- எம்.எம்.ஏ ஸமட்
உலகளவில் இஸ்லாம் அல்லது முஸ்லிம்கள் தொடர்பிலான அச்சம், வெறுப்பு, பாரபட்சம் அதிகரித்து வருவதை உலகளாவிய ரீதியில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகள் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.
இஸ்லாமிய பெயர் தாங்கியவர்களினால் உலகளவில் முன்னெடுக்கப்படுகின்ற வெறுக்கத்தக்க நடவடிக்கைகள் மற்றும் இஸ்லாத்தினதும், முஸ்லிம்களினதும் வளர்ச்சி மீதான காழ்ப்புணர்ச்சி என்பன இந்த ‘இஸ்லாமோ போபியா’ இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பாக பிற சமூகங்களின் மத்தியில் உருவாகியிருக்கின்ற சமூக அச்சத்திற்குக் காரணமாக அமைவதாகக் கருதப்படுகிறது.
இஸ்லாம் தொடர்பான சமூக அச்சம் (இஸ்லாமோ போபியா) என்ற புதிய சொற்பிரயோகம் 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் உருவானது. 1970களில் உருவான இந்தப் புதிய சொற்பதம் 1980 மற்றும் 1990களில் முக்கியத்துவமிக்கதாக மாறியது. ஏக காலத்தில் பிரித்தானியாவில் உருவாக்கப்பட்ட ‘ரெனிமேட் ட்ரஸ்ட் கொமிஷன்’ அறிக்கையின் மூலம் இஸ்லாமோ போபியா என்ற சொல் பிரசித்திபெற்றதுடன் அகராதிகளிலும் இடம்பெற்றது.
அழகுத் தேசமான இலங்கையில் 2018 மார்ச்சில் அம்பாறையிலும், கண்டியிலும், திகனயிலும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் முதல் அமைதித் தேசமான நியூஸிலாந்தின் கிறிஸ்சர்ச் நகரிலுள்ள இரு பள்ளிவாசல்களில் ஜும்ஆ தொழுகைக்காக வந்திருந்த அப்பாவி முஸ்லிம்கள் மீது கடந்த வெள்ளிக்கிழமை அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரெண்டன் ஹரிசன் டரன்ட் என்ற வலதுசாரி தீவிரவாதி மேற்கொண்ட தாக்குதல் வரை முஸ்லிம்கள் மீதான வெறுப்புணர்வின் வெளிப்பாடு என்பதை மதங்களையும், மனிதர்களையும் நேசிக்கின்ற மனிதாபிமானமுள்ளவர்களின் கண்டனங்கள் வெளிப்படுத்தியிருக்கின்றன.
இஸ்லாமோ போபியாவும் முதன்மைக் காரணியும்
இஸ்லாமோ போபியா, முஸ்லிம் போபியா என்பவற்றுக்கு பிரதான காரணியென்றால் அது இஸ்லாத்தினதும் முஸ்லிம்களினதும் பெரு வளர்ச்சி என்பதை மறுக்கமுடியாது. இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அழிப்பதற்கு எத்தகைய திட்டங்களை வகுத்து செயற்படுகின்றபோதிலும் இஸ்லாம் வளர்ந்து கொண்டிருக்கிறது என்பது இஸ்லாமிய போபியாவிற்கு உட்பட்டவர்களினால் ஜீரணிக்க முடியாமல் இருக்கிறது. இதனை நியூஸிலாந்துத் தாக்குதலும் தாக்குதல் பயங்கரவாதி வெளியிட்ட கருத்துக்களும் புடம்போட்டிருக்கின்றன. ‘நரகத்திற்கு அகதிகளை வரவேற்கின்றேன்’ என அப்பயங்கரவாதி அவனது துப்பாக்கியில் எழுதி வைத்ததன் மூலம் அகதிகளினாலும் ஐரோப்பிய நாடுகளில் முஸ்லிம்கள் பெருகி வளர்ச்சியடைகிறார்கள் என்பதை புலப்படுத்தியிருக்கிறது.
