- எம்.எப்.எம். இக்பால்
யாழ்ப்பாணம்
நீர் என்பது உயிரின் ஆதாரமாகும். அது இயற்கையின் கொடையாகும். நீர் இல்லையேல் மண் காய்ந்துவிடும். உணவு உற்பத்தி இருக்காது. மண்ணும் காற்றும்கூட நீரின்றேல் வறண்டு போய்விடும். ஆக, எல்லா இயற்கை வளங்களுக்கும் மனித வளத்திற்கும் தாய் வளம் நீராகும். நீர் பல வழிகளிலும் மனிதனுக்குப் பயன்படுகிறது. எமது உடலின் உள்ளேயும் அதிகளவு நீருள்ளது. குருதி, நிணநீர், பாய்பொருள் முதலியவற்றின் கூறாகவும் நீர் அமைந்துள்ளது.
முன்னைய காலங்களில் தூய நீருக்கான பற்றாக்குறை ஒரு போதும் இருந்ததில்லை. ஆனால் தூயநீரின் வளம் உலகில் மிக வேகமாகக் குறைந்துகொண்டு செல்வது அவதானிக்கப்பட்டு வருகிறது. இத்தகைய போக்கு கட்டுப்படுத்தப்படாது போகுமானால் எதிர்காலத்தில் விவசாயம் மற்றும் மனிதனின் தனிப்பட்ட பாவனைக்கான தூயநீருக்குப் பெரும் பற்றாக்குறை ஏற்படும் ஆபத்தேற்படலாம்.
புவியின் மேற்பரப்பில் பெரும்பகுதி நீரினால் மூடப்பட்டுள்ளது. கடல் உட்பட அனைத்து நீர் நிலைகளிலும் இருந்து நீர் ஆவியாகி மேலே சென்று முகிலாகி மழையாகப் பெய்து, மீண்டும் நிலத்தை வந்தடையும் செயற்பாடு தொடர்ச்சியாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. நீர் வட்டம் தொடர்ச்சியாக நடந்து கொண்டேயிருக்கிறது. நீர்க்கோளத்தை விட்டு நீர் எங்குமே சென்று விடுவதில்லை. அவ்வாறிருக்கையில் உலகம் தூய நீருக்கான பற்றாக்குறையை எதிர்நோக்குவது ஏன்?
மனிதனின் செயற்பாடுகளே இந்த ஆபத்துக்குக் காரணமென நீரியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். காடுகள் மெருமளவில் அழிக்கப்படுதல், நீர் மாசடைதல், நீரின் அதிகரித்த பாவனை ஆகியனவே தூய நீருக்கான பற்றாக்குறை அதிகரிக்கக் காரணமென அவர்கள் தெரிவிக்கின்றனர்.
மனித செயற்பாடுகளின் விளைவினால் புவி உஷ்ணமடைந்து செல்வதால் பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயருகிறது. இதனால் கடல்நீர் புவியினுள் பிரவேசிப்பதன் விளைவாக தூயநீரின் விகிதம் குறைந்து கொண்டே செல்கிறது. இது போதாதென்று மறுபுறத்தில் இரசாயனப் பதார்த்தங்களின் பாவனையினால் தூயநீர் படிப்படியாக மாசடைந்து செல்கிறது.
உலகில் 70 வீத பரப்பளவு நீர் இருந்தாலும் அதில் 97.5 வீதம் கடலில் இருக்கும் உவர் நீர்தான். மீதி 2.5 வீத அளவுக்குத்தான் நிலத்தடி நீர் உள்ளது. இதிலும் 2.24 வீதம் துருவப் பகுதிகளில் பனிப்பாறைகளாகவும் பனித்தரையாகவும் மாறிப் போயுள்ளது. எஞ்சிய 0.26 வீத நீரைத்தான் உலக மக்களனைவரும் பகிர வேண்டும். அண்மைய புள்ளி விபரங்களின்படி உலகளவில் 250 கோடி மக்கள் போதியளவு சுத்தமான நீரை அல்லது நீர் வளத்தை அனுபவிக்க முடியாத நிலையிலுள்ளனர். அவர்களில் 70 சதவீதத்தினர் ஆசிய நாடுகளிலேயே உள்ளனர். ஒவ்வோர் ஆண்டும் நீர் மாசடைதலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை போர் மற்றும் வன்முறைகளால் இறந்தோரின் எண்ணிக்கையை விட அதிகமாகும் என்று குறிப்பிடப்படுகின்றது.
