப்பவில்லை என அவர்கள் கூறியுள்ளனர். இலங்கை அரசாங்கம் இப்போது என்ன கூறப்போகின்றது.
ஜனாதிபதி என்பவர் சாதாரண ஒருவரல்ல. இந்த நாட்டின், அரசாங்கதின் தலைவர். அரச தலைவரது கருத்தாகவே ஏனைய நாடுகள் அங்கீகரிக்கும். அவ்வாறு இருக்கையில் சிங்கப்பூர் இதனை நிராகரித்துள்ளது. ஆகவே அரசாங்கம் என்ன செய்யப்போகின்றது. இது குறித்து பொறுப்புமிக்க பதிலை அரசாங்கம் பாராளுமன்றத்தில் முன்வைக்க வேண்டும். நீங்கள் நினைத்த நேரங்களில் விரும்பிய கருத்துக்களை முன்வைக்க முடியாது என்றார்
இந்த கருத்துக்கு பதில் கருத்து கூறிய எதிர்க்கட்சி உறுப்பினர் மஹிந்த அமரவீர:- அர்ஜுன் மகேந்திரனை வரவழைக்க சட்ட ரீதியாக முன்வைக்க வேண்டிய கோப்புகள் அனைத்தையும் தயார்படுத்தியே வைத்துள்ளோம். ஜனாதிபதி தனிப்பட்ட ரீதியிலும் சிங்கப்பூர் பிரதமருடன் பேசியுள்ளார். அதேபோல் அவர்களின் சட்ட விதிமுறைக்கு அமைய ஆவணங்களும் முழுமைப்படுத்தப்பட்டுள்ளன. வெகு விரையில் ஜனாதிபதி இலங்கை மக்களுக்கும் அதேபோல் சிங்கப்பூர் அரசாங்கத்திற்கும் முழுமையான காரணிகளை தெளிவுபடுத்துவார் என்றார்.
மீண்டும் ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய நளிந்த எம்.பி:- இலங்கை அரசாங்கம் ஆவணம் அனுப்பாதது ஏன் என அரச தரப்பிடமே நான் கேள்வி எழுப்பினேன். குறிப்பாக சிங்கபூர் அரசாங்கத்தின் அறிக்கையை சர்வதேச ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ளன அதில் தாம் கொழும்புக்கு அறிவித்தல் விடுத்துள்ளதாகவும் அவர்கள் உரிய ஆவணங்கள் வழங்குவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவ்வாறு ஆவணங்கள் கிடைக்கப்பெற்றால் எமது சட்டத்துடன் அவை இணங்குகின்றதா என்பது குறித்து ஆராய்ந்து பார்க்கலாம் என கூறியுள்ளது. இது குறித்து இலங்கை அரசாங்கம் பதில் கூறவேண்டும், ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர் பதில் கூறுகின்றார் என்றார்.
இதன்போது ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய முஜிபுர் ரஹ்மான் எம்.பி., ஜனாதிபதி எதிர்க்கட்சி உறுப்பினர் என்ற காரணத்தினால் தான் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பதில் கூறுகின்றனர் என்றார்.
இது குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர் உதய கம்மன்பில கருத்து தெரிவிக்கையில், சிங்கப்பூர் பிரதமரின் ஒத்துழைப்பு இல்லையென ஜனாதிபதி கூறியவுடன் உடனடியாக சிங்கப்பூர் அரசாங்கம் பதில் கூறியுள்ளது.
இலங்கை அரசாங்கம் இன்னமும் ஆவணம் அனுப்பவில்லை என கூறியுள்ளது. உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென ஜனாதிபதி சிங்கப்பூர் விஜயம் முடித்துக்கொண்டு வந்தவுடன் நீதி அமைச்சருக்கு கூறினார். நீதிமன்றம்கூட சர்வதேச பொலிசாரை நாட வலியுறுத்தியுள்ளது. ஆகவே, அமைச்சர் தலதா அத்துகோரள இதில் முதல் பொறுப்புக்கூற வேண்டும். ஏன் அவர் இந்த நடவடிக்கை எடுக்கவில்லை. சர்வதேச ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளுங்கள் என நீதிமன்றம் கூறியும் அதைக்கூட சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு அனுப்பாதது ஏன். நீதி அமைச்சருக்கு அர்ஜுன் மகேந்திரனுடன் நெருக்கம் இல்லாமல் இருக்கலாம் ஆனால் இந்த நாட்டில் பலர் அவருடன் நெருக்கமான நட்பு வட்டாரத்தில் உள்ளனர். அவர்கள் மூலமாக நீதியமைச்சருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்க முடியும். ஆகவே அவ்வாறு செய்வது யார், யார் அர்ஜுன் மகேந்திரணை காப்பாற்ற முயற்சிப்பது என்ற காரணிகளை நீதியமைச்சர் சபையில் தெரிவிக்க வேண்டும். இன்று இலங்கையில் முக்கியமாக தேடப்படும் நபர்களின் முதலாவது நபர் அர்ஜுன் மகேந்திரன் என்பதை மறந்துவிட வேண்டாம் என்றார்.
-Vidivelli