உலகின் 7.6 பில்லியன் மக்கள் தொகையில் பின்பற்றப்படுகின்ற மதங்களின் வரிசை நிலையில் அதிகளவிலான மக்கள் பின்பற்றுகின்ற இரண்டாவது மார்க்கமாக இஸ்லாம் உள்ளது. 2017ஆம் ஆண்டின் உலக சனத்தொகை புள்ளிவிபரங்களின் பிரகாரம் உலகில் 1.8 பில்லியன் முஸ்லிம்கள் உள்ளனர். உலக சனத்தொகையில் 25 வீதத்தினை முஸ்லிம்கள் கொண்டுள்ளனர். அதிகளவிலான முஸ்லிம்கள் மத்தியகிழக்கு, வட ஆபிரிக்க, ஆசிய நாடுகளில் வாழ்கின்றனர். ஏறக்குறைய 50 நாடுகளில் முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக வாழ்கின்றனர். முஸ்லிம்களின் எண்ணிக்கையில் 62 வீதமானோர் தெற்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் வாழ்வதாக அப்புள்ளிவிபர அறிக்கை குறிப்பிடுகிறது.
இதில் ஐரோப்பிய நாடுகளின் மொத்த சனத் தொகையில் 4.9 வீதத்தை முஸ்லிம்கள் கொண்டுள்ளனர். சைபிரஸில் 25.4 வீதமும் பிரான்ஸில் 8.8 வீதமும், சுவீடனில் 8.1 வீதமும், பெல்ஜியத்தில் 7.6 வீதமும், நெதர்லாந்தில் 7.1 வீதமும், பிரித்தானிய ஐக்கிய இராஜ்யத்தில் 6.3 வீதமும் என ஐரோப்பிய நாடுகளில் முஸ்லிம்கள் வாழும் நிலையில் நியூஸிலாந்தின் மொத்த சனத்தொகையில் ஒரு வீதமே முஸ்லிம்கள் வாழ்கிறார்கள்.
இருப்பினும், முஸ்லிம்கள் அமெரிக்காவில் 3.45 மில்லியனாகவும் அமெரிக்காவின் முழு சனத்தொகை வளர்ச்சியில் முஸ்லிம்கள் 1.1 வீதம் பங்களிப்பு செய்வதான அண்மைய தரவுகளுடன் 2050ஆம் ஆண்டளவில் உலக முஸ்லிம்களின் எண்ணிக்கை 2.8 பில்லியனாகக் காணப்படுமென குறிப்பிடப்படுகிறது.
இஸ்லாத்தின் வளர்ச்சி வேகத்தையும், முஸ்லிம்களினதும் சனத்தொகை உள்ளிட்ட அனைத்து முன்னேற்றங்களையும்; சகித்துக்கொள்ள இயலாத நிலையில், அவற்றை அழித்தொழிக்கும் சதித்திட்டத்தின் கீழ் மேற்குல இஸ்லாமிய எதிர்ப்பாளர்களின் முயற்சியே நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் தினமும் அழிக்கப்படுவதும் முஸ்லிம்களின் பல கோடி பெறுமதியான சொத்து செல்வங்கள் அழிந்துள்ளமையுமாகும். வல்லரசுகளுக்கு சமாந்திரமாக வளர்ச்சிகண்ட ஈராக், லிபியா போன்ற நாடுகளில் பொய்க்காரணங்கள் சோடிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல், அழிப்பு நடவடிக்கைகள் இவற்றிற்கு சான்றாகும்.