குடிசனப் பெருக்கம், கைத்தொழில் அபிவிருத்தி, விவசாய விரிவாக்கம் முதலியவற்றின் வளர்ச்சி வேகம் நீரின் தேவையை அதிகரிக்கச் செய்துள்ளது. அதனால் தான் சுற்றுச்சூழல் வல்லுநர்கள் ‘மூன்றாம் உலகப் போர் ஒன்று நடந்தால்,அது நீருக்கான ஒரு போராகவே இருக்கும் அன்றி வேறு எதற்காகவும் அல்ல” என்று கடந்த 20 வருடங்களாக எச்சரிக்கின்றனர். இதற்கான அறிகுறிகள் இன்று பெரியளவில் காணப்படுகின்றன.
1993ஆம் ஆண்டு முதல் மார்ச் மாதம் 22ஆம் திகதியை உலக நீர்வள தினமாக அறிவிக்கப்பட்டு இன்றுவரை கொண்டாடித்தான் வருகிறோம். ஆனால் ஒவ்வோர் ஆண்டும் உலகின் பல கோடி மக்கள் தண்ணீரின்றி திண்டாடி வரும் நிலையும் எந்த வகையிலும் அகலவில்லை.
ஐ.நா. சபை கடந்த 1992ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி குறித்த கூட்டத்தை கூட்டியது. கூட்டத்தில், நீர்வள பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும், அதை மக்களிடம் உணர்த்த ‘உலக நீர்வள தினம்’ கொண்டாடப்பட வேண்டுமென்றும் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, ஆண்டுதோறும் மார்ச் 22ஆம் திகதி உலக நீர்வள தினம் சர்வதேச அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.
மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டேயிருக்க அவர்கட்குத் தேவையான குடிநீர் தேவையும் அதிகரிக்கிறது. வருடாந்தம் சனத்தொகை 90 மில்லியனால் அதிகரித்து செல்கின்றது. தேவையைப் பூர்த்திசெய்ய இயலாத நிலையில் கிடைக்கும் நீரைக் குடிக்கும் நிலைக்கு பல பிரதேச மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் பலவித நோய்கட்கு ஆளாகின்றனர்.
மனிதனுக்கான நீரை வழங்கும் ஜீவநதிகள் பல இருந்தும் பயன்படுத்த முடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம். இவ்வாறான செயற்பாடுகளால் நீரின் தேவைகளைப் பூர்த்திசெய்ய முடியாமல் இன்று வளர்முக நாடுகளில் 80 சதவீதமானோர் நீர் சார்ந்த நோய்களால் பலியாகின்றனர். சுத்தமான நீரைப் பெறமுடியாமல் வருடாந்தம் 5 வயதிற்கு உட்பட்ட 18 இலட்சம் சிறுவர்கள் பலியாகிறார்கள். அசுத்தமான நீரால் ஏற்படும் நோய்களான வயிற்றுப்போக்கு, வாந்திபேதியால் வருடத்துக்கு 22 இலட்சம் பேர் வரை இறப்பதாகக் கூறியுள்ளார்கள். அசுத்தமான நீர் இவ்வாறு மக்களைப் பலியாக்குகிறது.
நீரில் பக்றீரியாக்கள் இருப்பதால் டயரியா, தைபோய்ட், கொலரா, மஞ்சள் காமாலை, போலியோ, குடற் புழுக்கள் போன்ற நோய்கள் வரும் என்பதை நாங்கள் எல்லோரும் அறிந்திருக்கிறோம். ஆயினும் எத்தனை பேர் இதனை சரியாகக் கடைப்பிடிக்கிறோம்?
