நீர் வளத்தை பாதுகாக்க உறுதி பூணுவோம்

0 1,628

உலக நீர் தீனம் வருடாந்தம் மார்ச் மாதம் 22 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. 1992 ஆம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற சுற்றாடல் மற்றும் அபிவிருத்தி தொடர்பான ஐக்கிய நாடுகள் மாநாட்டில் செய்யப்பட்ட சிபாரிசையடுத்து மார்ச் 22 ஆம் திகதியை உலக நீர் தினமாக ஐ.நா.பொதுச் சபை பிரகடனம் செய்தது. அதைத் தொடர்ந்து கடந்த 26 வருடங்களாக இத்தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

நீர்வளத்தை மனிதன் தன் தேவைக்குத் திட்டமிட்டுப் பயன்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்துவதற்காகவே இத்தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. நீர் வளமானது சகல உயிரினங்களின் வாழ்க்கைக்கு அத்தியாவசியத் தேவையாகும். அதனை பயன்படுத்துவோர்களிடையே மேலும் மேலும் தேவைகள் அதிகரிப்பதனால் இன்று நீர் போட்டிப் பொருளாகவும், சந்தைப் பொருளாகவும் கூட மாறிவிட்டது.

பூமியின் நிலப்பரப்பில் 75 சதவீதம் இருப்பது நீர். எனினும் உலக சனத்தொகையின் ஒவ்வொரு நான்கு பேரிலும் மூவர் அருந்துவதற்கு தூய நீரின்றி அவதிப்படுகின்றனர். உலக நீர்ப்பரப்பில் 97.5 சதவீதம் உப்பு நீராகவும், 2.5 சதவீதம் நன்னீராகவும் உள்ளது. நன்னீர்ப் பரப்பிலும் 69 சதவீதம் பனிக்கட்டியால் மூடப்பட்ட பிரதேசமாகும். 30 சதவீதம் நிலக்கீழ் நீர். 3 சதவீதம் நன்னீர் ஏரிகளும், நதிகளும் எஞ்சிய பகுதி ஈரழிப்பு தரைப் பிரதேசங்களுமாகும்.

உலகளாவிய ரீதியில் பார்க்கும்போது நீரை அதிகமாகப் பயன்படுத்தும் துறை விவசாயமாகும். 85 சதவீதம் விவசாயத்துக்காக நீர் பயன்படுத்தப்படுகின்றது என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. கைத்தொழில்துறை 10 சதவீதத்தைப் பயன்படுத்துகின்றது. எஞ்சிய 5 சதவீதமே வீட்டுப் பாவனைக்குரியது. எனவே, அருமையாக உள்ள வளத்தை மக்கள் தற்போது எவ்வாறு பாவிக்கின்றார்கள் என்பதைப் பொறுத்தே எதிர்கால மக்களின் வாழ்வு அமையுமென குறிப்பிடப்படுகின்றது.

வருடாந்தம் சனத்தொகை 90 மில்லியனால் அதிகரித்துச் செல்கின்றது. அந்தளவு நீரைப் பயன்படுத்தும் மக்களும் அதிகரிக்கின்றனர். உலகில் பாதுகாப்பான நீரின்றி 8 செக்கன்களுக்கு ஒரு குழந்தை என்ற விகிதத்தில் மரணம் நிகழ்வதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு வருடமும் உலகில் ஒரு கோடியே 50 இலட்சம் குழந்தைகள் உயிரிழப்பதற்கு பாதுகாப்பற்ற குடிநீர் முதல் காரணமாக அமைகிறது.

நீர் தொடர்பான நோய்களினால் இறப்பவர்களின் எண்ணிக்கை வருடாந்தம் அதிகரித்துக் கொண்டே போகிறது. உலகில் மூவரில் ஒருவருக்குப் பாதுகாப்பான குடிநீர் உறுதி செய்யப்படவில்லை. நீர்ப் பற்றாக்குறையும், புவி வெப்பமயமாதலும் மனித குலம் இன்று எதிர்கொள்ள ஆரம்பித்திருக்கும் பேராபத்துக்களாகும்.

இவ்விரு பேராபத்துக்களையும் சமாளிப்பதற்கு உலக நாடுகள் தங்களை எந்தளவுக்கு உருப்படியான முறையில் தயார்படுத்தியிருக்கின்றன என்பதை நோக்கும்போது வேதனையே மிச்சமாகிறது. ஒரு குடம் நீர் வேண்டி மைல் கணக்கில் நடக்கும் மக்கள் உலகில் வாழ்கிறார்கள் என்பதை மறந்து நாம் பொறுப்புணர்வின்றி வாழக் கூடாது.

உலக நீர் தினம் நினைவு கூறப்பட்டால் மட்டும் போதாது. அதன் தாற்பரியம் பேணப்படல் வேண்டும். மனித வாழ்வோடும், சடங்கு சம்பிரதாயங்களோடும் பின்னிப் பிணைந்தது தண்ணீரின் வரலாறு. உலக முன்னேற்றத்துக்கேற்ப, சனத்தொகைப் பெருக்கத்துக்கேற்ப, தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப நீரின் தேவை நாளும் பொழுதும் அதிகரித்து வருகிறது. அதே வேளை தூய நீரின் எல்லை அருகி வருகிறது. நாம் நாமே நினைக்காத வரையில் நீர்ப்பற்றாக்குறை நீங்குவது சாத்தியமல்ல. நீரை வீணே விரயம் செய்வதும், எல்லையின்றி பயன்படுத்துவதும், நீர்ப்பற்றாக்குறை நிதமும் நிலவவே வழி செய்யும்.

எனவே, நீர் எங்கள் உயிருக்கு நேர் என்று நாம் கருதி செயல்பட வேண்டும். ஒவ்வொரு துளி நீரும் ஒவ்வொரு பவுண் தங்கம் என எண்ணி நாம் நடந்து கொள்ள வேண்டும். நீர் இன்றேல் பார் இல்லை என்று நாம் கருத வேண்டும். அனைத்து வளங்களுக்கும் தாய்வளம் தண்ணீர். ஊர் வளம் பெற, பார் வளம் பெற நீர் வளம் காப்போம் என இந்த தினத்தில் திட சங்கற்பம் பூணுவோம்.
-Vidivelli

 

Leave A Reply

Your email address will not be published.