முஸ்லிம்கள் தொடர்பான அநாவசியப் பயம் கொண்டவர்களினால் இஸ்லாம், தீவிரவாதப் போக்குக் கொண்டது என முழு உலகையும் நம்பவைக்கும் வகையில் அதற்கான ஒழுங்கமைக்கப்பட்ட செயற்றிட்டங்களும் பிரசாரங்களும் அன்று முதல் இன்றுவரை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்காகப் பல முகவர்கள் உலகளாவிய ரீதியில் செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கான சகல உதவிகளும் நேரடியாகவும் மறைமுகமாகவும் இத்தகையவர்களினால் வழங்கப்பட்டு வருகின்றன.
இஸ்லாம் தொடர்பாக மேற்குலகின் பயம் உலகின் பல நாடுகளுக்கும் வியாபித்துள்ள நிலையில், இதனால், அரபுலக முஸ்லிம்கள் மாத்திரமல்ல ஆசிய, தென்கிழக்காசிய நாடுகளிலுள்ள முஸ்லிம்களும் தத்தமது நாடுகளில் நெருக்குதல்களையும், தாக்குல்களையும் சந்திக்க வேண்டியவர்களாக உள்ளனர்.
அரபுலக நாடுகளில் அல்லது உலகளாவிய நாடுகளில் வாழும் முஸ்லிம்கள் தங்களுக்குள் காணப்படும் முரண்பாடுகளைத் தீர்த்துக்கொள்வதற்காக மேற்கொள்கின்ற கருத்தாடல்களை, செயற்பாடுகளை சாதகமாக்கி, அக்கருத்தாடல்களுக்கும் செயற்பாடுகளுக்கும் உதவிக்கரம் நீட்டுவதான மாயையை ஏற்படுத்தி, அம்மாயையின் பிடிக்குள் அவர்களைச் சிக்கவைத்து, அவர்களுக்கிடையில் பிரிவினைகளை ஊக்கப்படுத்தி, இயக்கங்களாகவும், அமைப்புக்களாகவும் உருவாக்கி, ஒட்டுமொத்த உலக முஸ்லிம்களையும் அழிவின் விளிம்புக்கு மேற்குல இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் இட்டுச் சென்றுள்ளனர்.
இதனை சிரியாவிலும், ஈராக்கிலும், யெமனிலும் இன்னும் சில நாடுகளிலும் வெவ்வேறு பெயர்களில் இயங்குகின்ற அமைப்புக்களுக்கிடையிலும் அந்நாட்டு அரசுகளுக்கும் இயக்கங்களுக்கிடையிலும் அமெரிக்க, ரஷ்யா உட்பட மேற்குலக நாடுகளின் ஒத்துழைப்புடன் நடந்தேறுகின்ற கோர யுத்தங்களையும் அதன் அழிவுகளையும் சுட்டிக்காட்ட முடியும்.
இஸ்லாமியர்களைக் கொண்டே இஸ்லாத்தையும், இஸ்லாமியர்களையும் கேவலப்படுத்துவதற்காகவும் அழிப்பதற்காகவும் இடம்பெறும் நிகழ்வுகளை தங்களது ஆளுகைகளுக்குட்பட்ட ஊடகங்கள் வாயிலாகக் காட்சிப்படுத்தி உலகை நம்பவைக்கும் செயற்பாடுகளுக்கு மத்தியில் மாற்றுமதத்தினரைக் கொண்டும் முஸ்லிம்களைக் கொன்றழிக்கும் செயற்பாடுகளும் இடம்பெறுவதை நியூஸிலாந்து பள்ளிவாசல் தாக்குதல்கள் ஒப்புவித்திருக்கின்றன. இதன் ஆரம்பம் 2001 இல் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டது என்பதை தற்போது நினைவுபடுத்த வேண்டியுள்ளது.