நீருக்கான நெருக்கடியில் மனித நடவடிக்கைகளும் அடங்கியுள்ளன. இவற்றை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை நாம் கைக்கொண்டு வந்தால் உலகமும் உயிர்களும் வாழும். மனிதர்களுக்கும் ஏனைய ஜீவராசிகளுக்கும் உயிர் வாழ்வதற்கு சுத்தமான நீர் மிகவும் அவசியம் என சிறுவயது முதலே படித்து வருகிறோம். நாம் பருகுவது சுத்தமான நீராக இருக்க வேண்டும். நன்கு கொதிக்க வைத்து ஆற வைத்து எடுத்த நீர் அல்லது பில்டரில் வடிகட்டிய நீர் குடிப்பதற்கு ஏற்றது.
குடிநீருக்காக பல மைல் தூரம் குடத்துடன் நடந்து செல்லும் சனங்கள் எத்தனையோ பேர் கிராமங்களில் இருப்பதை இன்றும் காண்கிறோம்.
தொழிற்சாலைகள் தமது கழிவுகளை ஆறுகள், குளங்களில் கொட்டுவதால் இரசாயன மாற்றமேற்பட்டு நீரின் தன்மை மாற்றமடைகிறது. இதனால் பயன்பாட்டுக்கு உகந்த நிலையை நீர் இழக்கின்றது. நீர் வளப் பாதுகாப்பை வலுப்படுத்தவும் அதை மக்களிடம் உணர்த்தவுமென ‘உலக நீர்வள தினம்’ அனுஷ்டிக்கப்பட வேண்டும் என்ற ஐ.நா. சபையின் தீர்மானத்துக்கமைய 1993 முதல் ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 22 இல் ‘உலக நீர்வள தினம்’ அனுஷ்டிக்கப்படுகின்றது.
நிலத்தடி நீரைப் பாதுகாக்க வேண்டியதும் நீர் ஆதாரங்களைக் காக்க வேண்டியதும் மனித சமுதாயத்தின் தார்மீகக் கடமையாகும்.
குடிசனப் பெருக்கம், கைத்தொழில் அபிவிருத்தி, விவசாய விரிவாக்கம் முதலியவற்றின் வளர்ச்சி வேகம் நீரின் தேவையை அதிகரிக்கச் செய்துள்ளது. அதனால் தான் சுற்றுச்சூழல் வல்லுநர்கள் ‘மூன்றாம் உலகப் போர் ஒன்று நடந்தால், அது தண்ணீருக்கான போராக இருக்கும்’ என்று எச்சரிக்கின்றனர். இப்போது, உலகில் உள்ள 80 நாடுகளில் 40 சதவீத மக்கள் சரிவர தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். 110 கோடி மக்கள் நீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் வாழ்கின்றனர். இப்படியே போனால், இன்னும் சில நூற்றாண்டுகளில் உலகமே பாலைவனமாக மாறிவிடும்.
குடிநீர் மாசுபடுவதாலும், வறட்சியாலும் எதிர்காலத்தில் உலகம் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது. எனவே, எதிர்காலத்தில் தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு சந்திரன், செவ்வாய் கிரகத்தில் மனிதன் உயிர் வாழ முடியுமா? தண்ணீர் உள்ளதா? என்று விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.
நீர் பெறுவதற்கு முக்கிய காரணம் மழை. மழை வருவதற்கு முக்கிய காரணம் மரம். நாம் காடை வெட்டி நகரமய படுத்துவதால் எமக்குத்தான் தீமை என்பதை யாரும் புரிந்து கொள்வது கிடையாது. காடு வளர்ப்போம் நீர் காப்போம். எம் உயிர் காப்போம், எம் அடுத்த சந்ததியினர் வாழ வழி சமைப்போம்.
-Vidivelli