சர்வதேச அளவில் முஸ்லிம்கள் தொடர்பான அச்சம், வெறுப்புணர்வு, பாரபட்சம் என்பவற்றை உருவாக்குவதற்காகவும், தனிநபர் இலாபமடைவதற்காகவும் 2001ஆம் ஆண்டு நன்கு திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதல்தான் இஸ்லாமோ போபியாவை உலகளவில் உருவாக்கியது
2001ஆம் நூற்றாண்டில் முஸ்லிம் விரோத சக்திகள் மேற்கொண்ட அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலின் பின்னணி வெளிச்சத்திற்கு வந்த போதிலும் முஸ்லிம்கள் தொடர்பான அச்சம், வெறுப்புணர்வு, பாரபட்சம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. முஸ்லிம்கள் தொடர்பான ஏனைய சமூகப் பதற்றம் வளர்ந்து கொண்டே செல்கிறது.
இஸ்லாமோ போபியா அதிகரிப்பின் பின்னணி
அமைதியையும், சமாதானத்தையும், விட்டுக்கொடுப்பையும், மனித சகோதரத்துவத்தையும் நிலைநிறுத்தி வழிகாட்டும் இஸ்லாம் அடிப்படைவாதத்தையும், தீவிரவாதத்தையும், பயங்கரவாதத்தையும் ஊக்குவிப்பதாகவும், இஸ்லாத்தைப் பின்பற்றுகின்ற முஸ்லிம்கள் அடிப்படைவாதிகளாகவும், தீவிரவாதிகளாகவும், பயங்கரவாதிகளாகவும் செயற்படுகிறார்கள் எனவும் சித்திரிப்பதற்கான முயற்சிகளில் ஒன்றுதான் 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் திகதி அமெரிக்காவின் தலைநகர் நியூயோர்க்கில் இடம்பெற்ற இரட்டைக்கோபுர வர்த்தகக் கட்டிடத் தொகுதி தாக்குதல்களாகும்.
இத்தாக்குதலின் பின்னணியில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டப்ளியு புஷ் இருந்திருக்கிறார். இத்தாக்குதலும் அதனால் அவர் அடைந்த இலாபமும் என்ன என்பதெல்லாம் நீண்ட நெடிய கதையாக தற்போது வெளிவந்து முடிந்த நிலையில், அன்று இத்தாக்குதல் அமெரிக்காவில் வாழ்கின்ற முஸ்லிம்களின் மீது மாத்திரமல்ல முழு உலகிலும் வாழும் முஸ்லிம்கள் தொடர்பில் மேற்குலக சமூக அச்சத்தையும், வெறுப்புணர்வையும், பாரபட்சத்தையும் அதிகரிக்கச் செய்தன.
இத்தாக்குதல் சம்பவமானது உலகளவில் முஸ்லிம்களுக்கெதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்னெடுக்கப்பட்ட நாடகமென்றே கூறப்படுகிறது. இந்த நாடகத்தின் வில்லனாக காட்டப்பட்டவர்தான் ஒசாமா பின்லேடன். ஓசாமா பின்லேடன் விமானங்களைப் பயன்படுத்தி இத்தாக்குதல்களை மேற்கொண்டார் என்பதை நிரூபிப்பதற்கும், அவரைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சிகளுக்காகவும் அமெரிக்காவும் அதன் நேசநாடுகளும் கோடிக்கணக்கான டொலர்களைச் செலவழித்து ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை பலிகொண்டிருக்கிறது. ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் மேற்கொண்ட தாக்குதல்களும், அழிவுகளும் இதன் வெளிப்பாடுகள்தான்.
இருந்தும். விமானங்கள் மோதி இவ்விரு கட்டடங்களும் தரைமட்டமாகவில்லை. அவை திட்டமிட்டு தரைமட்டமாக்கப்பட்டு இத்தாக்குதல் பழியை இஸ்லாத்தை ஏற்றுவாழும் ஒரு குழு அல்லது ஒரு தனிநபர் மீது சுமத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட சதித்திட்டமென்பதை சமூக நெருக்கடிகளை ஆராயும் ஆய்வாளர்கள் மிகத் துல்லியமாகவும் அறிவுபூர்வமாகவும் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.
அதாவது, விமானங்கள் அலுமினியத் தகரங்களால் தயாரிக்கப்பட்ட தொன்று. இவ்வாறு அலுமினியத் தகரங்களால் தயாரிக்கப்பட்ட விமானத்தினால் சுத்திகரிக்கப்பட்ட இரும்பால் கட்டப்பட்ட கட்டிடத்தை இடிப்பதற்கு வாய்ப்பில்லை. ஏனெனில், ஒரு விமானம் ஒரு மரத்தில் மோதினால் கூட விமானம் சேதமடையுமே தவிர மரம் பெரிதாக சேதமடைவதில்லை. ஆதலால், இக்கட்டடமானது திட்டமிடப்பட்டு இடிக்கப்பட்டது. இக்கட்டட இடிப்பின் பின்னணியில் பலர் இருந்தும் இதில் முக்கிய பங்கு வகித்திருப்பவர்கள் இஸ்ரேலியர்கள்தான் என்பதை அந்த ஆய்வாளர்கள் ஆதாரபூர்வமாக குறிப்பிட்டிருப்பதை சுட்டிக்காட்ட வேண்டும்.
இஸ்ரேலியர்களினதும், முஸ்லிம் விரோத எதிர்ப்பாளர்களினதும் முஸ்லிம்களுக்கெதிரான செயற்பாடுகள் இன்று நேற்று தொடங்கியதல்ல. இஸ்லாம் என்று இவ்வுலகில் வளர்ச்சியடையத் தொடங்கியதோ அன்றிலிருந்து இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் அழிக்க அவர்கள் மிகக் கச்சிதமான இரகசியத் திட்டங்கள் மற்றும் பொறி முறைமைகளினூடாக அவற்றை முன்னெடுத்து வருகின்றனர். இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் வளரவிடக் கூடாதென்பதே இதன் மறுபக்கமாகவுள்ளது.
முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொண்டு வருகின்ற சதித் திட்டங்களினூடாக முஸ்லிம் நாடுகளை அரசியல் ரீதியாக அடிமைப்படுத்தவும், பொருளாதார ரீதியாக முஸ்லிம் நாடுகளின் வளங்களைச் சுரண்டவும், இன்னும், கல்வி, கலாசார, மொழி, ரீதியாக அடிமைப்படுத்தி இஸ்லாமியப் பாரம்பரியங்களிலிருந்து அந்நியப்படுத்துவும் முயற்சிக்கிறார்கள். அவர்கள் மேற்கொண்டுள்ள முயற்சிகள் அவர்களுக்கு பொதுவாக வெற்றியளித்திருக்கின்றன.
முஸ்லிம் நாடுகளிலும், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளிலும் இடம்பெற்று வருகின்ற வன்முறைகளும், யுத்த அழிவுகளும், சவூதி அரேபியா உள்ளிட்ட அரபுலகில் இடம்பெற்று வருகின்ற கலாசார மாற்றங்களும் இவற்றை உண்மைப்படுத்திக் கொண்டிருக்கின்ற சூழலில், நியூஸிலாந்து தாக்குதல்களின் பின்னர் உலக அரங்கில் இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதான வெறுப்புணர்வுக்கும் எதிர்ப்புக்களும் கிளம்பியிருக்கின்றன. இத்தாக்குதலை நியூஸிலாந்து பிரதமர் முதல் அந்நாட்டு மக்கள் வரை கண்டிருத்திருப்பதுடன் பிரதமர் முதற்கொண்டு நாட்டு மக்கள் வரை பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பிலும் உயிரிழந்தவர்களுக்காகவும் மேற்கொண்ட மனிதாபிமான நடவடிக்கைகள் இத்தாக்குதல்களின் வெறுப்பை காட்டியிருப்பதுடன் இஸ்லாத்தின் மீதாக கௌரவத்தையும் புடம்போட்டிருக்கிறது.
வெறுப்புணர்வுக்கான எதிர்ப்புக்கள்
இஸ்லாமிய தீவிரவாதிகளாகவும், பயங்கரவாதிகளாகவும், முஸ்லிம் வன்முறையாளர்களாகவும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளாகவும் முஸ்லிம்களை ஊடகப் பயங்கரவாதம் புடம்போட்டுக்கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் நியூஸிலாந்தின் இரு பள்ளிவாசல்களிலும் பாலகர் முதல் முதியவர் வரை 60 அப்பாவி முஸ்லிம்களைக் கொண்டு குவித்த பிரெண்டன் ஹரிசன் டரன்டை அவன் பின்பற்றுகின்ற மதத்தைக் கொண்டு தீவிரவாதியாகவும், பயங்கரவாதியாகவும், அடிப்படைவாதியாகவும் உலகிற்குக் காட்டுவதற்கு ஊடகங்கள் முன்வரவில்லை. இருந்தபோதிலும் அவுஸ்திரேலியாவின் பிரதமர் ஸ்காட் மெரிசன் பிரெண்டன் ஒரு வலதுசாரித் தீவிரவாதி என வர்ணித்துள்ளார்.
இந்நிலையில், அவுஸ்திரேலியாவின் செனட்சபை உறுப்பினரான கிரேஸர் அன்னிங் பேசிய வெறுப்பு பேச்சைச் சகித்துக்கொள்ள முடியாத 17 வயது சிறுவன், முட்டையால் அவரது மொட்டைத் தலையில் அடித்ததன் மூலம் வெறுப்புணர்வினால் எல்லா மக்களையும் மயக்கி முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட செய்ய முடியாது என்பதை வெளிப்படுத்தி நிற்கிறது. இவரது பேச்சுக்கு எதிராக தற்போது சமூக வலைத்தளங்களில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் அவுஸ்திரேலிய பிரதமரும் இப்பேச்சைக் கண்டித்திருப்பதுடன், வெறுப்புப் பேச்சுக்கள் பேசுவதை உலகம் நிறுத்த வேண்டுமென துருக்கி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இச்சூழலில்தான், வெறுப்புப் பேச்சைத் தடை செய்யக்கூடிய சட்ட ஏற்பாடுகள் இன்னும் இலங்கையில் மேற்கொள்ளப்படவில்லையென அண்மையில் அமைச்சர் ஹக்கீம் சுவிட்சர்லாந்துத் தூதுவரிடம் தெரிவித்திருந்தார். தற்போது இக்கருத்துத் தொடர்பில் வாதப்பிரதிவாதங்கள் எழ ஆரம்பித்திருக்கின்றன. பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக் ஷ கடந்த செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் இது தொடர்பான வாதப்பிரதிவாதங்களை முன்வைத்து பேசியதைக் காணமுடிந்தது.
இந்நிலையில், உள்நாட்டிலும் சர்வதேச அரங்கிலும் முஸ்லிம்கள் தொடர்பாக ஏற்பட்டுள்ள ‘இஸ்லாமோ போபியா’ என்ற இந்நோயைச் சுகப்படுத்த வேண்டுமாயின் முஸ்லிம்கள் முன்மாதிரி சமூகமாக செயற்பட வேண்டியுள்ளது. ஆனால், தற்கால முஸ்லிம்களின் செயற்பாடுகள் முன்மாதிரி சமூகம் என்ற நிலைப்பாட்டிலிருந்து பின்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அதனால், முஸ்லிம்கள் மீதான வெறுப்புணர்வும், பாரபட்சமும் அதிகரித்துக் கொண்டுதான் செல்கிறது. முஸ்லிம்கள் தங்களை முன்மாதிரி சமூகமாக மாற்றிகொள்ளாத வரை இந்நிலை தொடரத்தான் செய்யும். ஏனெனில், அல்குர்ஆன் கூறுகிறது. “ஒரு சமூகம் தன்னை மாற்றிக் கொள்ளாத வரை அச்சமூகத்தை இறைவனும் மாற்றமாட்டான்”.
-Vidivelli